Thursday, March 15, 2012
தாவரங்களின் இனப்பெருக்கத்திற்குக் காரணம் எது?
மலர்கள் மலர்வதும், அதன் பின் பிஞ்சாகி, காயாகி, கனியாகி, விதையாகி, மீண்டும் விதை முளைப்பதும் நமக்குத் தெரியும். ஆனால், ஆண் செடி/மரத்தின் மகரந்தமும் (ஆண் பூவிலுள்ள மகரந்தப் பொடி) , பெண் செடி/மரத்தின் சூலகமும் (பெண் பூவின் நடுவிலுள்ள குச்சி போன்றது) வேறு வேறு இடத்தில் இருக்கின்றன. அவை காற்று, பூச்சிகள், தேனீ மற்றும் பிற விலங்குகள் மூலம், தன் இனத்தை பெருக்குவதற்காக மகரந்த சேர்க்கை செய்து, காய் கனி உருவாகிறது. சில சமயம், ஒரே பூவில்கூட, மகரந்தமும், சூலகமும் இருக்கும். இதன் பின்னணியிலுள்ள அறிவியலை, தொடர் ஆராய்ச்சி நடத்தி கண்டறிந்துள்ளனர்.
கடந்த பல ஆண்டுகளாக, போர்ச்சுகலின் ஒரு நிபுணர் குழு மகரந்தத் தாள்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவது யார் என்ற தேடலில் ஈடு பட்டிருந்தது. மகரந்தத் தண்டு வளர்வதை நிர்ணயிப்பது நீரில் உள்ள புரோட்டான் அயனி களா, கால்சியம் அயனிகளா என தவித்துப் போயிருந்தனர். எது அதன் செயல்பாட்டு மூலக் கூறு கால்வாய் என்றும், அதன் ஆட்டம், செயல் பாடு போன்றவை எது என் அறுதியிட்டுச் சொல்ல முடியாததிலும், குழப்பமான சூழல் இருந்தது. ஆனால் போர்ச்சுகலின் லிஸ்பான் பல்கலையின் சர்வதேச ஆராய்ச்சிக் குழு இதனைப் பற்றி ஜோஸ் பெயஜோ (José Feijó) என்பவரின் தலைமையில் ஆராய்ந்தது. முடிவில் இது மகரந்தத் தாள்களின் வளர்ச்சிக்கு கால்சியம்தான் காரணம் என அறிந்தனர். இவை "குளூட்டமேட் வாங்கிகள்" என்ற வேதிப் பொருள் வாயிலாக தூண்டப்பட்டு, அரிதான அமினோ அமிலம் "D சீரின்" என்பதன் மூலமாக உள்ளே நுழைகின்றன என்பது தெரிய வருகிறது.
"குளூட்டமேட் வாங்கிகள்" மற்றும் அமினோ அமிலம் "D சீரின்" என்ற இரண்டு வேதிப் பொருட்களும்தான், விலங்குகளின் மைய நரம்பு மண்டலத்தில் பல்வேறு அளவில், இரு செல்களுக்கான தொடர்புகளை உருவாக்க, மூலக்கூறு அளவில் செயல்படுகின்றன. அது மட்டுமல்ல.. இவையே, மூளையின் கற்றல் திறன், நினைவகம், பல வகையான நரம்பியல் சம்பந்தமான நோய்களான Multiple sclerosi, Alzheimer, Huntington's disease போன்றவைகளிலும் தொடர்பு உள்ளவை. அதே குளூட்டமேட் வாங்கிகளும், D சீரினும்தான், தாவரங்களின் இனப்பெருக்கத்துக்கும் உதவுகின்றன என்ற ஆச்சரியமான தகவலை போர்ச்சுகலின் ஆய்வகக் குழு கண்டுபிடித்துள்ளது. இதனால் கடந்த 20 ஆண்டு காலமாக, தாவரவியலில் தேடிக் கொண்டிருந்த இரண்டு புதிர்களுக்கான விடையும் அறியப்பட்டுள்ளது.
அதுதான், செல்லின் வெளிச் சவ்வில்,கால்சியம் கால்வாய்களின் மூலக்கூறு பணி என்ன என்பதும், தாவரங்களில் குளூட்டமேட் வாங்கி மரபணுக்களின் வேலை என்ன என்பதும்தான். இதன் மூலம் மாதிரி தாவரமான Arabidopsisசின் முதல் மரபணு பட்டியலும் அமைக்கப்பட்டுள்ளது.
நகராத தாவரத்தின் இனப்பெருக்கம் கொஞ்சம் சிக்கலானது. இதன் மகரந்தத் துகள்கள்தான், ஆண் விந்தணுக்களுக்கு சமமானவை. இவற்றை, பெண் உறுப்பான சூலக முடிக்குக் கொண்டு சென்றால்தான், மகரந்த சேர்க்கை நடந்து, இனப்பெருக்கம் நடைபெற முடியும். இப்போதைய கண்டுபிடிப்பின் மூலம், குளூட்டமேட் வாங்கிகள் சரியாக செயல்படாவிட்டால், மகரந்தத் துகள்களின் பகுதி மலடுக்கு காரணமாகிவிடும் என்பதும் அறியப்பட்டுள்ளது. மேலும் D சீரின்தான், குளூட்டமேட் வாங்கிகளை தூண்டி கால்சியம் அயனி கால்வாயை மகரந்தத் தாள்களின் மேல் ஓட வைக்கிறது. த சீரின் சரியாக செயல்படவில்லை என்றால், மகரந்தத் தாள் உருவாக்கத்தில் குறைபாடு உண்டாகும்.
இந்தக் கண்டுபிடிப்பின் மூலமாக நமக்கு ஒரு உண்மை புரிய வந்துள்ளது. தாவர, விலங்குகளின் வளர்ச்சியில் மரபணுக்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் பணி புரிகின்றன. அதைவிட இன்றியைமையாத, பரிணாமத்தின் சாவியும் கிடைத்துள்ளது எனலாம்.
பேரா.சோ.மோகனா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment