Showing posts with label அறிவியல் தகவல். Show all posts
Showing posts with label அறிவியல் தகவல். Show all posts

Monday, June 27, 2011

பெட்ரோல் போடப் போகிறீர்களா?

உங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா?

அதற்கு முன் கீழே உள்ள தகவல்களைப் பற்றிச் சிந்தியுங்கள்.

எல்லா பெட்ரோல் பம்புகளும் தங்கள் சேமிப்புத் தொட்டிகளை நிலத்துக்கு அடியில் பதித்து வைத்திருக் கின்றன. நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் போதே எரிபொருள் அடர்த்தியுடன் இருக்கும். வெப்பநிலை அதிகரிக்கும்போது, பெட்ரோல் விரிவடையும். எனவே, மதியம், மாலையில் நீங்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினால், அது மிகச்சரியாக ஒரு லிட்டர் இருக்காது. எனவே, நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் அதிகாலை நேரங்களில் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்புங்கள்.

பெட்ரோல் வணிகத்தில் வெப்பஅளவும், அடர்த்தியும் மிக முக்கியமானவை. பெட்ரோல் ஒரு டிகிரி அதிக வெப்பநிலையில் இருந்தால் அது மிகப் பெரிய மாற்றம். ஆனால் பெட்ரோல் பங்கில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் பார்க்கப்படுவதில்லை. அதேபோல உங்கள் வாகனத்தின் பெட்ரோல் தொட்டியை எப்பொழுதும் முழுமையாக நிரப்பாதீர்கள். அதனால் உங்களுக்கு நஷ்டமே ஏற்படும். பாதி மட்டுமே நிரப்புங்கள். அதிக எரிபொருள் இருந்தால், அந்தத் தொட்டியில் காற்று குறைவாகவே இருக்கும். நாம் நினைப்பதைவிட வேகமாக பெட்ரோல் ஆவியாகக் கூடியது. பங்கின் பெட்ரோல் சேமிப்புத் தொட்டிகளில் மிதக்கும் கூரைகள் இருக்கும். இதன் காரணமாக உள்ளே பெட்ரோலுக்கும் காற்றுமண்டலத்துக்கும் இடையே இடைவெளி இருக்காது. எனவே, ஆவியாதல் குறையும். வாகன பெட்ரோல் தொட்டியில் பாதி நிரப்பினால், பெட்ரோல் ஆவியாவதை ஓரளவு குறைக்க முடியும்.

அதேபோல நீங்கள் பெட்ரோல் நிரப்பப் போகும்போதுதான், அந்த பங்கில் லாரியில் இருந்து பெட்ரோல் இறக்கப்படுகிறது என்றால், அப்போது வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள். கிடங்கின் அடியில் தேங்கியிருந்த கசடுகள் அப்போது கலங்கி இருக்கும். இது எஞ்சினை பாதிக்கும்.

நன்றி: பூவுலகு மாத இதழ்

Tuesday, October 26, 2010

எல்லா பொருட்களும் செவ்வகமாக இருப்பதேன்?

ஏன் டிவி திரை, சினிமா திரை, போன்றவை செவ்வகமாகவே இருக்கின்றன? சதுரமாகவோ செங்குத்தாகவோ இருந்தால் என்ன என்று எப்போதாவது நினைத்ததுண்டா? நினைத்திருப்பீர்கள் இதோ அதன் இரகசியம். உலகில் மிக மிக அழகாக இருப்பதாக நாம் நினைக்கும் கட்டிடங்கள், ஓவியங்கள், சிலைகள் அனைத்திலும் ஒரு ‘பொன் விதி' இருப்பதை பலகாலமாகவே அழகியல் வல்லுநர்கள் தெரிந்து வைத்திருக்கின்றனர். அந்த பொன்விதியை பொன் விகிதம் என்றும் கூறுவார்கள்.


அகலத்தைவிட நீளம் ஒன்றரை மடங்கு இருந்தால் அது அழகாக இருக்கிறது. எகிப்திய பிரமிடாக இருந்தாலும், பார்த்தினான் மண்டபமாக இருந்தாலும் சோழர்கால கோயில் மண்டபங்களாக இருந்தாலும், சங்கின் சுருளாக இருந்தாலும் செயற்கை இயற்கை என்று பேதமில்லாமல் எல்லா அழகிய பொருள்களிலும் மேற்கூறிய பொன்விகிதம் நிலவுவதைப் பார்க்க முடிகிறது.

இதன் இரகசியம் நமது பார்வையில் உள்ளது. நமது கண் உலகை ஒரு செவ்வகமாகத்தான் பார்க்கிறது. இடமிருந்து வலமாக பார்வை வரியோட்டம் செய்யும்போது குறிப்பிட்ட அளவுக்கு மேல் அது பக்கவாட்டில் செல்வதில்லை. அவ்வாறே உயரத்திலும் அது குறிப்பிட்ட அளவுக்கு மேல் அதிகரிப்பதில்லை. அந்த வரியோட்டம் மொத்தத்தில் ஒரு செவ்வகமாக, பொன் விகிதத்தில் அமைந்திருக்கிறது.

நாம் விலங்காக இருந்தபோது சுற்றுப்புறத்தை நோட்டம் விடும்போது ஆபத்துகளை நாம் பக்கவாட்டிலிருந்துதான் எதிர்பார்த்திருந்தோம். மேலிருந்தோ, தரையிலிருந்தோ அல்ல. எனவே நமது பார்வை அதிகமாக கிடைமட்டமான செவ்வகமாகவே அமைந்து விட்டது. அதனால் அந்த நீள அகல விகிதம் இயல்பான அழகாக நமக்குத் தெரிகிறது. அது நமது அழகுணர்வை நிர்ணயிக்கும் காரணியாக அமைந்துவிட்டது.