Tuesday, August 9, 2011

மூளையைச் சுருங்கச் செய்யும் பருமன் மற்றும் புகைப்பழக்கம்

உலகமெங்கும் நாள்தோறும் எண்ணற்ற ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.தற்போது மேற்கொள்ளப்பட்ட ஓரு ஆராய்ச்சி மனிதர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது புகைப்பழக்கம் உடைய நடுத்தர வயதுதாரர்கள், அதிக உடல் எடை உடையவர்கள், கட்டுப்படுத்த முடியாத நீரிழிவு நோய் உள்ளவர்கள் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய் உள்ளவர்களுக்கு மூளை சுருங்கும் தன்மை அதிகரித்து வருகிறது என்பதே அந்த ஆராய்ச்சி.

இவ்வாராய்ச்சி மேற்கொண்ட அமெரிக்காவில் உள்ள கலிபோர்னிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இது பற்றி கூறுகையில்,வயதிற்கும் குறிப்பிட்ட சில நோய்களுக்குமிடையே இருக்கும் தொடர்பை கண்டறிவதற்காக ஐம்பதிலிருந்து அறுபது வயது வரை உள்ள ஆயிரத்து 352 பேரை ஆராய்ந்ததில், அதிக உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மூளையின் வெள்ளைத்திசு மாற்றம் அல்லது ரத்தக் குழாயில் சிறிய பாதிப்பு ஏற்படுகிறது. இவர்களை மேலும் ஆராய்ந்ததில் திட்டமிடுதல் மற்றும் முடிவெடுத்தல் போன்றவற்றில் மிகவும் பின்தங்கியுள்ளதும் தெரியவந்தது.

மூளையின் பிம்பத்தைப் பொறுத்த வரையில், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு மூளையின் ஒரு பகுதியான வெள்ளைமேடு இந்நோய் இல்லாதவர்களை விட வேகமாக சுருங்குகிறது. இதேபோல்,புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கும் அதிக இடுப்பளவு உள்ளவர்களுக்கும் ஒட்டுமொத்த மூளையின் கொள்ளளவு பாதிக்கப்படுகிறது. இப்பிரச்சனை புகைப்பிடிக்கும் பழக்கமற்றவர்களிடம் குறைவாகவே உள்ளது. மேலும் மூளையின் நாளாவட்டத்தில் பாதிப்பு ஏற்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று உடல் பருமன் மற்றும் அதிக இடுப்பளவு உள்ளவர்களில் 25 சதவிகிதத்தினரின் மூளையின் செயல்பாடு குறைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்பு நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டது போலவே உயர்ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் புகைப்பழக்கத்தின் காரணமாக அறிவாற்றல் பாதிக்கப்படுவது தெரியவந்தது,

இந்த ஆராய்ச்சியின் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்தால் மேற்பட்ட நோய்களிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments: