Tuesday, December 9, 2008

இலங்கைத் தமிழ் மக்களின் பாதுகாப்பு அரசியல் தீர்வுடன் இணைந்தது

இலங்கைத் தமிழ் மக்களின் பாதுகாப்பு அரசியல் தீர்வுடன் இணைந்தது எஸ்.கண்ணன்

இலங்கைத் தமிழர்கள் மீதான கவலை, சமீபத்தில் அதிகரித்து வருகிறது. 1983 காலத்தைப் போல் இல்லையென்றாலும், அதை நோக்கிய உணர்வுகள் உருவாக்கப்பட்டு வருகிறது. இலங்கையில் என்ன நடக்கிறது என்பதும், இலங்கை அரசாங்கத்தின் செயல் சரியா என்பதும், பிரச்சனைக்குத் தீர்வு என்ன என்பதும் சாதாரண மக்களைக் குடைந்தெடுக்கும் கேள்விகளாகும். ஒவ்வொரு தரப்பினரும் ஒவ்வொரு விதமான விளக்கங்களைத் தருவது, தமிழகத்தில் வாடிக்கையாகி விட்டது. வேடிக்கை பார்க்கக் கூடாது. அதில் வேறு அறுவடைகள் நடந்து விடக்கூடாது, என்பதில் இருந்து, சற்று மிகைப்படுத்துகிறார்களோ? என்ற ஐயப்பாட்டையும் பொதுமக்கள் எழுப்பத் தயங்கவில்லை. எப்படி இருந்தாலும் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும், என்ற மனித மாண்பில் இருந்தே, பிரச்சனையை அணுகுவதும், தீர்வு காணுவதும் அவசியம்.

இலங்கைப் பிரச்சனையின் மூலம் என்ன?

மொத்த இலங்கையில் சுமார் 24 சதமானம் தமிழர்களும், 20 சதமானம் தமிழ்பேசும் இஸ்லாமியர்களும் வாழ்ந்து வருகின்றனர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்களே அதிகம். திசைகளை வைத்து, இலங்கை 9 மாகாணங்களாக பிரிக்கப்பட்டு மாகாண ஆட்சியும் நடைபெற்று வருகிறது. ஒட்டு மொத்த இலங்கைக்கும் தமிழ்மொழிக்கான அங்கீகாரம், ஆட்சி மொழி அந்தஸ்து போன்றவை கொடுக்கப்பட்டாலும், வேலைவாய்ப்பு, தமிழர்கள் சிறுபான்மையாக உள்ள பகுதிகளில் இன வேற்றுமைகளை வளர்த்த சிங்கள இனவாதிகள், உள்ளிட்ட பிரச்சனைகள் மெதுவாக தலை தூக்கி, அது சிங்கள பேரினவாதத்தின் தாக்குதலாக மாறியது. கொழும்பு நகரில் நகைவியாபாரம், தொழில் போன்றவற்றில் தமிழர்கள் செல்வந்தர்களாக விளங்கியதும், தொழில் போட்டியும் முக்கியக் காரணங்களாக விளங்கின. இதுவும் இன வெறியையும், தாக்குதலையும் அதிகப்படுத்தியது.

இவற்றைத் தொடர்ந்தே தமிழ் மக்கள் தங்கள் உரிமைக்காக இயக்கம் துவங்குவதும், போராடுவதும் நடைபெற்றது. இலங்கைத் தமிழ் மக்களின் தந்தை என அழைக்கப்பட்ட செல்வநாயகம் தலைமையில் தமிழர் கட்சி வலுப்பெறத் துவங்கியது. 50 களில் துவங்கி செயல்பட்ட இந்த இயக்கங்கள், ஜனநாயகப் பாதையில், சரியாகவே பயணம் மேற்கொண்டது. ஆனாலும் எல்லா இடங்களிலும், நாடுகளிலும் உள்ள பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை வாதங்களின் காரணமாகவும், பெரும்பான்மையினரின் இனவெறித் தாக்குதல் கொழும்பு நகரில் தீவிரமானதும், மக்கள் இடம் பெயர்ந்ததும், அதைத் தொடர்ந்து, தமிழர் பகுதியில் ஆயுதத் தாக்குதலுக்கு தயாரானதும் வரலாறு. பத்துக்கும் மேற்பட்ட ஆயுதம் ஏந்திய தமிழர் குழுக்கள் உருவானதை, எதிர்கொள்ள இலங்கை அரசு ராணுவத்தை அனுப்பியதும், தமிழர் குடியிருப்புகள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டதும், நிலைமையை மோசமாக்கியது. சிறைக்குள்ளிருந்த தமிழ் கைதிகள் படுகொலை கண்மூடித் தனமான தாக்குதல் பெண்கள் மீதான வன்கொடுமைகள் போன்றவை, தமிழ் நாட்டிலிருந்து இலங்கைத் தமிழர்களுக்கான ஆதரவு பெருகுவதற்கு காரணமாகும்.

குறிப்பாக 1983 காலத்தில் இவை அதிகரித்து, இலங்கைத் தமிழர்களின் ஆயுதப் படைக்கான பயிற்சிக்களமாக மாறியது தமிழகம். அன்றைய அதிமுக (எம்ஜிஆர்) அரசும், திமுகவும் போட்டி போட்டு ஆதரவுக் கரம் நீட்டினர். இந்திய அரசும் ஆதரவளித்தது.

விடுதலைப் புலிகள் மட்டும் இன்றைய விவாதப் பொருளாக மாறியதன் பின்னனி என்ன?

இலங்கையில் சுமார் 35 முதல் 40 ஆண்டுகளாக ஆயுதம் ஏந்தி போராடும் குழுக்கள் உள்ளன. மிகச்சிறந்த கல்வியாளர்கள், அறிஞர்கள் ஆயுதக்குழுக்களில் ஈடுபடத் துவங்கினர். சேகுவேரா புரட்சிப்படை ஈ.பி.ஆர்.எல்.எப், டெலோ, எல்.டி.டி.இ. ப்ளாட், போன்ற அமைப்புகள் முக்கியமானவை. 1980களிலேயே யார் பெரியவர் என்ற போட்டியும், இளைஞர்களை ஈர்ப்பதில் இருந்த போட்டியும் பெரும் பிணக்காக மாறி, ஒருவரை ஒருவர் தாக்குவதிலும், இறுதியில் எல்.டி.டி.இ. தவிர்த்த அனைவரையும் அழித்ததிலும் முடிந்தது.
இதில் இந்திய அரசின் தலையீடும், இலங்கையுடனான பேச்சுவார்த்தையும், அதைத் தொடர்ந்து IPKF அனுப்பப்பட்டதும், பெரிய நாட்டின் ராணுவம் அங்கிருக்கும் பூசல்களை அறிந்து, ஆயுதங்களைக் களைய நடவடிக்கை மேற்கொண்டதும், LTTE வலுவானதாக்கவும், மற்றவர்களை வலுவிழக்கவும் செய்தது.

இது குறித்து பல்வேறு கருத்துக்கள் இருப்பினும், 1987ல் போடப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தம், எல்லாத் தமிழர் குழுக்களையும் இணைக்கவில்லை. இந்திய அரசின் முயற்சி, பெரிய நாட்டின் தலையீடாக அதீத தலையீடாக சிங்களர், தமிழர் என்ற இரு பகுதியினராலும், குறிப்பிடத் தகுந்த அளவில் பார்க்கப்பட்டது. அதிருப்தியுற்ற இளைஞர்களிடையே LTTE செல்வாக்கு பெருகுவற்கும் காரணமாக அமைந்தது. இதைப் பயன்படுத்தி மற்றவர்களை அழித்தது. செல்வநாயகத் திற்கு அடுத்து பெரிய தலைவராக அங்கீகரிக்கப்பட்ட அமிர்தலிங்கத்தை கொலை செய்தது. பத்மநாபா, முகுந்தன் என்ற உமா மகேஸ்வரன், சிறீசபாரத்னம் போன்றோர் கொல்லப்பட்டனர். 1991 பொதுத்தேர்தல் பிரச்சாரத்தில் இருந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியும் கொல்லப்பட்டார்.

மேலே குறிப்பிடப்பட்டவர்கள் தலைவர்கள். இவர்களன்றி இலங்கைக்குள் எண்ணற்ற தமிழ் இளைஞர்கள் மாற்று இயக்கத்தைச் சார்ந்தோர் என்பதற்காகவே சொல்லப்பட்டனர். கோவிந்தன் எழுதிய புதியதோர் உலகம், ஷோபா சக்தி எழுதிய கொரில்லா, புஷ்பராசாவின் ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியங்கள், ராஜனி திரானகம், ராஜன் ஹில், தயா சோமசுந்தரம், கே. சிறீதரன் ஆகிய நால்வர் எழுதிய முறிந்த பனை ஆகிய நூல்கள், இவை குறித்தும் பேசுகின்றன.

உரிமைகளுக்கான போராட்டம் மெல்ல, மெல்ல அதிகாரத்திற்கான போராட்டமாக மாறியது மட்டுமல்லாமல், குறைந்த பட்ச ஜனநாயகத்தை மதிக்காத போக்கினை எல்.டி.டி.இ. வெளிப்படுத்தியது. தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட வரதராஜ பெருமாள் விரட்டப்பட்டதும் இதில் அடக்கம். ராஜீவ் காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து இந்தியா உள்ளிட்டு 30 நாடுகளில் LTTE தடை செய்யப்பட்டது. 17 ஆண்டுகள் கழித்து LTTE மீதான தடையை இந்தியா திரும்பப் பெற வேண்டும் என தற்போது நடைபெற்று வரும், இலங்கைத் தமிழர் ஆதரவு இயக்கத்தின் போது வெளிப்படுத்துவது சந்தேகக் கண் கொண்டு பார்க்க வேண்டியதாகும். விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், நெடுமாறன், அமீர், சீமான், வைகோ போன்றவர்கள் இத்தகைய கருத்துக்களைப் பகிரங்கமாகவே வெளிப்படுத்தி உள்ளனர்.

இப்போதைய தேவை புலிகள் மீதான தடையை விலக்க வேண்டுமா? இல்லையா? என்பதல்ல. LTTE யை ராணுவம் கொண்டு அழிக்கிறேன் என்ற பெயரில், தமிழர் குடியிருப்புகளின் மீதான தாக்குதல் கூடாது என்பதாகத் தான் இருக்க வேண்டுமே தவிர புலிகளைப் பாதுகாக்கும் குரலாக உருவெடுப்பது, அராஜகவாதத்திற்கே துணை சேர்க்கும்.

அரசியல் தீர்வு சரியல்ல என்ற பிரச்சாரம் செய்யப்படுகிறதே?

அரசியல் தீர்வு என்பது குறித்த தெளிவான பார்வை வேண்டும். இலங்கைத் தமிழர் பிரச்சனை என்பது, இலங்கை என்ற நாட்டின் உள்நாட்டுப் பிரச்சனை என்பதையும், அங்கே குறிப்பிட்ட பகுதி மக்களின் உரிமைகள் பறிக்கப்படும் போது, சர்வதேச ரீதியில் ஜனநாயகப் போராட்டம் மூலம் இலங்கை அரசை நிர்பந்திப்பதே சரியானது என்பதையும், நம் போன்ற இயக்கங்கள் முன்வைக்கின்றன. இப்போது முன்னுக்கு வந்துள்ளதும், அது போன்றதே, இலங்கை ராணுவத்தின் தாக்குதல் குடியிருப்புகளை நோக்கியோ, மக்களின் வாழ்வாதாரங்களைப் பறிக்கிற வகையிலோ அமையக் கூடாது. அது போல் நிகழ்ந்தால் அது சர்வதேசக் கண்டனத்திற்கு உட்படுத்தப்படவேண்டும்.

இப்போது தமிழகத்தில் சர்வ கட்சிக் கூட்டம் நடந்தது, மனித சங்கிலி போன்றவை அத்தகைய பார்வை கொண்டதாகத் தான் இருக்க முடியும். இரண்டாவதாக, எந்தவொரு ஆயுதப் படையின் போராட்டத்தையும், ராணுவம் கொண்டு மட்டும் ஒழித்து விட முடியாது. இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே, LTTE உடன் ராணுவத்தீர்வும், மக்களுடன் அரசியல் தீர்வும் காண இருப்பதாக அறிவித்து இருக்கிறார். LTTE யினைப் பொருத்தவரை மக்களைத் தான் கேடயமாக கையாண்டு வருகிறது. இத்தகைய சூழலில், இலங்கை அதிபர் அறிவித்துள்ள 4டி அணுகு முறையான LTTE என்ற Demilitirisation, Democratisation, Development, Devolution திட்டம் வெற்றிகரமாக அமையாது. வெற்றிகரமாக அமைந்திட பேச்சுவார்த்தை அவசியம். பேச்சு வார்த்தை நடைபெறும் காலத்தில் அரசு தனது திட்டத்தை செயல்படுத்தினால் மட்டுமே, தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெற முடியும்.

பேச்சு வார்த்தையின் போது LTTE ஒத்துழைக்குமா? என்ற கேள்வியும் எழாமல் இல்லை. 2002 துவங்கி நார்வே தூதுக் குழுவினரின் பேச்சுவார்த்தை நடைபெற்ற காலத்தில், சர்வதேச விதிகளை LTTE பல முறை மீறி இருக்கிறது. அமைதிப் பேச்சுவார்த்தை காலத்தில் LTTE தொடுத்த தாக்குதலே அதிகம் என ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டு இருக்கிறது, என்பதையும், தமிழ் நாட்டில் உள்ள தமிழர் நல விரும்பிகள். கணக்கில் கொள்ள வேண்டும். எனவே அரசியல் தீர்வை LTTE யும் அதன் ஆதரவாளர்களும் விரும்பாததற்கு இதுவே காரணம்.

இந்தியாவில், தமிழகத்தில் உள்ள தமிழ் ஈழத்திற்கான ஆதரவு அமைப்புகள், இந்தியாவில் உள்ள தேசிய இனப்பிரச்சனைகளை எப்படிப் பார்க்கின்றன? என்ற கேள்வியும் அவசியம் இந்த அமைப்புகள் இந்திய தேசிய இனங்களைப் பற்றி சமீபத்தில் வாய் திறப்பதில்லை. காஷ்மீர் குறித்தோ, நாகாலாந்து, மணிப்பூர் பிரச்சனைகள் குறித்தோ, இடது அதி தீவிரவாதிகளைத் தவிர, மற்றவர்கள் தேசிய இனங்கள் பிரிந்து போகட்டும் எனப் பேசுவதில்லை. அல்லது மஹாராஷ்ட்ராவில் நவ நிர்மாண் சேனாவின் தலைவர் ராஜ் தாக்கரேயின் செயல்களையோ, அஸ்ஸாம் மாணவர் அமைப்புகளின் செயல்களையோ ஆதரிக்க முடியாது.

இந்திய எல்லைக்குள், மத்திய, மாநில அரசுகள் மேற்படி போராட்டக்காரர்களை ஜனநாயக அடிப்படையில் அம்பலப் படுத்துவதும், மக்களிடம் இருந்து தனிமைப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பது தான், இந்தியாவிற்குள் எடுக்கிற நிலைபாடு. ஆனால் இலங்கை என்றால், அங்கே ஈழம் வேண்டும் லிஜிஜிணி நடத்தும் போராட்டம் விடுதலைப் போராட்டம் என்று பேசுவது, நாளைய இந்தியாவிற்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கான, இன்றைய ஒத்திகை. இதில் தமிழ்மக்களுக்கான பாதுகாப்பை விட LTTE தலைவர் பிரபாகரனுக்கான மணிமகுடமே மறைந்திருக்க முடியும்.

எனவே அரசியல் தீர்வு என்பது 1. உடனடியாக பேச்சு வார்த்தைக்கு அழைப்பது, 2. இருதரப்பும் போரிடாமல் இருப்பது, 3. தமிழ்மக்கள் வாழும் பகுதியில் அவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம், மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைகளை நிறைவு செய்வது. 4. தன்னாட்சி அந்தஸ்து பெற்ற மாகாண ஆட்சிக்கு வழிவகை செய்வது, 5. அழிக்கப்பட்ட பல்கலைக் கழகம், கல்லூரி, பள்ளி, மருத்துவமனைகள் புனரமைப்பது. 6. கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் தமிழ் மக்கள் மீதான கெடுபிடிகளை குறைப்பது என்பதே அவசியமாகும். இதுவே இலங்கை வாழ் தமிழர்களுக்கு உரிமையுடன் கூடிய பாதுகாப்பை வழங்கும். இத்தகைய கோரிக்கைகளுக்காக இலங்கை அரசையும், LTTE யையும் நிர்ப்பந்திக்கிற இயக்கமாக, தமிழர் ஆதரவு இயக்கங்கள் இருக்க வேண்டும்.

No comments: