Thursday, December 11, 2008

சமூக விடுதலையும், சமூக மாற்றமும் பின்னிப்பிணைந்தவை

‘துயர்ப்படும் மனித குலத்தின் ஒரே உலகத் தலைவன் நான்தான் என்று என் றைக்குமே நான் உரிமை கொண்டாடிய தில்லை. தீண்டாமை எதிர்ப்பு மட்டுமே என் சக்திக்கு உட் பட்டது. வேறு எந்த பிரச்சனையும் அதே அளவிற்கு மேம்பட்டது அல்ல என்று நான் கூறமாட்டேன். ஆனால் மனித வாழ்வு என்பது ஒரு குறுகிய கால வரையறைக்கு உட்பட்டது என்ற நிலையில், ஏதோ ஒரு லட்சி யத்தை மட்டும் எடுத்துக் கொண்டு தான் ஒருவன் பணியாற்ற முடியும். எனவே தீண்டாமை கொடுமைக் குள்ளானவர்களுக்காக பணியாற்று வதைத் தவிர வேறு எதற்கும் நான் ஆசைப்படவில்லை’.

இது மாமேதை அம்பேத்காருடைய ஆசையாக மட்டுமில்லை. இதனை நிறைவேற்ற அம்பேத்கார் எண்ணற்ற முயற்சிகளை மேற்கொண்டார். அவற் றின் போது எண்ணற்ற துயரங்களை ஏற்றுக்கொண்டார்.

அவரது வாழ்நாளின் நீண்ட பெரும் பகுதியை இந்நோக்கத்திற்காகவே அவர் செலவிட்டார் என்பதை எவரும் மறுக்க முடியாது. தீண்டாமையின் பின்பலமாக வும் பிரிக்க முடியாத பகுதியாகவும் உள்ள ஜாதி அமைப்பையும் அதன் அஸ்திவார மாக உள்ள இந்துத்துவா சித்தாந்தத் தையும் ஏராளமான ஆய்வுகள் செய்து அம்பலப்படுத்தினார். இவற்றுக்கு எதி ராக அவர் பெரும் யுத்தத்தையே நடத் தினார் என்றால் அது மிகையானதல்ல.

சமரசமில்லாத போர்

ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த அவர் ஆற்றல் மிக்க அறிவாளியாகவும் மேதையாகவும் விளங்கினார். தன் திறன் முழுவதையும் மிகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக அர்ப்பணித் தார். இந்தியாவின் தலைசிறந்த தவப் புதல்வர்களில் ஒருவராக அவர் திகழ்ந் தார். இதனால்தான் இந்தியா விடுதலை அடைந்தவுடன் இந்திய ஆளும் வர்க்கங் கள் அவரை இந்திய அரசியல் சாச னத்தை உருவாக்கும் குழுவுக்கு தலைவ ராக தேர்வு செய்தன. இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கும்போது தீண் டாமை ஒழிப்பிற்கும் ஒடுக்கப்பட்ட மக் களின் ஜனநாயக உரிமைகளுக்கும் தனி கவனம் செலுத்தினார். ஆனால் இந்திய அரசியல் சாசனத்தை ஆளும் வர்க்கங் களும், அதிகார வர்க்கமும், ஆளும் காங் கிரஸ் கட்சியும் அமல்படுத்திய விதம் கண்டு கலங்கிப்போனார். ஆவேசம டைந்தார். அரசியல் சட்டங்களுக்கு மாறாக தலித் மக்கள் தீண்டாமைக் கொடுமைகளுக்கும் வன்கொடுமை களுக்கும் ஆட்படுத்தப்பட்டனர்.

இந்துத்துவா சித்தாந்தம், வர்ணாசிரம சாதிய அடிமைத்தனத்திற்கும் பெண்ண டிமைத்தனத்திற்கும் ஊற்றுக்கண்ணாக இருப்பதால் இந்துமத சட்டங்களை சீர் திருத்த டாக்டர் அம்பேத்கார் ஆர்வம் கொண்டார். தன்னை முற்போக்குவாதி யாக பிரகடனப்படுத்திக்கொண்ட அன் றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவும் இதற்கான ஒப்புதலைக் கொடுத்தார். ஆனால் டாக்டர் அம்பேத்கார் அவர்கள் இந்துமத சீர்திருத்த சட்டங்களை நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தபோது ஆதிக்க சக்திகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தின. இந்த ஆதிக்க சக்திகள் காங்கிரஸ் கட்சிக்குள் வலு வான பிடிப்பைக் கொண்டிருந்தன. எனவே இந்த எதிர்ப்பைக் கண்டு பிரதமர் நேரு நிலைகுலைந்து போனார். ஆரம்பத்தில் இந்துமத சீர்திருத்த சட் டங்களை ஆதரித்த அவர், இந்த எதிர்ப் பைக் கண்டவுடன் பின்வாங்கினார். அச் சட்டங்களை அப்போதைக்கு கைவிடு மாறு சட்டஅமைச்சர் டாக்டர் அம்பேத் காரை வற்புறுத்தினார். கைவிடுவதற்கு எதிராக அவர் நேருவிடம் கடுமையாக வாதாடினார். பயனில்லை. இறுதியாக அம்பேத்கார் பகிரங்கமாக அறிவித்தார். ‘காங்கிரஸ் தலைமை இந்துமத சீர்தி ருத்த மசோதாவை கைவிட வற்புறுத்து கிறது. எனக்கு அதில் உடன்பாடு இல் லை. எனவே நான் எனது அமைச்சர் பொறுப்பை கைவிடுகிறேன்’ என்றார். ஆம், ஜாதி அடிமைத்தனத்திற்கு எதிரான அவரது ஆவேசமும் ஆத்திரமும் அத்த கைய முடிவுக்கு அவரை உந்தித் தள்ளியது.

சட்டம் மட்டுமல்ல.. போராட்டமும்..

1950ல் தீண்டாமை சட்டப்பூர்வமாக ஒழிக்கப்பட்டுவிட்டதாக பிரகடனம் செய்த அதே அம்பேத்கார், அவரது வாழ் நாளில் பிற்காலத்தில் அந்த பிரகடனம் தவறு எனும் முடிவுக்கு வந்தார். சமுதாயத்தில் ஆழமாக வேரூன்றிவிட்ட சாதிய உணர்வையும் அதன் காரணமாக வெளிப்படும் தீண்டாமை உள்ளிட்ட சாதியக் கொடுமைகளையும் சட்டத்தின் மூலமோ, அதிகார வர்க்கத்தின் மூலமோ மட்டும் ஒழித்துவிட முடியாது. ஒடுக்கப் பட்ட மக்களின் ஒற்றுமையும், ஜனநாயக சக்திகளின் ஆதரவுடன் நடைபெறும் போராட்டங்களுமே இக்கொடுமைகளில் இருந்து விடுதலை தரும் என உறுதிபட அறிவித்தார்.

டாக்டர் அம்பேத்காருடைய கருத்துக் களும் உணர்வுகளும் ஒடுக்கப்பட்ட தலித் மக்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனை எவரும் மறுக்க முடியாது. சமீப காலமாக தலித் மக்களிடையே முன்னைவிட எழுச்சியும் போர்க்குணமும் அதிகரித்து வந்துள்ளது. இதனை இடதுசாரி இயக் கங்கள் குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி அங்கீகரித்து வரவேற்கிறது. இக்கண்ணோட்டத்தின் அடிப்படையில் தான் ஆந்திரா, தமிழ்நாடு உள்பட பல மாநி லங்களில் தீண்டாமை ஒழிப்புப்போராட் டங்களை தனித்தோ, இதர தலித் மற்றும் ஜனநாயக அமைப்புகளுடன் இணைந்தோ முன்னெடுத்துச் செல்கிறது. தமிழ்நாட் டில் பாப்பாபட்டி, கீரிப்பட்டி உள்ளிட்ட நான்கு ஊராட்சிகளின் தேர்தல், கோவில் நுழைவு, இரட்டைக்குவளை ஒழிப்பு உட்பட பல போராட்டங்கள், அருந்ததியர் உள்ஒதுக்கீடு என பல தீண்டாமை ஒழிப்புப்போராட்டங்களில் வெற்றி கண்டுள்ளது.

இப்போராட்டங்கள் பலவற்றில் தலித் அமைப்புகளையும் அருந்ததியர் அமைப் புகளையும் தன்னுடன் இணைத்து செயல்பட்டுள்ளது. இதன் ஒருகட்டமாக உத்தப்புரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் தலையீடும் அதில் கிடைத்த முதல்கட்ட வெற்றியும் தலித் மக்களிடையே நாடுதழு விய அளவில் மிகப்பெரிய தாக்கத்தையும் உத்வேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நிலம், இடஒதுக்கீடு

சாதி ஒடுக்குமுறை, தீண்டாமை ஒழிப்புப் பிரச்சனைகளில் பெரும் அக் கறைகாட்டிய டாக்டர் அம்பேத்கார் அவர் கள், இடஒதுக்கீடு என்பதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தார் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். தலித் மக்களுக்கு நிலம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் அழுத்த மாக வலியுறுத்தி வந்துள்ளார். டாக்டர் அம்பேத்கார் இயக்கம் உட்பட பல்வேறு தலித் அமைப்புகளின் நிர்பந்தம் காரண மாக வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் கூட ஒரு பகுதி தலித் மக்களுக்கு பஞ்சமி நிலம் வழங்கப்பட்டது என்பது வரலாறு. இடஒதுக்கீடு, நிலம் போன்ற அம்சங்களும் கோரிக்கைகளும் தீண் டாமை ஒழிப்பில் சமூக உரிமைகளோடு பொருளாதார உரிமைகளும் எவ்வளவு முக்கியமானவை என்பதை கோடிட்டுக் காட்டுகின்றன.

மாற்றத்திற்கான பாதை

டாக்டர் அம்பேத்கார் வாழ்ந்த காலத் தில் அவருக்கும் இடதுசாரி இயக்கங் களுக்கும் பல பிரச்சனைகளில் மாறு பட்ட கருத்துக்கள் இருந்திருக்கலாம். ஆயினும் அம்பேத்கார் வாழ்ந்த காலத் திலும் சரி, அதற்கு பிறகும் சரி சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு லட்சியங்களில் மாறு பட்ட கருத்து இருந்ததில்லை. இந்தியா வில் பல நூற்றாண்டு சாதி ஒழிப்பு, சமூக சீர்திருத்த போராட்டங்களும் வர்க்கப் போராட்டங்களும் நம் கண்ணெதிரில் அனுபவங்களாக முன்நிற்கின்றன. இந்த அனுபவங்களிலிருந்து கிடைக்கும் பாடம் என்ன? சாதியும், வர்க்கமும், சாதி ஒடுக்குமுறைகளும், வர்க்க ஒடுக்கு முறைகளும் பின்னிப்பிணைந்துள்ளன என்பதே சாதி ஒடுக்குமுறைக்கு எதி ரான போராட்டம் என்றால் நிலம், ஓரள வுக்கேனும் நிவாரணம் தரும் இடஒதுக் கீடு போன்ற பிரச்சனைகளையும் சேர்த் தே எடுத்தாக வேண்டும். அதேபோல் வர்க்க ஒற்றுமை- வர்க்கப் போராட்டம் எங்கும் தவிர்க்க முடியாதபடி தீண்டாமை ஒழிப்பு, சாதி ஒடுக்குமுறை ஒழிப்பு போன்ற சமூகப் பிரச்சனைகளை கையில் எடுத்தாக வேண்டும். சமூக உரிமையும், பொருளாதார உரிமையும் ஒன்றுக்கொன்று துணை நிற்கக்கூடிய வையே. முரண்பட்டவை அல்ல. இந்த அணுகுமுறையுடன் இடதுசாரி இயக்கங் களும், தலித் அமைப்புகளும், இதர ஜனநாயக அமைப்புகளும் ஒன்றுபட்டு செயலாற்ற முன்வரவேண்டும். இது சமூக விடுதலைக்கான பாதை மட்டுமல்ல; சமூக மாற்றத்திற்கான பாதை இதையும் உள்ளடக்கியதுதான்.

No comments: