Friday, April 23, 2010

அலமாரியில் அடுக்கப்பட்ட உயிர்த்துடிப்பு - உலக புத்தக தினம்

மனித வரலாற்றில் மூன்று நிகழ்வுகள் மிக முக்கியமான வை. ஒன்று ஒலிக்குறிப்புக ளின் ஒருங்கிணைப்பில் சொற் களாகவும் வாக்கியங்களாகவும் உருவெடுத்த மொழியின் பரி ணாமம். இரண்டு, அதே ஒலிக் குறிப்புகள் புள்ளிகளாகவும் கோடுகளாகவும் உருவெடுத்த எழுத்தின் பிறப்பு. மூன்று, அந்த எழுத்துக்களின் பதிவாக வந்த புத்தகத்தின் வருகை. இந்த மூன்றிற்கும் அடியிழையாக ஓடுவது கதை சொல்வதிலும் கதை கேட்பதிலும் மனிதர்களுக்கு உள்ள ஈடுபாடு.

கதை சொல்லிகள் இல்லாமல் போயிருந்தால் நம் கடந்த காலங்கள் தெரியா மலே போயிருக்கும், வருங்காலத்திற்கான கனவுகளுக்கு விதை ஊன்றப்படாமலே போயிருக்கும். இன்றைய நிகழ்காலத் தையும் உருவாக்கிக்கொடுத்த அந்தக் கதை சொல்லும் மரபுக்கும், வரலாற்றுப் பதிவுகளுக்கும், கலை, அறிவியல், அரசியல் அனைத்திற்குமே செலுத்து வாகன மாக வந்ததுதான் புத்தகம்.

புத்தகங்கள் நம்மை இயல்பாகவே படிப்பாளிகளாகவும் மாற்றுகின்றன. நிலத்தின் எல்லைகளோ, காலத்தின் வரம்புகளோ இல்லாமல் புத்தகங்கள் தருகிற ஆதாயங்களுக்கு அளவே இல்லை. வெவ்வேறு வரலாறுகளுக்கும், வெவ் வேறு பண்பாடுகளுக்கும் நம்மை இட்டுச் செல்லக்கூடியவை புத்தகங்களே. நம் தொன்மைகளோடு நம்மை அடையாளப் படுத்திக் காட்டுபவை புத்தகங்களே. இலக்கிய இன்பங்களை வழங்கி வாழ்க்கை நுட்பங்களையும் புத்தகங்கள்தான் நமக்குக் கற்றுத் தருகின்றன. தொலைக் காட்சி, இணையம் போன்ற ஊடகங்கள் எதையும் காட்சிப்படுத்தி கண் முன் நிறுத்துகின்றன என்பதில் ஐயமில்லை. ஆயினும் புத்தகங்களின் வரிகளினூடே கிடைக் கிற உணர்வு அனுபவம் ஈடு இணையற்றது. ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்த வல்லது.

உலகத்திற்கு விளக்கம் அளிப்பதற்காக அல்லாமல், உலகத்தை மாற்றியமைப்பதற்காக கார்ல் மார்க்ஸ் வழங்கிய மூலதனம் உள்ளிட்ட அனைத்துப் படைப்புகளுக்கும் அவர் படித்த புத்தகங்கள்தான் ஆதாரமாய் அமைந்தன.. இங்கே சிங்கார வேலரும், பெரியாரும் தங்கள் இயக்கங்களை முனைப்புடன் மேற்கொள்ள வழிகோலிய தும் அவர்கள் படித்த புத்தகங்கள்தான். புத்தகங்களின் சிறப்பு பற்றி இதற்கு மேல் சொல்லவேண்டுமா என்ன?

“புத்தகங்கள் உயிரற்ற காகிதங்களின் குவியல் அல்ல; மாறாக அவை அலமாரிகளில் உயிரோடு இருக்கும் மனித மனங்கள்,” என்று கூறினார் அமெரிக்க எழுத்தாளர் கில்பர்ட் ஹையாட். காகிதத் தொகுப் பில் குடியிருக்கும் மனங்களைக் கொண்டாடுகிற நாள்தான் ஏப்ரல் 23. உலக இலக்கியத் தளத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நாள் இது. நாடக மேதை சேக்ஸ்பியர் பிறந்தநாளும் இறந்தநாளும் இதுதான். அவர் மறைந்த அதே 1616ம் ஆண்டில் அதே ஏப்ரல் 23ல், ஸ்பெயின் நாட்டு நாவலாசி ரியர் கவிஞர் மிகுல் டீ செர்வான்டீஸ் கால மானார். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாரிஸ் ட்ரூவான், ஹால்டர் லாக்ஸ்னெஸ், விளாதிமீர் நோபோகோவ், ஜோசப் பிளா, மெஜியா வாலேஜோ போன்ற சில படைப் பாளிகள் நினைவுகூரப்படுவதும் இதே நாளில்தான்.

இலக்கியத்தளத்தில் சமுதாய முன்னேற்றத்திற்கும் மக்கள் நல்லிணக்கத்திற்கும் வழியமைத்த இவர்களுக்கும், இவர்களைப் போன்றே உலகளாவிய நட்புப்பாலம் அமைக்க உதவிய இதர படைப்பாளிகளுக்கும் உலகந்தழுவிய அளவில் மரியாதை செலுத்த முடிவு செய்யப்பட்டது. புத்தக வாசிப்பு என்பதை விட வேறு மரியாதை என்ன இருக்க முடியும்? புத்தக வாசிப்பின் இனிய அனுபவத்தையும், ஆழ்ந்த தாக்கத்தையும் பற்றிய விழிப்புணர்வையும், ரசனையையும் மக்களிடையே - குறிப்பாக இளைஞர்களிடையே - வளர்ப்பதற்காகவும் இந்த நாளை புத்தக நாளாகக் கொண்டாடுவது என்று, 1995ல் பாரிஸ் நகரில் கூடிய ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் கலாச்சார அமைப்பின் (யுனெஸ்கோ) மாநாட்டில் தீர்மானிக்கப்பட் டது. உலக புத்தக தினமாகவும் புத்தகங்களுக்கான காப்புரிமை தினமாகவும் இந்த நாள் அப்போதிருந்து அனுசரிக்கப்படுகிறது.

இந்த நாளுக்கு இன்னொரு சுவையான பின்னணியும் உண்டு. ஸ்பெயின் நாட்டின் கேட்டாலோனியா பகுதியைச் சேர்ந்த ஜார்ஜ் என்ற கிறிஸ்தவத் துறவியை நினைவுகூரும் நாளாகிய ஏப்ரல் 23 அன்று, புத்தகக் கடைகளில் விற்பனையாகும் ஒவ்வொரு புத்தகத்துக்கும் ஒரு ரோஜாப்பூ பரிசாகத் தருகிற பழக்கம் இருந்தது. குறிப்பாக காதலர்களுக்கிடையே இவ்வாறு ரோஜாவும் புத்தகமும் பகிர்ந்துகொள்ளப்பட்டன. அதிலிருந்தே புத்தக தினத்துக்கான யோசனை உதித்திருக்கிறது.

யுனெஸ்கோ அலுவலகம் உள்ள அனைத்து நாடுகளிலும் பல்வேறு வடிவங்களில் புத்தக தினம் கொண்டாடப்படுகிறது. புத்தகக் காட்சிகள், புதிய புத்தக வெளியீடுகள், கருத்தரங்குகள், கலை நிகழ்ச்சிகள் என்று இந்த நாளில் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

ஒப்பீட்டளவில் தமிழகத்தில் சில நல்ல நடவடிக்கைகள் எடுக்கப்படுவது உண்மைதான். அதே நேரத்தில், அனைத்து மாவட்டங்களிலும், அனைத்து மக்களுக்கும் எளிய விலையில் புத்தகங்கள் கிடைக்கச் செய்வதற்கான முயற்சிகள் எதுவும் தொடங்கப்பட்டதாகத் தெரியவில் லை. சென்னையில் கன்னிமாரா நூலகத்தில் நிலையான புத்தகக் காட்சி - விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்ற ஏற்பாட்டை அனைத்து மாவட்ட மைய நூலகங்களிலும் செய்வதில் என்ன தயக்கம்? கிராமப்புற நூலகங்கள் என்று கட்டப்பட்டிருந்தா லும், அவை ஆகப்பெரும்பாலும் பூட்டியே கிடக்கின்றன.

அரசின் பரிசாக மட்டுமல்ல, நண்பர்கள், தோழர்கள், உறவினர்களுக்குப் புத்தகங்களைப் பரிசளிக்கிற பண்பாடு ஓங்கி வளர வேண்டும். அதற்கான விருப்பத்தையும் முனைப்பையும் உலகப் புத்தக தின விழா ஏற்படுத்தட்டும். ஏனெனில், புத்தகம் என்பது வெறும் அச்சடித்த தாள்களின் கோர்ப்பு அல்ல, அது அலமாரியில் அடுக்கப்பட்டிருக்கும் உயிர்த்துடிப்பு.

No comments: