Thursday, July 30, 2009

அபூர்வமான நோய்க்கு ஒரு சிகிச்சை



தாலாஸ்ஸேமியா என்பது ஒரு வகை சேமியா அல்ல. அது ஓர் அபூர்வமான நோய். பெற்றோர்கள் இருவரிடமிருந்தும் குறைபாடுள்ள மரபணுவை `குடும்பச் சொத்தாக’ அவர்களது வாரிசு பெறும்போது அதன் இரத்தத்தில் உற்பத்தியாகும் சிவப்பணுக்களில் குறைபாடு ஏற்படுகிறது. இதுவே தாலாஸ்ஸேமியா. இந்த நோய் தாக்கிவிட்டால் வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு மாதமும் உடலில் ஆரோக்கியமான புது இரத்தத்தைச் செலுத்திக் கொண்டேயிருக்க வேண்டும்.

எலும்பு மஜ்ஜையிலிருந்து ஸ்டெம் செல்களை எடுத்து இந்நோய்க்கு சிகிச்சையளிப்பது 30 ஆண்டுகளுக்கும் முன்பே நடைமுறைக்கு வந்துவிட்டது. இந்த சிகிச்சையில் தற்போது தொப்புள்கொடி இரத்த ஸ்டெம் செல்களையும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

கடந்த மார்ச் மாதத்தில் சென்னை அப்போலோ மருத்துவமனையில் இச்சிகிச்சை அளிக்கப்பட்ட தாமிரபருணி என்ற எட்டு வயது சிறுமி சிகிச்சை முடிந்து 100 நாட்களுக்குப் பிறகு தற்போது தாலாஸ்ஸேமியா நோயிலிருந்து விடுதலை அடைந்திருக்கிறாள். அவளுக்கு புகழேந்தி என்று ஒரு வயதில் தம்பி. அவன் பிறந்தபோது சேமிக்கப்பட்ட தொப்புள்கொடி இரத்தத்திலிருந்தும் மார்ச் மாதத்தில் அவனது எலும்பு மஜ்ஜையிலிருந்தும் எடுக்கப்பட்ட ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி டாக்டர் ரேவதி ராஜ் இந்த சிகிச்சையை அவளுக்கு அளித்திருக்கிறார் (தகவல் : தி இந்து). இனி ஒரு வருடத்திற்கு தொற்று நோய்க் கிருமிகளால் பாதிப்பு ஏதும் ஏற்படா மல் அவளைப் பாதுகாத்தாக வேண்டும்.

“நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன். ஆனால் டாக்டர் ரேவதி ராஜ் எனக்கு கடவுளைப் போன்றவர்” என்கிறார் தாமிரபருணியின் தந்தை செந்தில் குமார். எட்டாவது வரை மட்டுமே படித்துள்ள அவர் கோயம்புத்தூர் நிறுவனம் ஒன்றில் தச்சுவேலை செய்து வருகிறார். தாமிர பருணிக்கு ஒரு வயது ஆறு மாதங்கள் ஆன போது இந்த நோய் அவளுக்கு இருந்தது அவருக்குத் தெரியவந்தது. மனம் தளராமல் தாலாஸ்ஸேமியா பற்றிய பல்வேறு விவரங் களை அவர் திரட்டியிருக்கிறார். கடந்த ஆறரை ஆண்டுகளாக கடும் போராட்டம் நடத்தியே இந்த சாதனையை நிகழ்த்தியி ருக்கிறார் அந்த பாசமிகு தந்தை. பல நண் பர்களும் டாக்டர்களும் உதவி செய்துள்ளனர்.

தாலாஸ்ஸேமியாவைப் பொறுத்தவரை, ஸ்டெம் செல்களைக் கொடுப்பவரும் பெறுபவரும் உறவினர்களாக இருக்க வேண்டும். அது மட்டுமல்ல, இருவரது இரத்த திசுக்களும் நூற்றுக்கு நூறு சதவீதம் பொருந்தியிருக்க வேண்டும். புகழேந்தி ஐந்துமாதக் கருவாகத் தாயின் வயிற்றில் இருந்தபோதே அவனது இரத்தம் பரிசோதிக்கப்பட்டு இதே நோயினால் அவன் பாதிக்கப்படவில்லை என்பதும், அவன் பிறந்தபிறகு அவனது இரத்த திசுக்களும் தாமிரபருணியின் இரத்த திசுக்களும் பொருந்திவந்தன என்பதும் உறுதி செய்துகொள்ளப்பட்டன.

உறவினர்களாக இல்லாவிடினும் தொப்புள்கொடி ரத்த சேமிப்பு வங்கியிலிருந்து இன்னொருவரது ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி இரத்தப் புற்றுநோய், அப்ளாஸ்டிக் இரத்தசோகை ஆகிய நோய்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும். உறவினர்களிடமிருந்து பொருந்திவரும் ஸ்டெம் செல்கள் கிடைக்காதபோது வேறு வழியின்றி தாலாஸ்ஸேமியா நோய்க்கும் இப்படிப்பட்ட சிகிச்சை அளிக்கப்படுவதும் அவ்வப்போது நடக்கத்தான் செய்கிறது. இம்மாதிரி சமயங்களில் டாக்டர்கள் அந்த சவாலை ஏற்று மிகவும் போராடியே நோயாளியைக் குணப்படுத்த வேண்டியுள்ளது.

2 comments:

Unknown said...

this information is very useful to all unkown science backround and upsc aspirants

muthu said...

En thambikku intha noi ullathu , ithu ethavathu mathru valai unda