தேசியப் பூங்காக்கள், சரணாலயங்கள் போன்ற பாதுகாக்கப்பட்ட பகுதிகளே இந்தியாவில் பல்லுயிரியத்தின் புகலிடமாக உள்ளன. அரிய தாவரங்களும் காட்டுயிரும் இப்பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் மட்டும்தான் பார்க்க முடியுமா? அவை அப்பகுதிகளில் மட்டும்தான் குடிகொண்டிருக்க வேண்டுமா? எல்லைக்கோடு என்பது மனிதனுக்கு மட்டும்தானே, மற்ற உயிரினங்களுக்குக் கிடையாதல்லவா?
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பல இடங்களில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை ஒட்டியே தேயிலை, காப்பி, ஏலக்காய் போன்றவை விளைவிக்கப்படுகின்றன. இது போன்ற அரசுக்குச் சொந்தமில்லாத தனியார் விளைநிலங்களிலும் அரிய தாவரங்களும் காட்டுயிரும் தென்படும். இவற்றை பாதுகாக்க வேண்டியது மிகவும் முக்கியம். ஏனெனில் வனப்பகுதிகளுக்கு இடையே உள்ள தொடர்பு துண்டிக்கப்பட்டும், வனப்பகுதிகள் குறைந்தும், சிதைவுற்றும், அங்கு வாழும் உயிரினங்கள் வேட்டையாடப்பட்டும், வாழிட இழப்பால் அருகியும் வரும் இச்சூழலில் பல்லுயிர் பாதுகாப்பு என்பது பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமல்லாமல், வனச்செல்வங்கள் தென்படும் இடங்கள் அனைத்தையும் நல்ல முறையில் பாதுகாப்பது அவசியம்.
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியின் நிலப்பரப்பு பல ஆண்டுகளாக பல்வேறு மாற்றங்களை சந்தித்து வந்திருக்கிறது. இப்பகுதியில் இருந்த அடர்ந்த வனப்பகுதி 1920லிருந்து 1990 வரை 40% திருத்தப்பட்டு காப்பி, தேயிலை போன்ற தோட்டங்களாகவும், நீர்மின் திட்டங்களுக்காகவும் மாற்றப்பட்டுள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தேயிலைத் தோட்டங்களின் மொத்தப் பரப்பு சுமார் 1,19,000 ஹெக்டேர், காப்பி சுமார் 3,40,000 ஹெக்டேர் மற்றும் ஏலக்காய் சுமார் 73,000 ஹெக்டேர். இவை அனைத்தும் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகப் பகுதிகளில் பரவியுள்ளன. மிகப்பெரிய நிலப்பரப்பில் இத்தோட்டங்கள் இருந்தாலும், இவற்றில் பெரும்பான்மையான பகுதிகள் அரசால் பாதுகாக்கப்பட்ட, பல்லுயிரியம் மிகுந்த இடங்களுக்கு மிக அருகிலேயே அமைந்துள்ளன. பலவிதமான காட்டுயிர்களும், அரிய தாவரங்களும் காப்பி மற்றும் தேயிலைத் தோட்டங்களில் தென்படுவதற்கு இதுவே காரணம். ஆனால் இப்பகுதிகளில் வாழும் இந்த உயிரினங்களைப் பாதுகாக்கவோ, சரியான முறையில் பராமரிக்கவோ எந்த முறையான திட்டமோ, சரியான மேலாண்மைக் கொள்கைகளோ இல்லை.
தேயிலை, காப்பி மற்றும் இதர தோட்டங்களில் அவற்றைப் பராமரிக்கவும் உற்பத்தியைப் பெருக்கவும் கையாளப்படும் செயற்கை, வேதி முறைகள் அப்பகுதியில் உள்ள பல்லுயிரியத்தையும், சுற்றுச்சூழலையும் பெரும்பாலும் பாதிக்கின்றன. இதற்கு பல உதாரணங்களைப் பட்டியலிடலாம். உற்பத்தியை பெருக்குவதற்காக எஞ்சியுள்ள மழைக்காட்டுத் தீவுகள், மலை உச்சியிலமைந்த புல்வெளிகள் ஆகியவற்றை முழுவதுமாகத் திருத்தி ஓரினப் பயிர்களை பயிரிடுதல், எஞ்சியுள்ள வனப்பகுதிகளையும் சீரழித்தல், திருட்டு வேட்டை, தோட்டங்களில் தென்படும் உயிரினங்களுக்கு எந்த வகையிலும் பயன்படாத வெளிநாட்டு மரங்களை நிழலுக்காகவும், விறகுக்காகவும் வளர்த்தல், நச்சுமிக்க, தடைசெய்யப்பட்ட வேதி உரங்களை கட்டுப்பாடில்லாமல் பரவலாக பயன்படுத்துதல், தொழிற்சாலை, குடியிருப்புக் கழிவுகளை ஓடையில் கலந்து நல்ல தண்ணீரை மாசுபடுத்துதல், தோட்டத்தில் அம்மண்ணில் இயற்கையாக வளரும் இயல்தாவரங்களை களைக்கொல்லிகளை அடித்தும், வெட்டியும் அப்புறப்படுத்துதல், ஓடைகளின் கரைப்பகுதி வரை பயிரிட்டு வேதி உரங்களை தெளிக்கும்போது அவை தூய நீரோடு கலத்தல் போன்றவை இதற்கான உதாரணங்களில் சில.
தேயிலை, காப்பித் தோட்ட நிர்வாகிகளில் பெரும்பாலோர் அவற்றின் உற்பத்தியை பெருக்கும் வியாபார நோக்குடன் மட்டுமே செயல்படுகின்றனர். மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளிலுள்ள இத்தோட்டங்களால் அங்குள்ள பல்லுயிரியத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் எப்படிப்பட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதைப் பற்றிய விழிப்புணர்வும், அந்த பாதிப்புகளை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதும் தோட்ட நிர்வாகத்தின் அடிப்படைக் கடமை. வியாபாரத்தையும், பயிர் உற்பத்தியையும் மேம்படுத்த சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத நடவடிக்கைள் எடுப்பது அவசியம். எனினும் அது போன்ற செயல்பாடுகள், இந்தியாவில் மிகச்சில இடங்களில், மிகச்சொற்பமான அளவிலேயே நிகழ்கின்றன.
தோட்ட நிர்வாகம் எவ்வாறு சுற்றுச்சூழலுக்கும் பல்லுயிர்ப் பாதுகாப்புக்கும் எவ்வாறு துணைபுரிய முடியும்? மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள தேயிலை, காப்பி மற்றும் இதர தோட்டங்களில் எஞ்சியுள்ள, அங்குமிங்கும் சிதறிக்கிடக்கும் சிறுசிறு மழைக்காட்டுத் தீவுகளையும், சோலைப் புல்வெளிகளையும், ஓடைகளையும், ஓடையோரக் காடுகளையும் கவனமாகப் பாதுகாக்க வேண்டும். முக்கியமாக பல்லுயிரியம் மிகுந்துள்ள ஆனைமலை மற்றும் நீலகிரிப் பகுதிகளில் அமைந்துள்ள தீவுக்காடுகளை மேலும் சீரழிக்காமல் அங்கு தஞ்சமடைந்துள்ள அரிய உயிரினங்களான யானை, பெரிய இருவாசி (Hornbill) மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மட்டுமே வாழும் ஓரிட வாசிகளான சோலை மந்தி (சிங்கவால் குரங்கு), நீலகிரி கருமந்தி, மலபார் இருவாசி போன்ற உயிரினங்களையும் பாதுகாக்க வேண்டும்.
இத்தோட்டங்களில் நிழலுக்காக வளர்க்கப்படும் சில்வர் ஓக், அல்பீசியா, மீசோப்சிஸ் போன்ற நம் மண்ணுக்குச் சொந்தமில்லாத அயல்மரங்களை வளர்ப்பதைத் தவிர்த்து தோட்டம் அமைந்துள்ள இடம், மழையளவு மற்றும் உயரத்துக்கு ஏற்றவாறு அப்பகுதியில் இயற்கையாக வளரும் மரங்களை வளர்க்கலாம். இது அப்பகுதியிலுள்ள உயிரினங்களுக்கு வாழ்வதற்கான இடத்தையும், உணவையும், இடம்பெயர்வதற்கு உதவியாகவும், அம்மண்ணுக்கு இயற்கையான செழிப்பையும் தரும். மண்ணரிப்பைத் தடுக்கும் வகையில் தாவரங்களை மலைச்சரிவுகளில் வளர்த்தல், ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை, வேதி உரங்களின் பயன்பாட்டைக் குறைத்தல் அல்லது முற்றிலுமாக தவிர்த்தல், தோட்டப் பண்ணைகளிலும் அது சார்ந்த தொழிற்சாலைகளிலும், வீட்டுக் குடியிருப்புப் பகுதிகளிலும் சரியான கழிவுக் கட்டுப்பாடு மற்றும் கழிவு மேலாண்மையை கடைபிடித்தல் போன்றவை தோட்ட நிர்வாகங்கள் கடைபிடிக்க வேண்டிய நல்ல செயல்பாடுகளில் சில. அதோடு மட்டுமல்லாமல் தோட்டத் தொழிலாளர்களுக்கு முறையான வீடு, கல்வி, மருத்துவ வசதி, சரியான சம்பளம் போன்ற செயல்பாடுகள் தோட்ட நிர்வாகத்தின் சமுதாய கடமையுணர்வை எடுத்துக்காட்டவும், சமூகத்தில் நற்பெயரைப் பெறவும், விளைபொருளின் தரத்தை உயர்த்தவும் உதவும்.
சரி, இவ்வாறு ஒரு தோட்ட நிர்வாகம் நல்ல செயல்பாடுகளை கடைபிடிப்பதால் அவர்களுக்குக் கிடைக்கும் நற்பெயரைத் தவிர வேறு என்ன லாபம்? இது எவ்வாறு அவர்களது தொழில் முன்னேற்றதுக்கும், விளைபொருளின் தரத்தை உயர்த்தவும் வழி அமைக்கும்?
நமக்கு பரிச்சயமான ISI, Agmark போன்ற ஒரு பொருளின் தரத்தைக் குறிக்கும் முத்திரைகளைப் போல் “வளங்குன்றா விவசாய கட்டமைப்பு” (Sustainable Agriculture Network SAN) வகுத்துள்ள நியமங்களை பின்பற்றி தேயிலை, காப்பித் தோட்டங்களில் நடவடிக்கை மேற்கொண்டால், “மழைக்காடு கூட்டமைப்பு” (Rainforest Alliance) தரும் சான்றிதழையும், அதன் முத்திரையையும் தங்களது விளைபொருட்களின் மீது பதித்துக்கொள்ளும் உரிமையையும் அந்நிர்வாகம் பெறலாம். சர்வதேச சந்தையில் இம்முத்திரை கவனம் பெற்று அவர்களின் விளைபொருள்கள் சிறந்த அளவில் விலைபோகும் வாய்ப்புகளை அதிகரிக்கும்.
சர்வதேச அளவில் இதுவரை பல நாடுகளில் சுமார் 35,000 ஹெக்டேர் பரப்புள்ள தேயிலை, காப்பித் தோட்டங்கள் மழைக்காடு கூட்டமைப்பின் சான்றிதழைப் பெற்றுள்ளன. தேயிலை மற்றும் காப்பி போன்ற தோட்டப் பண்ணைகள் பின்பற்ற வேண்டிய பத்து நியமங்களை SAN வகுத்துள்ளது. அவை:
1. சமூக மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை
2. இயற்கைச்சூழல் பாதுகாப்பு
3. காட்டுயிர் பாதுகாப்பு
4. நீர்நிலைகள் பாதுகாப்பு
5. தொழிலாளர்கள் உரிமை
6. தொழிலாளர்கள் உடல்நலம், பாதுகாப்பு
7. சமூக உறவு மேம்பாடு
8. ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை
9. மண்வள மேலாண்மை, பாதுகாப்பு
10. ஒருங்கிணைந்த கழிவு மேலாண்மை
இந்தியாவில் வளங்குன்றா விவசாயத்தின் அவசியம், பல்லுயிர்ப் பாதுகாப்பு, ஷிகிழி நியமங்களை பின்பற்றுவதால் ஏற்படும் நல்ல விளைவுகள் ஆகியவற்றைப் பற்றிய விழிப்புணர்வை தேயிலை, காப்பித் தோட்டப் பண்ணை நிர்வாகங்களுக்கு ஏற்படுத்த வேண்டியது அவசியம்.
மேலும் விவரங்களுக்கு: www.ecoagriculture.in இணையதளத்தைப் பார்க்கவும்.
நன்றி: ப.செகநாதன்
No comments:
Post a Comment