மனிதன் சுயநலமானவன். அப்படித்தான் அவன் பரிணாமத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறான். அவனது மூளையும் அதற்கேற்ப அமைந்திருக்கிறது என்பது போன்ற கருத்துக்கள் இப்போது வலுவிழந்து கொண்டிருக்கின்றன. மாறாக மனிதன் இரக்கமிக்கவன் என்பதும் விட்டுக்கொடுத்து வாழக்கூடிய வினோத விலங்கு என்பது அண்மைக்கால சமூக அறிவியல் ஆய்வுகளிலிருந்து தெரிய வந்திருக்கின்றன.
கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்ளி) வல்லவன் வாழ்வான்என்பதை மாற்றி நல்லவன் வாழ்வான் என்று அறிவிக்கிறது. டார்வின் ஏற்கனவே சொல்லியிருக்கிறார் “பரிவுணர்வுதான் மனிதனின் பிரதானமான உள்ளுணர்வு'' என்று. மனிதன் மற்ற ஏனைய விலங்குளைக் காட்டிலும் வெகு சீக்கிரமாக உலகில் பரவி உலகை வெற்றியுடன் பயன்படுத்திக் கொண்டிருப்பதற்குக் காரணமே மனிதனது பரிவுணர்வுதான். இல்லாதவர்களை பரிவுடன் அறிந்து அவர்களுக்கு உதவி செய்து ஒப்புறவுடன் வாழ்வதுதான் மனிதனது அளப்பரிய பலம் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
மனித மூளையில் உருவாகும் ஆக்சிடோசின் என்ற ஒரே ஒரு ஹார்மோன் மனிதனை பற்றுடையவனாக ஆக்குகிறது. சொந்தங்களை நேசிப்பது, காதல் வயப்படுவது, தாய்மை சுகம், பொது நன்மைக்காகப் பாடுபடுவது போன்ற உயரிய பண்புகளெல்லாவற்றிற்கும் காரணம் ஆக்சிடோசின்தான். அள்ளிக் கொடுக்கும் அளவுக்கு அந்தஸ்த்து உயருகிறது என்பதை மனித குலம் புரிந்துகொள்ள வேண்டும். இது மனிதனது ஜீன்களிலேயே பொரிக்கப்பட்டிருக்கிறது என்பது தெளிவாகியிருக்கிறது.
ஒருவர் மற்றவர்மேல் காட்டும் பரிவைப் பார்க்கும் இன்னொருவரும் பரிவுடையவராகிறார் என்பதும் பரிசோதனைகளிலிருந்து வெளிப்பட்டுள்ளது. பொதுநல உணர்வை இன்னம் சற்றே விரித்து தன் இனம் தன் மொழி என்பதையும் தாண்டி மற்ற இனத்தவரிடையும் விரிவடையவேண்டும். அதை நோக்கித்தான் மனித பரிணாமம் சென்று கொண்டிருக்கிறது என்பதில் எனக்குச் சிறிதும் ஐயமில்லை.
நன்றி: முனைவர் க.மணி
No comments:
Post a Comment