Showing posts with label மின்சாரம். Show all posts
Showing posts with label மின்சாரம். Show all posts

Tuesday, December 6, 2011

கூடங்குளம் - ஆற்றலா? அழிவா?

குவலயத்தின் உயிர்களையெல்லாம் வெற்றி கொண்டு செழித்திருக்கும் மனித இனம் தன் கண்டுபிடிப்புகளால் தன்னைத் தானே அழித்துக்கொள்வதும் நடந்துகொண்டுதானிருக்கிறது. அவ்வாறான கண்டுபிடிப்புகளில் ஒன்றுதான் அணுஉலை.

1930ல் முதன்முதலில் அணுவின் கூறாக நியூட்ரான் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர்தான் அணுஉலைகள் தோன்றின. அணுவைப் பிளக்கும்போது கிடைக்கும் பேராற்றல் பேராசை கொண்ட மனிதனை ஈர்த்தது. பூமியில் கிடைக்கும் யுரேனியம், தோரியம், புளூட்டோனியம் ஆகிய தனிமங்களை அணுவில் செலுத்திப் பிளந்து அதன் மூலம் கிடைக்கும் ஆற்றலைக் கொண்டு நீரை ஆவியாக்கி அதன் மூலம் டர்பனைச் சுழற்றி, அதனோடு பொருத்தப்பட்டிருக்கும் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் தயாரிப்பதே அணு உலைகளின் செயல்பாடு. அவற்றில் பயன்படுத்தப்படும் தண்ணீரின் தன்மையைப் பொருத்தும், பயன்படுத்தும் முறை பொருத்தும் அணு உலைகளை நான்கு வகைகளாக பிரித்துள்ளனர் விஞ்ஞானிகள்.

அணு உலைகளின் கழிவுகளான யுரேனியத்தையும் புளூட்டோனியத்தையும் கொண்டு நீர்மூழ்கிக் கப்பல்களை இயக்கலாம், அணுகுண்டு தயாரிக்கலாம். வல்லரசு நாடுகள் இதையே செய்கின்றன. சப்பானில் வீசியது கூட இவ்வாறு செய்யப்பட்ட அணுகுண்டின் சக்தியை சோதித்துப் பார்க்கும் முயற்சிதான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்த வல்லாண்மையில்தான் ஒளிந்துகொண்டுள்ளது இரகசியம். இதுதான் அணுசக்தி விஞ்ஞானிகளும், 2020ல் இந்தியா வல்லரசு என்ற கனவைக் கடைவிரித்த மேதகு அப்துல் கலாம் அவர்களும் கூடங்குளம் அணு உலைக்கு பரிந்து வரக் காரணம்.

இன்றைக்கு சற்றேறக்குறைய 400 அணுஉலைகள் உலகெங்கிலும் செயல்படுகின்றன. இதில் அமெரிக்காவில் மட்டும் 104 அணு உலைகளும், சப்பான், செருமனி, ஃபிரான்ஸ் போன்ற நாடுகளில் தலா 40-50 அணு உலைகளும், இந்தியாவில் 20 அணு உலைகளும் அதில் தமிழகத்தில் 1 அணு உலையும் செயல்படுகின்றன. தற்போது இந்தியாவில் நம் கவனம் கோரும் கூடங்குளத்தையும் சேர்த்து 10 அணு உலைகள் தயாரிப்பில் உள்ளன.

அப்படி எவ்வளவுதான் மின்சாரம் தேவை இந்தியாவிற்கு? இவ்வாண்டிற்கான தேவை 175000 மெகாவாட். இதில் 60-65 சதவிகிதம் நிலக்கரி மூலம் தயாரிக்கப்படுகிறது. 25% நீர் மற்றும் காற்று மூலம் பெறப்படுகிறது. சூரிய வெப்பம் மற்றும் இதர வழிகள் போக 4780 மெகாவாட் அதாவது 2.73% சதவிகித மின்சாரமே அணு உலைகளால் தயாரிக்கப்படுகிறது. இதில் மின்பகிர்வின்போது ஏற்படும் இழப்பினால் வீணாவதே அதிகம் என்கிறார்கள் கூடங்குளத்தில் 2 அணு உலைகள் முடியும் தருவாயிலும், 4 அணு உலைகள் அனுமதி வழங்கப்பட்டு தயாரிப்பிலும் இருக்கின்றன. மின் உற்பத்திக்குத் தயாராக இருக்கும் அணு உலையின் திட்டச் செலவு ரூபாய் 13615 கோடி. உற்பத்தித் திறன் 2000 மெகாவாட்.

நிலக்கரி பற்றாக்குறையாகி வரும் வேளையில் அணு உலைகள் இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தத்தின் அமெரிக்கப் பிரதிநிதி ஆஷ்லே டெல்லிஸ் சொல்வது போல் சொகுசு வசதிதானா? இருப்பின் மக்கள் ஏன் பீதியடைய வேண்டும்? தெருவில் இறங்கி போராடவேண்டும்?

அணு உலைகள் உலகில் செயல்பட ஆரம்பித்த இந்த 80 ஆண்டுகளில் இதுவரை 1979ல் அமெரிக்காவில் 3மைல் தீவு விபத்து, 1986ல் ருசியாவில் செர்னோபில் விபத்து, மிக அண்மையில் 2011ல் சப்பானில் புகுஷிமா விபத்து போன்ற பெரும் விபத்துக்களைச் சந்தித்துள்ளது மனித இனம். இது தவிர சிறு விபத்துகள் எங்கெங்கும் நடந்த வண்ணமே உள்ளன. அணு உலைகள் தயாரிப்பு வெகு சில முதலாளிகள் கையிலேயே இருப்பதால் அதன் கட்டுமானக் குறைபாடுகளை கண்காணிப்பதோ, குறைபாடுள்ள உலைகளை நிராகரிப்பதோ நடப்பதில்லை. அவ்வாறான குறைபாடுகளால் கதிர்வீச்சுக் கசிவு என்பது ஒரு நிரந்தர அச்சுறுத்தலாகவே இருக்கிறது.

அணு உலைக் கழிவுகளை அழிப்பதற்கான தொழில்நுட்பம் இதுவரை மனிதனால் கண்டுபிடிக்கப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் ஒரு அணு உலையின் ஆயுட்காலம் 40-50 ஆண்டுகள் மட்டுமே. அதன்பிறகும் அதில் கதிர்வீச்சு இருக்கும். அதனைப் பாதுகாப்பதே ஒரு பெருஞ்செலவு பிடிக்கும் தொழில்நுட்பம். அணுக்கழிவான யுரேனியம் 2 லட்சம் ஆண்டுகளுக்கு கதிர்வீச்சை வெளியிடுமாம். அதனினும் இக்கதிர்வீச்சு பல்லாயிரம் மைல்கள் கடக்கவல்லது என்பதும் அணு உலைகளின் ஆபத்தை நமக்கு உணர்த்துகின்றன.

அண்மையில் நடந்த புகுஷிமா விபத்தில் புகுஷிமாவிலிருந்து 8600 கி.மீ. தொலைவில் இருக்கும் அமெரிக்க மாகாணம் கலிபோர்னியாவிலும் தலைநகர் வாஷிங்டனிலும் கதிர்வீச்சு பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்ற தகவல் நிலைமையின் தீவிரத்தை நமக்கு தெரிவிக்கின்றன. புகுஷிமாவிலிருந்து சென்னை 6600 கி.மீ. தொலைவே. காற்றின் பாதை அமெரிக்கா நோக்கி இருந்ததால் நமக்கு பாதிப்பு இல்லை என்று அதிகாரிகள் சமாளித்தார்கள். ஆனால் அடுத்து பெய்த மழைக்கு கொரியா கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்க பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தது. எனில் காற்றின் திசை இந்தியா நோக்கியும் திரும்பும் என்றுதானே பொருள்?

அணுஉலைக் கழிவுகளின் கதிர்வீச்சு பல தலைமுறைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தவல்லன. புற்றுநோய், மலட்டுத்தன்மை, ஊனமுற்ற குழந்தைகள் பிறப்பு போன்றவற்றை ஏற்படுத்துவன. அயோடின் 131 எனும் வாயுக்கழிவு வெளியேறுவதால் ஆட்டோ இம்யூன் தைராய்டு வியாதியும் தைராய்டு புற்றுநோயும் ஏற்படும்.

சப்பானில் புகுஷிமா அணு உலையின் மூன்றடுக்கு குளிர்விப்பான்கள் அடுத்தடுத்து பழுதடைந்த விபத்தில் உயிரிழப்பு சில நூறு மட்டுமே. பேரிடர் மேலாண்மையில் கொட்டை போட்டவர்கள் சப்பானியர்கள். அவர்கள் கண்டிராத பேரிடர்களே இல்லை எனலாம். அணு உலை விபத்து நடந்தவுடன் அந்நாட்டு அரசு மக்களுடன் இருப்பதாக அறிவித்தது. 2 நாட்களில் 20 கி.மீ விட்டத்திற்கு 2 லட்சம் மக்களை அப்புறப்படுத்தினார்கள் அவர்கள். மேலும் 2 லட்சம் பேரை வீட்டுக்குள் இருக்க வைத்தார்கள். ஆனால் இங்கு நிலைமை அப்படியா? உண்மை இருக்கிறதா முதலில் நம் அதிகாரிகளிடம்?

சுனாமிக்கு முன் கூடங்குளத்தில் அணு உலை கடல்மட்டத்திலிருந்து 5 மீட்டர் உயரத்தில் உள்ளதென தெரிவித்தவர்கள், சுனாமிக்குப் பின் 10 மீட்டர் உயரத்தில் உள்ளதென்றும், தற்பொழுது 7 மீட்டர் உயரத்தில் உள்ளதென்றும் சொல்வதன் காரணி என்ன? சுனாமியின் போது கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் விஞ்ஞானிகளும் உயர் அதிகாரிகளும் மட்டுமே பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

சப்பானியக் கப்பல்கள் அணுஉலைகளைக் குளிர்வித்த கதிர்வீச்சு நிறைந்த கடல்நீரை அடி நீராக (பல்லஸ்ட் வாட்டர்) கொணர்ந்து சத்தமின்றி சென்னைத் துறைமுகத்தில் கலந்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியா கடந்த மே மாதம் செய்தி வெளியிட்டது. சீனா மற்றும் ஐரோப்பிய துறைமுகங்கள் அபாயச் செய்தி வெளியிட்டு தடுத்தன. கோவா துறைமுகத்தில் அக்கப்பல்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இங்கு?

1948ல் ஏற்படுத்தப்பட்டது இந்திய அணுசக்தி ஆணையம். 1954லிருந்து இயங்குகிறது இந்திய அணுசக்தித் துறை. அணுசக்தியை நெறிப்படுத்தவும் வாரியம் செயல்படுகிறது. ஆனால் இவை நம் மக்கள் நலன்களை இன்று பேணுகின்றனவா? பாதுகாப்பு குறித்த பயத்தைப் போக்குகின்றனவா? பொதுநல வழக்குகள் கூட அணு உலைப் பாதுகாப்பு அணுசக்தி சட்டப்பிரிவு 18ந் கீழ் இரகசியமானது என தள்ளுபடி செய்யப்படுகின்றன. அமெரிக்காவுடனான 123 ஒப்பந்தம் அணு விபத்து எப்பொழுது ஏற்பட்டாலும் ரூ.2500 கோடி இழப்பீடு வழங்கினால் போதுமானது என்கிறது. 35 ஆண்டுகள் கழித்து நிகழ்ந்தாலும்!

அவர்கள் சொல்லும் உலையையே வாங்கவேண்டும். அதன் பராமரிப்புக்கும் அவர்களையே கூப்பிடவேண்டும். மொத்தத்தில் சப்பானில் விபத்துக்கு காரணமான அணு உலைகளை வழங்கிய அமெரிக்க நிறுவனமான ஜெனெரல் எலக்ட்ரிக் நிறுவனத்திற்கு சாதகமாகவே அந்த ஒப்பந்தம் அமைந்திருக்கிறது. அணுசக்தி இழப்பீட்டுத் தொகை மசோதா இயற்கை இடர்ப்பாடுகளால் அணு உலைகளில் விபத்து நடந்தால் இழப்பீட்டுத் தொகை வழங்கத் தேவையில்லை என்று கூறுகிறது. சுனாமிக்குப் பிறகு கல்பாக்கத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் நோய்ப்பரவலும் ஊனமும் அதிகமாகியுள்ளன. புதுச்சேரியைச் சேர்ந்த 4 மீனவக் குப்பங்களில் சுனாமிக்குப் பிறகு புற்றுநோய், பிறவி ஊனம், கருக்கலைதல் அதிகமாகியிருப்பதை புதுச்சேரி அரசே ஒப்புக்கொண்டுள்ளது. கதிர்வீச்சு காரணமா என்று கண்டறியப்படவேண்டியிருக்கிறது.

கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர்களிடையே மல்டிபில் மயலோமா எனும் எலும்பு மஜ்ஜை புற்றுநோய் தாக்குதல் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் அரசோ அதிகாரிகளோ இன்றுவரை சரியான முறையில் பொதுமக்கள் மற்றும் சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்களின் கேள்விகளுக்கு பதிலிறுக்கவில்லை. மாறாக அவர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மருத்துவர் புகழேந்திக்கு சரியான விளக்கங்களைத் தர அதிகாரிகள் மறுக்கின்றனர். அரசுக்கு கிண்கிணி அடிக்கும் சில நாளேடுகள் மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கும் போராளிகளைக் கொச்சைப்படுத்திய வண்ணம் இருக்கின்றன.

அணு உலைகள் இன்றி நம் வாழ்க்கை நகரும். கிரீன்லாந்தில் 100% மாற்று எரிசக்திக்கு மக்கள் மாறி இருக்கிறார்கள். 2040 க்குள் செருமனி மொத்த அணு உலைகளையும் மூடப்போவதாக அறிவித்திருக்கிறது. இவை ஒரு நல்ல தொடக்கமே. மின் பகிர்வின் இழப்பை ஈடுகட்ட நிலக்கரி மற்றும் நீர் மின் நிலையங்களை அதிக இடங்களில் அமைத்து மின்சாரத்தை சேமிப்பதும் நம்மிடம் பெருமளவில் இருக்கும் இயற்கையின் கொடையான சூரியசக்தியை பயன்படுத்துவதும் மாற்று எரிசக்திகளை ஊக்குவிப்பதுமே நம் இன்றைய தேவையாகும். வல்லரசு கனவில் இந்தியாவை ஒருங்கிணைப்பதை விடவும் பாதுகாப்பான மண்ணையும் நீரையும் காற்றையும் நம் வருங்கால இளைய தலைமுறைக்கு விட்டுச்செல்வது நம் ஒவ்வொருவர் மட்டுமல்லாது நம் அரசின் தலையாய கடமையுமாகும்.

நன்றி: பூவுலகு மற்றும் திரு.சாருமா

Wednesday, July 20, 2011

காற்றாலை - ஒரு அலசல்

உலகில் காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்வதில் இந்தியா ஐந்தாம் இடத்தில் உள்ளது. கடந்த மார்ச் வரை 14,157 MW வரை முழு நிறை கருவி கல அமைவு ( Installation ) நிறைவடைந்துள்ளது. இதில் தமிழகத்தில் 5,900 MW அளவு வரை மின் உற்பத்தி செய்ய கருவிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் சுமார் 3,400 MW வரையே மின் உற்பத்தி கடந்த ஜூன் மாதம் கிடைத்தது.

♦ ஒரே இடத்தில் இருந்து காற்றாலை மூலம் பெறப்படும் மின்அளவில் நாகர்கோவிலுக்கு பக்கத்தில் உள்ள ஆரல்வாய்மொழி ஆசியாவிலே முதல் இடத்தில் உள்ளது. இங்கு கிட்டத்தட்ட 2500 MWக்கு மின் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் தமிழகத்தில் உடுமலைபேட்டை, தாழையூத்து, கயத்தார் மற்றும் தேனி பகுதிகளில் இருந்தும் நாம் காற்றாலைகளை பயன்படுத்துகிறோம். இது தவிர நாற்பத்தி ஒன்று இடங்களை ஆற்றல் உள்ள இடங்களாக கணித்துள்ளனர். தமிழகம் இந்தியாவிற்கு ஊழலில் மட்டும் அல்ல காற்றாலை மின் உற்பத்தியிலும் முதல் மாநிலமாக திகழ்கிறது .

♦ உலகின் முண்ணனி நிறுவனங்களான வெஸ்டாஸ், கமேசா முதலிய நிறுவனங்கள் இந்தியாவில் சென்னையில்தான் தங்கள் தலைமை அலுவலகம் மற்றும் ஆராய்ச்சிப் பிரிவையும் கொண்டுள்ளனர். இது தவிர RRB, லேட்டினர் ஸ்ரீராம், வின் வின்ட், ரீஜென் போன்ற முண்ணனி நிறுவனங்களும் சென்னையில் தான் உள்ளன. இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனம் சுஸ்லானின் தலைமை அலுவலகம் புனேவில் உள்ளது. முதலில் NEPC என்ற நிறுவனம்தான் இந்த காற்றாலை தயாரிப்பதில் தீவிரம் காட்டியது. பெரும்பாலும் தமிழகத்தில் பத்து வருடங்களுக்கு முன் இவர்கள் தான் அதிக அளவில் காற்றாலைகளை பிறருக்கு தயாரித்து கொடுத்தனர். தமிழகத்தில் பெரிய நிறுவனங்கள் (உம் : மெட்ராஸ் சிமெண்ட்ஸ், அசோக் லேய்லாந்து, முதலியன) மட்டுமல்லாது நடுத்தர நிறுவனங்களும் தங்களுக்கு சொந்தமாக காற்றாலைகளை வைத்துள்ளனர்.

♦ முதலில் 250 KW எந்திரம் செய்து கொண்டிருந்த நிறுவனங்கள் இப்போது 2000 KW எந்திரம் தயாரிக்கத் தொடங்கிவிட்டன. இவை பல்லிணையகம் மற்றும் பல்லிணையகமற்ற தொழிற்நுட்பம் கொண்டவை. பல்லிணையகத்தில் நீராற்றலால் அலகை சரி செய்தல் ( HYDRAULIC PITCH ) மற்றும் மின் ஆற்றலால் சரி செய்தல் (ELECTRIC PITCH) என இரு வகைகள் உள்ளன. பல்லிணையகம் தயாரிக்கும் முண்ணனி நிறுவனங்களான ஹான்சென் கோவையிலும் விநேர்ஜி சென்னையிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

♦ இரு வருடம் முன்பு தமிழக மின் வாரியம் இதில் இருந்த தயாரிக்கப்படும் மின்சாரத்தின் ஒரு யூனிட்டிற்கு Rs. 3.39 / - தந்தனர். ஒரு காற்றாலை அமைக்க ஒரு KW க்கு ஐந்து லட்சம் ருபாய் வரை செலவாகும். அலகு ( blade ), குவியம் (HUB), NACELLE போன்றவை ஒரு காற்றாலையின் முக்கிய பாகங்கள். தமிழகத்தில் ஆண்டு சராசரி காற்று சக்தியின் அடர்த்தி ஆரல்வாய்மொழியில் உள்ள முப்பந்தல் என்ற இடத்தில் அதிகமாக 406 w /m2 ( 20 /25 m இல் அளக்கப்பட்டது) என்ற அளவில் உள்ளது.

♦ காற்றாலை நிறுவனங்கள் தயாரித்த மின்சாரத்தை பெற்றுக் கொண்ட தமிழக மின் வாரியம் கடந்த ஏப்ரல் மாதம் வரை ரூ.1200 கோடி வரை பணம் செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளது. இதனால் இவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். பிற மாநிலங்களில் ( கர்நாடக மற்றும் மகாராஷ்டிராவில் தமிழகத்தை விட ஒரு யுனிடிற்கு அதிகமாக மின் வாரியம் பணம் தருகிறது). தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் காற்றாலைகள் ஏற்கனவே நிறுவப்பட்டு முடிந்து விட்டதால் இப்போது பெரும்பாலான நிறுவனங்கள் குஜராத், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் அதிக அளவில் காற்றாலைகள் அமைக்க முடிவு செய்துள்ளன.

நன்றி: அழகிய இளவேனில்

Tuesday, July 12, 2011

மின்சாரம் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு தகவல்கள்

இந்திய வீடுகளில் 30 சதவீத எரிபொருள் செலவு, மின் விளக்குகளால் மட்டும் ஏற்படுகிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இதனால் தேவையில்லாத நேரத்தில் விளக்குகள், மின் சாதனங்களை அணைத்துவிடுவது உத்தமம். அலுவலகத்திலும் வீட்டிலும் தேவையில்லாமல் இயங்கும் மின்சாதனங்களை நிறுத்திவிடுங்கள். எதையும் ஸ்டாண்ட் பை நிலையில் வைக்காதீர்கள். முழுமையாக நிறுத்திவிடுங்கள். இதனால்தான் அதிக மின்சார விரயம் ஏற்படுகிறது. அத்துடன் விளக்குகளை குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை சுத்தம் செய்தால் அதிக வெளிச்சமும், மின்சாதனங்களை முறைப்படி பராமரித்தால் அதிக பயனும் கிடைக்கும்.

தற்போது மின்சாரத்தை மிகக் குறைவாகப் பயன்படுத்தும் சி.எப்.எல். குறுங்குழல் விளக்குகள் வந்துவிட்டன. எடுத்துக்காட்டாக 75 வாட் திறன் கொண்ட சாதாரண விளக்கு 100 மணி நேரம் எரிய 7.5 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்துகிறது. ஆனால் அதேநேரம் 15 வாட் சி.எப்.எல் விளக்கு அதே அளவு வெளிச்சத்தைக் கொடுத்தாலும் 1.5 யூனிட் மின்சாரத்தையே செலவழிக்கும். இதன் காரணமாக மின்சார செலவு குறையும்.

மேலும் நமது வீட்டை சூரியஒளி பரவும் வகையில் வடிவமைப்பதும், முடிந்த வரை இயற்கை வெளிச்சத்தை பயன்படுத்துவதும் அவசியம். இது மின்சார செலவை குறைப்பது மட்டுமின்றி கண் பார்வைத்திறனையும் பாதுகாக்கும். அதேபோல காற்று வீசும் திசையைப் பார்த்து ஜன்னல்களை அமைத்தாலே வீடு குளிர்ச்சியாக இருக்கும். காற்று வரும் திசையில் பெரிய ஜன்னல்கள், காற்று வெளியேறும் பகுதியில் சிறிய ஜன்னல்களை பொருத்த வேண்டும்.

மின்சாதனங்களை வாங்கும்போது, பி.இ.இ நட்சத்திர குறியீட்டைப் பார்த்து வாங்க வேண்டும். அதிக நட்சத்திரம் கொண்ட மின் சாதனங்கள் அதிக மின்சாரத்தை சேமிக்கும் தன்மை கொண்டவை.

எதிர்காலத்தில் நாம் எதிர்கொள்ள உள்ள மிகப்பெரிய பிரச்சினை நாம் தேவையில்லை என்று ஒதுக்கும் மின்சாதனக் கழிவுகளே. எத்தனை கணினிகள், அவை சார்ந்த உபரி பொருள்கள் சில வருடங்களிலேயே வீணாக உள்ளன என்று பார்த்தால் அது உங்களை ஆச்சரியப்படுத்தும். எனவே, எந்த ஒரு மின்சாதனத்தை வாங்குவதற்கு முன்பும் அது தேவையா, அவசியமா என்று யோசித்து வாங்குங்கள்.

அதேநேரம் நமக்குத் தேவையற்ற மின் சாதனங்கள் இயங்கும் நிலையில் அரசு பள்ளிகள், தொண்டு நிறுவனங்களுக்கு இலவசமாகக் கொடுத்து விடலாம். முடிந்த வரை எல்லாவற்றையும் பயன்படுத்துவது மட்டுமே சூழலை காக்க கைகொடுக்கும்.