Tuesday, January 13, 2009

கடல்மட்டம் தாழ்வாக இருந்தது உண்மையா?

நீரிலும் நிலத்திலும் வசிப்பதால் தவளைகளை இருவாழ்விகள் என்றழைக்கிறோம். தவளைகளின் வாழ்க்கை பெரும்பாலும் நீர்நிலைகளின் அருகிலேயே இருப்பது கவனிக்கத்தக்கது. நீரில் தோன்றிய தவளை நிலத்தில் வாழ்வதற்கு பரிணாம வளர்ச்சியில் பல மாற்றங்களைப்பெற வேண்டியிருந்தது. மீன்களைப்போல செவுள்களால் சுவாசிக்காமல் நுரையீரல்களால் சுவாசிக்கவேண்டியிருந்தது. மேலும் தவளைகளின் முட்டைகள் காற்றிலோ, வெய்யிலிலோ அதிக நேரம் இருந்தால் நீர்ச்சத்து ஆவியாகி முட்டையில் உள்ள கரு இறந்துவிடும். தவளையின் தோல் மெல்லியதாகவும், நீர் புகக்கூடியதாகவும் இருக்கிறது. எனவே தவளைகள் அதிக காற்று உள்ள இடங்களையும், வெய்யில்படும் இடங்களையும் தவிர்த்துவிடும். தவளைகள் கடல்நீரில் வாழ்வது இல்லை. கடல்நீரில் இருக்கும் அதிகப்படியான உப்பு தவளையின் உடலுக்குள் சென்றால் தவளை இறந்துவிடும். ஆனால் கடல் நடுவே இருக்கும் தீவுகளில் தவளைகள் காணப்படுவது எப்படி? இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு கடல்மட்டம் தாழ்வாக இருந்ததால் இது சாத்தியமாகி இருக்கிறது.

தவளைகளுடன் ஒப்பிடும்போது பல்லிகள் சற்று முன்னேறிய இனம் என்பதை உணரலாம். காரணம் பல்லிகள் ஓடுடன் கூடிய முட்டைகளை இடுகின்றன. இதனால் நீர்நிலைகளின் அருகில்தான் முட்டையிடவேண்டும் என்கிற அவசியம் பல்லிகளுக்கு இல்லை. மேலும் பல்லிகள், ஓணான்கள் இவற்றின் உடல் செதில்களால் மூடப்பட்டுள்ளதால் நீர் இழப்பு தவிர்க்கப்படுகிறது. பல்லிகள் மற்றும் ஓணான்களின் கால்விரல்கள் மரக்கிளைகளைப் பற்றிக்கொள்ள முடியும். ஆனால் நீந்துவதற்கு ஏற்றவாறு கால்விரல்கள் இல்லை. ஆனால் தீவுகளில் பல்லிகளும், ஓணான்களும் காணப்படுவதற்குக் காரணம் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக கடல் மட்டம் தாழ்வாக இருந்ததுதான்.

மனிதர்கள் மூலமாக பல்லிகளும், ஓணான்களும், தவளைகளும் தீவுகளைச் சென்றடைந்திருக்கலாம் என்று கருதுவதற்கு இடமில்லை. ஏனெனில் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபடக்கூடிய பல்லிகள் காணப்படுகின்றன.

எனவே, பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக கடல்மட்டம் தாழ்வாக இருந்திருக்க வேண்டும் என்று கருத இடமிருக்கிறது.

No comments: