Monday, August 3, 2009

ஆணா... பெண்ணா... வேறுபடுத்தி அறிவது எப்படி?

Androgynous நாம் ஒருவரைப் பார்த்தவுடன் அவர் ஆணா பெண்ணா என்பதை எப்படி பிரித்தறிகிறோம்? நமது மூளையில் இந்த வேறுபாடுகள் எவ்வாறு உணர்த்தப்படுகின்றன? இது ஒரு சுவையான ஆய்வு. மாண்ட்ரீல் பல்கலைக்கழக உளவியல் அறிஞர் இது பற்றிய ஓர் ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டுள்ளார்.

படத்தில் காணும் androgynous தோற்றம் கொண்ட நபரின் நிறம், முகத்தில் உள்ள சில குறிப்பிட்ட பாகங்கள் இவற்றைக் கொண்டுதான் மனித மூளை ஆண்பெண் வேறுபாடுகளை விரைவாக பிரித்தறிகிறது. புருவங்கள் வாய்ப்பகுதி இவற்றில் காணப்படும் பளபளப்பினாலும் நமது மூளை ஆணையும் பெண்ணையும் தெரிந்துகொள்கிறது.

Human face குமரப்பருவத்தில் மூக்கு, தாவாய், வாய், தாடை, கண்கள் ஆகிய உறுப்புகளில் பெரும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த மாற்றங்களை நமது மூளை வெகுவிரைவாக உள்வாங்கிக்கொள்கிறது.

30 நபர்களிடம் 300 Caucasian முகங்களின் புகைப்படங்களைக் கொடுத்து ஆய்வுகள் நடத்தப்பட்டன. இந்த ஆய்வுகளில் இருந்து கண்கள், வாய் இவற்றைச் சுற்றிலும் காணப்படும் பளபளப்பு பாலினத்தை பிரித்தறிவதில் மூளைக்கு உதவிசெய்கின்றது. இதுவரை கண் இமைகளுக்கும் புருவத்திற்கும் இடையே உள்ள இடைவெளியைக் கொண்டு பாலினத்தை மூளை வேறுபடுத்தி அறிவதாக நம்பப்பட்டுவந்தது. ஆனால் தற்போதைய ஆய்வுகளின்படி வாய், கண்கள் இவற்றை சுற்றியுள்ள சிவப்பு, பச்சை நிறங்களைக் கொண்டு பாலினம் பிரித்தறியப்படுகிறது. சிவப்பு மற்றும் பச்சை நிறங்களின் சேர்க்கையினால் கருமைநிறம் தோன்றும் என்பது நமக்குத் தெரியும்.

ஆண்-பெண் கூறுகளை உள்ளடக்கிய androgynous முகத்தின் நிறம் சிகப்பாக இருந்தால் ஆண் என்றும் பசுமையாக இருந்தால் பெண் என்றும் நம்முடைய மூளை பிரித்தறிகிறது. ஆனால் வாய்ப்பகுதியை பார்க்கும்போது இதற்கு நேர்மாறாக உணரப்படுகிறது. சாதாரணமாக பெண்களின் வாய் சிவப்பு நிறத்தில் இருப்பது ஒரு காரணம். ஓர் ஆணின் கண்புருவத்தைச் சுற்றியுள்ள பகுதி இருளாக இருக்கும். தோல் தடிமனாக இருப்பதே இந்த இருள் நிறத்திற்கு காரணம். இதே போன்று மேலுதடும் தாவாயும் உரோமங்கள் வளரும் பகுதி என்பதால் கருமையாக இருக்கும்.

இன்னும் படிக்க: http://www.sciencedaily.com/releases/2009/05/090527121049.htm

நன்றி : மு.குருமூர்த்தி

No comments: