Tuesday, March 22, 2011

சிட்டுக்களின் அழிவும் புறாக்களின் பெருக்கமும்

நம் நாட்டின் நகரங்கள் கடந்த சில ஆண்டுகளில் பல மாற்றங்களைச் சந்தித்து உள்ளன. அவற்றின் எல்லைகளை விரிவாக்கி கொண்டே வருகிறோம். நீர்நிலைகளும், சதுப்பு நிலங்களும், புதர்காடுகளாகவும், மாந்தோப்புகளாகவும் இருந்த இடங்கள் வெறும் கட்டடங்களாக காட்சி தருகின்றன. ஒரு காலத்தில் சின்ன மீன்பிடி துறைமுகமாக இருந்த சென்னையின் எல்லைகள் மாமல்லபுரத்தையும், ஸ்ரீபெரும்புதுரையும் தொட்டுவிட்டன. தனித்தனி வீடுகளாக தோட்டங்களுடன் இருந்த இடங்களில் வானளாவிய கட்டடங்களை எழுப்பி உள்ளோம். காங்கிரீட் காட்டில் நம் வாழ்க்கையும் இயந்திரமயமாகிவிட்டது.

அவசரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த நகர வாழ்வில் நம் வாழ்விடங்களையும் சுற்றுச்சூழலையும் மாற்றி அமைப்பதால், நம்மை அண்டி வாழ்ந்த மற்ற உயிரினங்கள் எப்படி பாதிக்கபடுகின்றன என்பது எண்ணிப் பார்ப்பதற்கோ அல்லது அறிந்து கொள்வதற்கோ நமக்கு நேரம் இருப்பதில்லை. நம்மில் எத்தனைப் பேருக்கு, நம் அடுக்குமாடி வீடுகளின் வடிவமைப்பை தனக்குச் சாதகமாக்கி கொண்டு, அவற்றில் கூடு கட்டி வேகமாக இனப்பெருக்கம் செய்யும் பறவையைப் பற்றித் தெரிந்திருக்கும்? இயற்கையில் தானியங்களை முக்கிய உணவாக உண்டு வாழ்ந்தாலும், நகரங்களில் நாம் உண்ணும் உணவை உண்டும், மாலை நேர வான்வெளியில் “படபட”வென்று இறக்கைகளை அடித்து கூட்டமாக பறந்துச் செல்லும், அப்பறவையை தெரியும்?

மாடப்புறா அல்லது மலைப்புறா (Rock Pigeon - Columba livia) என்று அழைக்கபடும் இப்புறாக்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்களால் வளர்க்கப்பட்டு வந்தன. ஆரம்பத்தில் இறைச்சிக்காகவும், பிறகு செய்தி பரிமாற்றம் செய்யவும், குறிப்பாக போர் காலங்களில் அவசர செய்திகளை அனுப்பவும் வளர்க்கப்பட்டு வந்தது இப்பறவை. இதுபோல வளர்க்கப்பட்ட பறவைகளில் சில பறவைகள் தப்பி சென்று, தனியாக வாழத் தொடங்கின. இயற்கையில் பாறை, குன்றுகளில் வாழ்பவை. அதனால் நம் அடுக்கு மாடிகள் அதை பிரதிபலிப்பது போல உள்ளன. இருபது, முப்பது வருடங்களுக்கு முன் வடநாட்டில் இப்பறவைகள் மிகுந்து காணப்பட்டன. அப்பொழுதே அடுக்கு மாடி குடியிருப்புகள் அங்கே பெருகி இருந்ததே அதற்குக் காரணம். தமிழகத்தில் அடுக்குமாடி வீடுகள் சமீப கால வளர்ச்சி. நான் சிறுவனாக இருந்தபோது கோவில்களிலும், மசூதிகளிலும் மட்டுமே மாடப்புறாவைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இப்போது எல்லா பெரிய கட்டடங்களிலும் இவற்றைப் பார்க்கிறேன்.

இப்புறாகள் பெருகியதற்கு மற்றுமொரு காரணம், சூழலுக்கு ஏற்றவாறு அவை தங்களை மாற்றிகொண்டிருப்பதுதான். சிறு குச்சிகளால் ஆன ஒழுங்கில்லாத கூட்டை நம் வீடுகளின் அலங்கார வளைவுகளில், சன்னல் மேடைகளில், குளிர்சாதன பெட்டிகள் அடியில் என்று, எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் கூடு கட்டி, குஞ்சு பொறித்து தன் இனத்தைப் பெருக்குகின்றன. ஒரு குஞ்சு முழுமையாக வளர்வதற்குள், தாய்ப் பறவை மற்றொரு முறை முட்டை இட்டுவிடுகிறது. நாமும் இப்புறாக்களை வெறுக்காமல், அவற்றுக்கு சிலர் உணவும் அளிக்கிறோம்.

இவ்வாறு மனிதர்களின் வாழ்விடத்துக்கு ஏற்ப அவை தங்களை மாற்றி கொண்டதாலும், அவற்றின் இயல்பான வாழ்க்கைத் தன்மையால் அவை பல்கிப் பெருகுகின்றன. அதேநேரம் நீண்டகாலமாக நம்மைச் சார்ந்து வாழ்ந்த மற்றொரு பறவை இனத்தை நாம் இழந்து வருகிறோம். அப்பறவை சிட்டுகுருவி (House Sparrow - Passer domesticus). உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் கேட்டு பாருங்கள், சிட்டுக்குருவிகள் எவ்வாறு தங்கள் வீட்டில் கூடு கட்டி வசித்து வந்தன என்றும் எப்படி தங்கள் முற்றத்தில் போடும் தானியங்களை உண்டு வாழ்ந்தன என்றும் கூறுவார்கள். ஆனால் இன்றைய தலைமுறையினர் இக்குருவிகளை பார்ப்பதே அரிதாகிவிட்டது.

இருபது வருடங்களுக்கு முன்னர்கூட எங்கள் வீட்டில் சிட்டுக்குருவிகள் கூடுகட்டி வாழ்ந்துவந்தன. ஆனால் இப்பொழுது அவை எட்டிப் பார்ப்பதுகூட இல்லை. சிட்டுகுருவிகள் தங்கள் வீடுகளில் கூடுகட்டினால், தங்கள் குடும்பத்துக்கு நன்மை கிடைக்கும் என்று நம்பி, அக்காலத்தில் அவற்றை வரவேற்றனர். அவற்றின் கூடுகள் கலையாமலும் பார்த்துகொண்டனர். ஆனால் தற்பொழுது சிட்டுக்குருவிகளை பார்க்கக்கூட முடிவது இல்லை என்பதை நம்மில் பலர் உணர்வதில்லை.

சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை நம் நாட்டில் மட்டுமல்லாமல் உலகெங்கும், குறிப்பாக பெரிய நகரங்களில் குறைந்து வருகின்றன. டென்னிஸ் சமர்ஸ் ஸ்மித் என்ற சிட்டுக்குருவி நிபுணர், லண்டனில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டதாக கூறுகிறார். அதுவும்கூட 1970 - 80க்கு இடைப்பட்ட காலத்தில்தான் அவற்றின் எண்ணிக்கை அதிகமாக குறைந்ததாக கூறுகிறார். அதற்கு காரணமாக MTBE (Mythyl Territeriary Butyl Ether) எனப்படும், பெட்ரோலில் உள்ள வேதிப்பொருளை அவர் காரணமாகக் கூறினார். இந்த வேதிப்பொருள் மற்ற எரிபொருள் கழிவுகளோடு சேர்ந்து புகையாக வெளியேறி புழுக்கள் போன்ற சிற்றுயிர்களை கொன்றுவிடுகிறது. சிட்டுக்குருவிகள் தன் குஞ்சுகளுக்கு, மென்மையான உடலை உடைய, ஊட்டச்சத்து நிறைந்த இப்புழுக்களையே முதல் இரண்டு வாரங்களுக்கு உணவாகக் கொடுக்கிறது. இப்புழுக்கள் இல்லாததால் சிட்டுக்குருவிகளின் குஞ்சுகளின் வாழ்க்கை பாதிக்கபடுகிறது.

ஆய்வின் மூலம் கண்டறியப்பட்ட இக்காரணத்தை தவிர, சிட்டுக்குருவிகள் கூடுகட்ட ஏற்றதாக தற்கால கட்டடங்கள் இல்லை என்பதும் மற்றொரு முக்கிய காரணம். ஓடு மற்றும் ஓலை வேய்ந்த வீடுகளில் குருவிகள் கூடு கட்ட பல இண்டு இடுக்குள் இருந்தன. ஆனால் இன்று பெருகிவிட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் அப்படிப்பட்ட இடங்கள் இல்லை. குருவிகள் சாப்பிடத் தேவையான தானியங்களும் தற்போது நகரங்களில் கிடைப்பதில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை. அரிசி போன்ற அத்தியாவசிய தானியம்கூட பிளாஸ்டிக் பையில்தான் வருகிறது. நாமும் இப்பொழுது அரிசியை புடைத்து சுத்தம் செய்வதோ அல்லது உலர்த்தி மாவாக்குவதோ இல்லை - எல்லாவற்றையுமே கடைகளில் இருந்தே, “பேக்“ செய்யப்பட்ட பையில் வாங்கி விடுகிறோம். சென்னை, பெங்களூரு ஆகிய நகரங்களில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், அரிசி மண்டிகள், கடைகள் உள்ள இடங்களிலும், ஓடு வேய்ந்த வீடுகள் உள்ள இடங்களில் சிட்டுக்குருவிகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. செல்போன் அலைவரிசை கோபுரங்களில் இருந்து வரும் மின்னணு கதிர்வீச்சும் சிட்டுக்குருவிகளை பாதிப்பதாக தெரிகிறது.

சிட்டு குருவிகள் போன்ற பறவைகளை நாம் bio indicators, ஒரு பகுதியின் செழிப்பை சுட்டிக்காட்டும் “உயிர்ச் சுட்டிகள்” என கருதலாம். சிறிய உயிர்களான அவற்றுக்கு இன்று ஏற்பட்டுள்ள நிலை, ஒப்பீட்டளவில் பெரிய உயிர்களான நமக்கு நாளை நம்மையும் பாதிக்க வாய்ப்புள்ளது. ஒரு கால் நூற்றாண்டுக்கு முன் நம்மை சுற்றி வாழ்ந்த பல பறவை இனங்களை நாம் இப்போது காண்பதில்லை. தவிட்டுக்குருவி, புல்புல், தையல்காரக்குருவி, தேன்சிட்டு போன்ற பறவைகள் நம் வீட்டுத்தோட்டங்களில் சாதாரணமாக வாழ்ந்து வந்தன. இப்பொழுது இப்பறவைகளை பார்க்கிறோமா? தோட்டங்களே இல்லாத வீடுகளில், பறவைகளுக்கு ஏது இடம்!

நம்மை சுற்றி குப்பைக் கூளங்கள் அதிகரித்து வருவதால், அவற்றிலிருந்து கிடைக்கும் உணவைப் பெறுவதற்காக வரும் காக்கை, மைனா, புறாக்கள் எண்ணிக்கையும் இனப்பெருக்கமும் அதிகரிக்கிறது என்றே அர்த்தம். பல அடுக்குகளில் மாடி வீடுகள் இருப்பது நகர மக்கள்தொகையை சமாளிப்பதற்கான ஒரு விடை. ஆனால் இக்குடியிருப்புக்களில் தோட்டம் என்ற பெயரில் உருவாக்கப்படும் கொரியன் புல்வெளியும், மலர்களே இல்லாத க்ரோடன்ஸ் போன்ற செடிகளையும் வளர்ப்பதால் வேறு எந்த உயிரினமும் இவற்றைத் தேடி வருவதில்லை. நம் நாட்டு தாவரங்களை வளர்க்கும்போதுதான், அவற்றிலிருந்து கிடைக்கும் உணவைப் பெற பல்வேறு பறவைகள் நம்மைத் தேடி வரும்.

எனவே, ஆறு அறிவுள்ள மனிதர்களான நம்மைச் சுற்றி வாழும் உயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வண்ணம் வாழும் இடங்களையும் நமது வாழ்க்கை முறையையும் அமைத்தால், இயற்கையின் அழகான படைப்புகளை நாளைய சந்ததியினரும் கண்டுகளிக்க வாய்ப்பு கிடைக்கும்.

4 comments:

துளசி கோபால் said...

நல்லவேளை, சிட்டுக்குருவிகள் இன்னும் நியூஸியில் இருக்கு. நம்ம வீட்டில் தினமும் அவர்களுக்குத் தானியம், ரொட்டித்துண்டுகள் தோட்டத்தில் போட்டு வைக்கிறோம். கூடவே குளிக்க குடிக்க ஒரு Birds bath வச்சுருக்கோம்.

நேரம் இருந்தால் இங்கே பாருங்கள்.

http://thulasidhalam.blogspot.com/2009/02/blog-post_10.html

உங்க பதிவை க்ளிக்கினால் ப்ளொக்கர் எச்சரிக்கை வருதே!

கடைசியா ஒரு வேண்டுகோள்.......இந்த வேர்டு வெரிஃபிகேஷனைத் தூக்கினால் பின்னூட்டம் இடுவது சுலபம்.

அறிவியல் விழிப்புணர்வு said...

Thanks for your comments. How to remove the word verification tool. Please advise.

துளசி கோபால் said...

உங்க டேஷ் போர்ட் திறந்து செட்டிங்ஸ் போங்க. அதுலே கமெண்ட்ஸ் க்ளிக் செஞ்சா அதுலே வேர்டு வெரிஃபிகேஷன் ஷோவான்னு கேக்கும். நோ க்ளிக் செஞ்சுட்டுக் கையோடு அதுக்கு முதல்லே கமெண்ட் மாடரேஷன்ன்னு ஒன்னு இருக்கு பாருங்க. அதுலே ஆல்வேஸ் க்ளிக் செஞ்சுக்குங்க.

கடைசியா ஸேவ் செட்டிங்ஸ் க்ளிக்கினால் போதும்.


உங்களை அறிவிக்காமல் ஒரு கமெண்டும் பப்ளிஷ் ஆகாது.

குட் லக்,

அறிவியல் விழிப்புணர்வு said...

Thank you very much. I had removed the word verification tool.