Friday, February 13, 2009

இறவாப் புகழ் கொண்ட டார்வின்

200 ஆண்டுகளுக்கு முன் 1809 பிப்ரவரி 12 அன்று இங்கிலாந்து நாட்டின் குக்கிராமம் ஒன்றில் பிறந்த ஒரு குழந்தை பின்னாளில் உலகம் போற்றும் புரட்சிகர விஞ்ஞானியாக வளர்ந்தது. சார்லஸ் டார்வின்தான் அக்குழந்தை. டார்வினுடைய 200-வது பிறந்த நாளை இன்று உலகமே கொண்டாடிக் கொண்டிருக்கிறது. கோப்பர்னிக்கஸ், கலீலியோ. நியூட்டன், ஐன்ஸ்டீன் ஆகிய விஞ்ஞானிகள் வரிசையில் டார்வினும் போற்றப்படுகிறார். சமூக விஞ்ஞான வளர்ச்சியில் கார்ல் மார்க்ஸின் பங்கு எவ்வளவு


முக்கியத்துவம் வாய்ந்ததோ, இயற்கை விஞ்ஞானத்தில் டார்வினுடைய கண்டுபிடிப்புகள் அதே அளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்று கூறுவது பொருத்தமாக இருக்கும்.

எடின்பரோ பல்கலையிலும் கேம்பிரிட்ஜ் பல்கலையின் கிறிஸ்தவக் கல்லூரியிலும் படித்து முடித்த பிறகு டார்வினுக்கு பேராசிரியர் ஜான் ஸ்டீவன்ஸ் ஹென்ஸ்லோவின் உதவியால் பீகிள் என்ற கப்பலில் உலகத்தின் பல பகுதிகளைச் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது டார்வினுக்கு வயது இருபத்து நான்குதான். பிரேசிலில் ரியோ டி ஜெனிரோவுக்கு அருகில் உள்ள காட்டில் சிறிய வண்டு ஒன்றின் 68 வித்தியாசமான இனங்களை அவரால் காண முடிந்தது. ஒரு பூச்சியினத்தில் இத்தனை விதமான வகைகள் இருந்தது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரது சிந்தனையைப் புதிய கோணத்தில் தூண்ட இது உதவியாக இருந்தது.

தென் அமெரிக்கக் கடற்கரையோரங்களில் ஆய்வுகள் மேற்கொண்ட பிறகு அங்கிருந்து 1000 கி.மீ. தூரத்தில் இருந்த கலபாகாஸ் தீவுகளுக்குக் கப்பல் சென்றது. அங்கிருந்த மிருகங்கள் பொதுவாக தென் அமெரிக்காவில் பார்த்த மிருகங்களைப் போலவே இருந்தாலும் சில நுணுக்கமான வித்தியாசங்களையும் டார்வின் கவனித்தார். உயிரினங்கள் அப்படியே இருப்பதில்லை, சூழ்நிலைகளுக்கேற்ப ஓரினத்திலிருந்து மற்றோர் இனமாக மாற்றமடைகின்றன என்று டார்வினுக்குத் தோன்றியது. தென் அமெரிக்காவிலிருந்து புலம் பெயர்ந்து கலபாகாஸ் தீவுகளுக்கு வந்து சேர்ந்த பறவைகளும் ஊர்வனவும் புதிய சூழ்நிலைக்குத் தகுந்தபடி காலப்போக்கில் புதிய இனமாக ஏன் உருவெடுத்திருக்கக் கூடாது என்ற கேள்வி டார்வினுக்குள் எழுந்தது. இந்தக் கேள்வி பின்னர் பல முக்கியமான புதிர்களுக்கு விடை கண்டு பிடிக்க உதவியது.

ஐந்து ஆண்டுகள் நீடித்த கப்பல் பயணத்தில் பல வகையான தாவரங்கள், விலங்குகள், தொல் படிவங்கள் ஆகியவற்றை டார்வின் சேகரித்துக் கொண்டார். நாடு திரும்பிய பிறகு அவர் தன் ஆய்வுகளைத் தொடர்ந்தார். 1859-இல் ‘உயிரினங்களின் தோற்றம் (டீசபைin டிக ளுயீநஉநைள)’ என்ற நூலை வெளியிட்டார். அதில் எல்லா உயிரினங்களும் ஒரு பொதுவான மூதாதையரிடமிருந்து சூழ்நிலைகளுக்கேற்ப மாற்றங்களைப் பெற்றுக் கொண்டு புதிய உயிரினங்களாகப் பரிணமிக்கின்றன என்ற மாபெரும் இயற்கையியல் தத்துவத்தை (கூாநடிசல டிக நுஎடிடரவiடிn) தகுந்த ஆதாரங்களுடன் எடுத்து வைத்தார். “வாழ்வதற்கான போராட்டத்தில் தகுதி வாய்ந்தவை தப்பிப் பிழைக்கின்றன, மற்றவை அழிகின்றன” என்றார் டார்வின். இதற்கு இயற்கையின் தேர்வு

(சூயவரசயட ளுநடநஉவiடிn) என்று அவர் பெயரிட்டார். அது வரை “கடவுள் பல்வேறு உயிரினங்களைப் படைத்தார். அவை காலம் காலமாக அப்படியே உயிர்வாழ்ந்து வருகின்றன” என்பதே பல்வேறு மதங்கள் போதித்து வந்த படைப்புத் தத்துவம் (ஊசநயவiடிn கூாநடிசல). இன்றும் உயிரினங்களின் தோற்றம் பற்றிய விவாதம் நடந்து வந்தாலும், டார்வினின் கண்டுபிடிப்பு படைப்புத் தத்துவத்திற்கு ஒரு பலத்த அடிகொடுத்து விட்டது என்பதே உண்மை.

முன்னர் இருந்த உயிரினங்கள் பரிணாம வளர்ச்சி பெற்றே மனிதன் தோன்றினான் என்ற பரிணாமத் தத்துவத்தை விளக்கும் மனிதனின் தோற்றம் (கூாந னுநளஉநவே டிக ஆயn) என்ற நூலை 1871-இல் வெளியிட்டார். தாங்கள் இதுகாறும் போதித்து வந்தவைகளின் அடிப்படையையே தகர்த்துவிட்ட டார்வினின் தத்துவத்தை மதவாதிகளால் ஜீரணிக்கவே முடியவில்லை. அறிவியல் ரீதியாக மறுக்கவும் முடியவில்லை. 200 ஆண்டுகள் கழித்து இங்கிலாந்து சர்ச் அன்று டார்வின் கொள்கை பற்றி தான் செய்த விமர்சனம் தவறு என்று ஒப்புக் கொண்டிருக்கிறது.

200 ஆண்டுகள் கடந்த பிறகும் டார்வினின் தத்துவம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இனியும் வாழும். மரபியல், மூலக்கூறு உயிரியல், உயிரினப் பெருக்கம் தொடர்பாக இன்று நடந்து கொண்டிருக்கும் ஆராய்ச்சிகள் டார்வினது கண்டுபிடிப்புகளின் தொடர்ச்சியே. இறவாப் புகழ் கொண்ட டார்வினை நினைவு கூர்ந்து வாழ்த்துவோம் !

No comments: