Monday, June 8, 2009

புவிப் பந்தைக் காப்போம்; மனிதனைக் காப்போம்!

இரயுமன்துறை - தமிழகத்தின் வரைபடத்தில் பூத கண்ணாடியால் பார்த் தால் கூட ஒரு நுண்ணிய புள்ளியாக தோன்றும் இந்த மீன்பிடி மக்கள் வாழும் கிராமம் இன்னும் சில வருடங்களில் அழிந்துவிடும் அபாயம் பற்றி எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும்?

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரபிக்கடலுக்கும் வற்றாத தாமிரபரணி நதிக்கும் ஏவிஎம் கால்வாய் ஆகிய மூன்றுக்கும் நடுவில் அமைந்திருக்கும் சிறிய கிராமம் இது. இதற்கு 700 மீட்டர் தொலைவில் கடலும் ஆறும் இருந்தன. இன்று இந்த இடைவெளி 50 மீட்டராக குறைந்துவிட்டது. தொடர்ந்த கடல் அரிப்பின் விளைவாக 650 மீட்டர் நீள முள்ள மண் பகுதியை கடல் விழுங்கிக் கொண்டது.

1982ம் ஆண்டில் இக்கிராமத்தில் 8 தெருக்களும் 7000 மக்களும் குடியிருந் தனர். கடல் அரிப்பின் விளைவாக 5 தெருக்களில் இருந்த வீடுகள் சிதைந்து விட்டன. மக்களின் எண்ணிக்கை 2500 ஆக ஆகிவிட்டது. வீடுகளை, தொழிலை இழந்த வசதி படைத்த மக்கள் சமத்துவ புரத்திற்கும் நாகர்கோவிலுக்கும் புலம் பெயர்ந்துவிட்டார்கள். வேறு யார் எஞ்சி யிருக்க முடியும். மீன்பிடித்தலைக்கூட கூலிக்கு செய்து பிழைக்கும் ஏழை மக்கள்தான் அங்கு மிஞ்சியுள்ளார்கள். கிராமத்தின் மேற்குபுறத்தில் தடுப்புச் சுவர் கட்டினால்தான் மண்அரிப்பை தடுக்க முடியும். அப்படி கட்டப்படும் சுவரால் தங்கள் கிராமம் பாதிக்கப்படும் என்று அண்டையில் உள்ள கிராமத்தார் தடுப்புச் சுவர் கட்டப்படுவதை எதிர்க் கிறார்கள். இதுபோன்ற அழிவை இப் பகுதியில் வேறு எந்த கிராமமும் சந்திக்கவில்லை. அரசின் கவனத் தையும் அதிகாரிகளின் இரக்கத்தையும் ஈர்க்க மக்கள் செய்த முயற்சிகள் பலிக்கவில்லை.

இது ஒன்றும் ஓர் தனிப்பட்ட நிகழ் வல்ல. தரங்கம்பாடியில் மாசிலாமணி நாதர் ஆலயமும், சுந்தரவனச் சதுப்பு நிலத்தீவுகளும் இந்தியாவில் பாதிக்கப் பட்டு வருகின்றன. தன்னை அழிக்கும் மனிதர்களை எச்சரிக்கும் இயற்கையின் சீண்டல்கள் இவை.

சீண்டப்படும் பஞ்சபூதங்கள்

உலகெங்கும் இதுபோன்ற சம்ப வங்கள் நடந்தவண்ணம் உள்ளன. சுற்றுச் சூழலை மனிதன் சிதைக்கும் நிகழ்ச்சி உலகெங்கும் நடந்து வருகிறது. எவ ரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த அப்பு ஷெர்பாவும், அவருடைய குழுவும் 5 டன் எடையுள்ள கழிவுகளை சிக ரத்தின் உச்சியிலிருந்து கீழே கொண்டு வந்துள்ளார்கள்.

அண்டார்டிக் ஒரு பனிப் பிரதேசம். அங்கு விவசாயம் என்பதே கிடையாது. ஆனால் அங்குள்ள பனிக்கட்டிகளிலும் கடல் நீரிலும் உரத்துகள்கள் படிந்துள் ளதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ள னர். உலகின் மிகப்பெரிய வனமான அமே சான் சுருங்கி வருகிறது. ஆர்க்டிக் பெருங் கடலில் பனிக்கட்டி உருகுவதால் பிரிட் டிஷ் கடலையும் ஜப்பானிய கடலையும் இணைக்கும் வண்ணம் பெரும் படகு செல்லக்கூடிய பாதை தோன்றியுள்ளது.

இந்திய வனங்களில் புலிகள் மறைந்து வருகின்றன. ஆப்பிரிக்காவில் யானைகளும் இரட்டைக் கொம்பு காண் டாமிருகங்களும் குறைந்து வருகின்றன. இந்தோனேசியாவில் உராங் உட்டான் குரங்குகள் மட்டுமல்ல; ஆப்பிரிக்க கொரில்லாக்களும் மறைந்து வருகின்றன. கடல்களில் பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. மொத்தத்தில் கூறினால் உலகில் தோன்றிய இனங்களில் பறவை களில், மிருகங்களில், மீன்களில் எஞ்சி யிருப்பது 10 சதவீதம் மட்டுமே.

கடல்கள் திடீரென்று உள்வாங்கு கின்றன அல்லது சீறிப் பொங்குகின்றன. ஆற்றுநீரில் வேதியியல் கழிவுகள் கலப்ப தால் அவற்றின் நீர் பாசனத்துக்கும் குடிப்பதற்கும் அருகதையற்றவையாகி விட்டன. காற்று மாசடைகிறது. தொழிற் சாலைகள் கக்கும் புகைகளும், போக்கு வரத்து சாதனங்கள் (கப்பல், விமானம்) வெளியிடும் வெப்பமும் காற்று மண்டலத் தின் அடித்தளத்தை ஆட்டுவிக்கின்றன.

வீடுகளில், ஊர்களில்

கங்கை, கோதாவரி போன்ற ஆறு களில் மிதக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள், ஆறுகளின் இயல்பை அழித்துவிடு கின்றன. குளிர்பானங்களுக்காக சுரண் டப்படும் நிலத்தடி நீர் பூமியின் சமச்சீர் நிலையை மாற்றுகின்றன. விவசாயத் துக்கு பயன்படுத்தப்படும் செயற்கை உரங்கள் நிலத்தின் மாண்பை சீரழிப் பதுடன் நிலத்தடி நீரையும் நஞ்சாக்கு கின்றன. போதாததற்கு மரபணு விதை கள் வேறு, அழிவை ஏற்படுத்துகின்றன.

தெருக்களில் கொட்டப்படும் பிளாஸ் டிக் பைகள், மண்ணையும் வாயுவையும் நாசமாக்குகின்றன. இவை விரைவில் மக்குவதில்லை. பிளாஸ்டிக் பைகளை குவித்து வைத்து எரிப்பதால் காற்று பாழாகிறது. வீடுகளில் கழிவறைகளை, பளிங்குத்தரைகளை பளபளக்க வைக்க பயன்படும் வேதியியல் பொருட்கள் சாக்கடைகளையும் நாசமாக்குகின்றன. இவைகள் அனைத்தும் சுற்றுச்சூழலை நாசமாக்கும் காரணிகளில் ஒருசிலவே.

நாம் என்ன செய்ய வேண்டும்?

விற்பனை மையங்களில் பிளாஸ்டிக் பைகளை மறுப்போம். ஆடம்பரம், பகட்டு கருதி துணிப்பைகளை மறுப்பதை நிறுத்துவோம். பிளாஸ்டிக் பைகளை தெருக்களில் வீசாமல் சேமித்து வைத்து குப்பை வண்டிகளில் கொட்டுவோம். மரங்களை நடுவோம். வீடுகளில் செம்பருத்தி, துளசி, மாதுளை போன்ற செடிகளை வளர்ப்போம். இவ்வாண்டு 700 கோடி மரங்களை நடுவது என்று ஐ.நா. இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கு ‘கோடி மரங்கள் இயக்கம்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில் நாமும் இணைவோம்.

எரிசக்தியை உருவாக்கும் முறை களில் புகைவிடும் முறைகளை அகற்று வோம். எரிசக்தி சேமிப்பில் கவனம் செலுத்த வேண்டும். அறைகளில், அலுவலகங்களில் அநாவசியமாக எரியும் மின் விளக்குகளை அணைப் போம். சுழலும் மின்விசிறியை நிறுத்து வோம். தண்மையான நேரங்களில் குளி ரூட்டும் சாதனத்தை பயன்படுத்துவதை தவிர்ப்போம். வீட்டில் துணிமணிகளை துவைக்க சுற்றுச்சூழல் நட்புடைய பொருட்களை பயன்படுத்துவோம். மக்கும் குப்பைகளை உரமாக்குவோம். மக்காத குப்பைகளை மறுசுழற்சிக்கு அனுப்புவோம். நாம் செய்ய வேண்டியதை பற்றி இங்கு கூறியுள்ளது குறைவே. இன்னும் ஏராளம் உண்டு.

‘உங்கள் கிரகம் உங் களை நாடுகிறது-தட்பவெப்ப மாற்றத்தை எதிர்க்க ஒன்று படுங்கள்’ என்ற பதங்களை இவ்வாண் டின் சுற்றுச்சூழல் பாது காப்பு முழக்கமாக ஐ.நா. புவியில் வாழும் மக்கள் முன்வைத் துள்ளது. மனித இனம் வாழ பூவுலகு வேண்டும். பூவுலகம் தழைக்க மனித இனம் வேண்டும். பூமியும், மனிதனும் ஒன்றுக்கொன்று அனுசரணையாக, இணையாக, துணையாக இருப்பதுடன் ஒன்றையொன்று ஈடு செய்ய வேண்டும். அந்த அரிய பணியில் நம்மை நாமே அர்ப்பணிப்போம்.
நன்றி: தாஸ்

No comments: