Monday, May 16, 2011

சுற்றுச்சூழலுக்கு ஆபத்து விளைவிக்காத மின் உற்பத்தி

ஜெர்மனி தன்னுடைய மின்தேவை களில் 16 சதவீதத்தை புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் வகைகளிலிருந்து தற்போது பெற்று வருகிறது. அந்த நாட்டின் சுற்றுச்சூழல் அமைப்பு 2010 செப்டம்பருக்குள் நாட்டினுடைய மின்தேவைகள் முழுவதையும் இவ்வகை ஆற்றல்களிலிருந்து பெறுவது என முடிவு செய்திருக்கிறது.

கடந்த 20 ஆண்டுகளாகவே புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் தொழில்நுட்பத்தை ஜெர்மனி பயன்படுத்தி வருகிறது. உலகின் சக்தி வாய்ந்த பொருளாதார நாடுகளில் தன்னுடைய மின்தேவை முழுவதற்கும் புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் வகைகளைப் பயன்படுத்த இருக்கும் முதல் நாடு ஜெர்மனி தான். ஒரு கோடியே 30 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் சூரியசக்தி தகடுகளும் 21,300 காற்றாலை சக்கரங்களும் தற்போது அங்கு செயல்பட்டு வருகின்றன. கடந்த 20 ஆண்டுகளாக ஜெர்மானிய அரசு இத்துறைக்குக் கொடுத்த முக்கியத்துவம் காரணமாக இத்தகைய பிரம்மாண்ட வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.

அதிகரித்து வரும் பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதிச் செலவு, சுற்றுச் சூழல் பற்றிய மக்களின் விழிப்புணர்வு ஆகிய இரண்டும் சேர்ந்து ஆட்சியாளர்களை இம் முடிவை எடுக்க வைத்துள்ளன. 1990-லிருந்து 2020-க்குள் தன்னுடைய பசுங்கூட வாயுக்கள் வெளியேற்றத்தை 40 சதவீதம் குறைத்துக் கொள்ளவேண்டும் என்ற கியோட்டோ மாநாட்டு முடிவை ஜெர்மனி உளப்பூர்வமாக அமல்படுத்தி வருகிறது. 2000-வது ஆண்டில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டம், புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் வகைகளிலிருந்து மின்நிலையங்கள் பெறும் மின்சாரத்திற்கு முன்னுரிமை அளிப் பதைக் கட்டாயமாக்கியது. சூரியசக்தியிலிருந்து மின்சாரம் பெற உதவும் ஒளிமின்விளைவுத் தொழிலில் ஜெர்மனி உலகில் முதல் இடம் பெறுவதற்கு அச்சட்டம் வழி செய்தது.

இன்று செலவாகிக் கொண்டிருக்கும் வேகத்தில் பெட்ரோலியப் பொருட்களின் நுகர்வு தொடர்ந்தால், இன்னும் 40 ஆண்டுகளுக்கு மட்டுமே எண்ணெய் இருப்புகள் தாக்குப் பிடிக்கும். அதற்குப் பிறகு நிலைமை என்ன என்று கேட்கும் மக்களது கேள்விக்கு அரசு பதில் சொல்ல வேண்டியுள்ளது.

புதுப்பிக்கக்கூடிய ஆற்றல்களிலிருந்து நாட்டின் மின்தேவை இலக்கு நிறைவேற்றப் பட வேண்டுமானால், பாரம்பரியமான ஆற்றல்களிலிருந்து பெறும் மின்சாரத்தின் அளவு குறைக்கப்பட வேண்டும். நிலக்கரி தோண்டியெடுப்பதைக் குறைக்க ஜெர்மன் அரசு முயற்சி எடுத்தபோது, அத்தொழிலிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது. நிலக்கரிச் சுரங்கத் தொழிலுக்கு மானியம் கொடுத்த பிறகே புது முயற்சியில் இறங்க முடிந்தது. நாட்டின் பசுங்கூட வாயுக்கள் வெளியேற்றத்தில் 40 சதவீதத்திற்கு அனல் மின்சாரம் தயாரிக்கும் ஆலைகளே காரணம் என் பதால், மானியம் கொடுத்தாவது அவ்வகை மின்சாரத்தைக் குறைக்க வேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்பட்டது.

அணு ஆற்றல் தொழிலிலிருந்தும் அரசுக்கு பலத்த எதிர்ப்பு இருந்தது. ஜெர்மனியின் மின்தேவையில் மூன்றில் ஒரு பகுதி அணு ஆற்றலிலிருந்து கிடைத்து வருகிறது. புதுப்பிக்கக் கூடிய ஆற்றல்களிலிருந்து மின்சாரம் தயாரிக்க செலவு அதிகம் ஆவதைக் கூறி, பாரம்பரிய மின்உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பாரம்பரிய மின் உற்பத்தியிலிருந்து சுற்றுச்சூழலுக்கு இசைந்த மின் உற்பத்திக்கு மாறுவதற்கு 3 டிரில்லியன் யூரோக்களை அரசு செலவிட வேண்டியிருக்கும் என்றாலும் கடந்த பத்தாண்டில் அத்துறை 300,000 பேருக்கு வேலைவாய்ப்பை அளித்திருக்கிறது என்பதை அரசுசுட்டிக் காட்டுகிறது.

தற்சமயம் ஆயிரக்கணக்கான வீட்டு உரிமையாளர்களும் விவசாயிகளும் சூரிய சக்தி தகடுகளைப் பொருத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக அரசு அளிக்க வேண்டிய மானியமும் உயர்ந்து வருகிறது. எனவே, சூரியசக்தி மின்சாரம் தயாரிக்கும் செலவைக் குறைக்க வேண்டிய அவசியமும் அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது.

காற்றாலை மின்சாரம் தயாரிக்கும் துறையில் ஆராய்ச்சிக்கென வருடாந்திர பட்ஜெட்டில் 2 கோடி யூரோக்களை அரசு ஒதுக்கீடு செய்திருக்கிறது. காற்று பலமாக வீசும்போது அதன் ஆற்றலை வைத்து தண்ணீரை உயரமான இடங்களுக்கு ஏற்றி ஓர் ஏரியாக நீரைச் சேமிப்பது, பின்னர் காற்று பலவீனமடையும்போது ஏரித்தண்ணீரை விடுவித்து அதன் சக்தியைக் கொண்டு நீர் மின்சாரம் தயாரிப்பது என்ற முறையை நார்வே கடைப்பிடித்து வருகிறது. இதையே ஜெர்மனியும் பின்பற்ற முடிவு செய்திருக்கிறது.

இவை போக, மரத்துண்டுகளை எரித்து மின்சாரம் தயாரிப்பது, பூமிக்கடியில் உள்ள வெப்பசக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பது எனப் பல்வேறு வழிகளில் மின் உற்பத்தியைப் பெருக்க ஜெர்மனி முடிவு செய்திருக்கிறது. ஜெர்மனியின் உதாரணத் தை மற்ற நாடுகள் -குறிப்பாக நம் நாடு - பின்பற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம்.

No comments: