அமெரிக்க ஐக்கிய நாட்டு விஞ்ஞானிகளின் குழுவைச்சேர்ந்த கிரிஸ் ஆஸ்டின் என்ற விஞ்ஞானி , சமீபத்தில் நியூகினியாவில் இரண்டு புதிய இனங்களைச் சேர்ந்த தவளைக் கண்டுபிடித்துள்ளார். எலும்புள்ள விலங்குகளில் இதுதான் உலகிலேயே மிக மிகச் சிறியது என்பது வியப்புக்குரிய விஷயமாகும். இந்த தவளை எவ்வளவு பெரிசு தெரியுமா? சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள். இதன் அளவு 7 .7 மி.மீ தான். ஒரு இன்ச் நீளம் என்றால் உங்களுக்குத் தெரியுமல்லவா ? அந்த ஒரு இன்ச்சில் மூன்றில் ஒரு பகுதியைவிடச் சிறியது. இதற்கு முன் உலகின் சிறிய முதுகெலும்பி என்று பெயரும், பெருமையும் பெற்றிருந்த 8 மி.மீ நீளமுள்ள இந்தோனீசிய சின்ன மீனை இந்த தவளை பின்னுக்குத் தள்ளி விட்டது. இந்த குழு மூன்று மாதங்களாக உலகில் மிகப் பெரியதும், உயரமான வெப்ப மண்டல தீவான நியூகினியாவின் தீவை ஆராய்ந்து தேடித் தேடி இந்த தவளை இனங்களை கண்டுபிடித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பானது ஆஸ்டின் குழு வினருக்கு மிகப் பெரிய சவாலும்,சாதனையுமாகும்.
இம்மாத்தூண்டு தவளையைக் கண்டு பிடிப்பது ஒன்றும் சாதாரண விஷயமல்ல. இதன் பெயர் பீடோ பைரினி அமானூன்சிஸ் (Paedophryne amauensis) என்பதாகும் .இதன் ஆண் தவளையின் கீச்சிடும் ஒலி, ஒரு பூச்சியின் ஒலியைப் போலிருக்குமாம் . அதன் மூலம்தான் இந்த தவளையைக் கண்டுபிடித்தோம் என்று ஆஸ்டின் கூறுகிறார் . ஆனால் இது மிக மிகப் பெரிய கண்டுபிடிப்புதான்...! இதனைக் கண்ணால் காண்பதே பெரிய் விஷ்யம்தான். பொதுவாக நியூகினியா அதிகவகையான உயிரினங்கள் வாழும் ஓர் உயிரிப்பன்மையின் உச்ச பட்ச இடம். அந்த இடத்தில் எப்போதுமே புதிய வகை உயிரினங்களை கண்டுபிடிக்கலாம். கண்டுபிடிக்க முடியும்.அதனால்தான் ஏதாவது புதிய வகை உயிரினங்கள் கிடைக்குமா என்று தேடியவர்களுக்கு மிகப் பெரிய புதையல் அகப்பட்டதுபோல் கிடைத்ததுதான் இந்தப் புள்ளித் தவளை.இந்த தவளை பற்றிய தகவல் வெளியுக்லகுக்கும், அறிவியல் இதழிலும் 2012 , ஜனவரி 11 ம் நாள் வெளியிடப்பட்டது.
அங்கு கிடைத்த இரண்டாவது தவளை., இந்த பீடொபைரீன் அமானூன்சிஸைவிட துளியூண்டு பெரிது. அதன் அளவு, 8 .5 மி.மீ ஆகும். இந்த குட்டியூண்டு தவளையின் பெயர் பீடோபைரினி ஸ்விப்ட்டோரம் (Paedophryne swiftorum ). பொதுவாக முதுகெலும்பிகளில் மிகச் சிறியதும், மிகப் பெரியதும் கொஞ்சம் பெருமையும், பிரபலமும் உடையவை. மனித இனம் அறிந்த 60,000 வகை முதுகெலும்பிகளில், மிகப் பெரியது நீலத் திமிங்கலமே..! அது எவ்வளோ பெரிசு தெரியுமா? சுமார் 25 மீட்டர் அளவு இருக்கும். அதாவது 75 அடி. அம்மாடியோவ் ஒரு வீடு சைஸ் என்று சொல்லலாமா? அதற்கு அடுத்த படி, மிகச் சிறிய முதுகெலும்பி, இந்தோனீசிய மீன்தான் என்று இதுவரை நம்பிக் கொண்டிருந்தோம்.அதன் சைஸ் வெறும் எட்டு மி.மீ மட்டுமே. ஆனால் அந்த எண்ணத்தை தூக்கி கபளீகரம் பண்ணி சாப்பிட்டுவிட்டது இந்த துளியூண்டு பூச்சி சைஸ் தவளை. ஒரு தண்ணீர்ப் பூச்சியைவிடச் சிறியது. இந்த குட்டி,பொட்டுத் தவளையின் சைஸ் 7 .7 மி.மீ. இதுவரை உலகின் மிகப் பெரிய மற்றும் மிகச் சிறிய முதுகெலும்பிகள் நீரில்தான் இருக்கும் என்றும் நினைத்தோம். அந்த எண்ணத்தையும் முறித்துவிட்டது இந்த தவளையார். ஆமாம் இது தரை வாழ் விளங்கல்லவா ? வாழிட சூழலில் மழைக்காடுகளின் தரையில், இலைகளில்தான் இந்த மாதிரி சிறிய விலங்குகள் வாழ்க்கை நடத்துகின்றன என்று ஆஸ்டின் தெரிவிக்கிறார் . அமெரிக்க பணமான டைமில்(Dime) .(.நம்ம ஊரு ஒரு பைசா நாணயம் போலத்தான் இந்த டைம்.).இந்த தவளையை வைத்து படம் எடுத்துள்ளனர். பாருங்களேன்..!
நன்றி: பேரா.சோ.மோகனா
No comments:
Post a Comment