Monday, October 25, 2010

வளிமண்டலத்திலும் துப்புரவுப்பணி

மரங்கள் நமக்கு எண்ணற்ற விதத்தில் பயன்படுகின்றன. நாகரிக மோகத்தில் சிக்கிச் சீரழிந்துகொண்டிருக்கும் மனிதகுலம் வளிமண்டலத்தை தொடர்ந்து மாசுபடுத்திவருகிறது. வளிமண்டல மாசை அகற்றும் பணியை மரங்கள் செய்துவருவது நாம் ஏற்கனவே அறிந்த ஒன்றுதான். ஆனால் இதுவரை அறிந்திராத அளவிற்கு மிகப்பெரிய அளவில் இந்தப்பணியை மரங்கள் ஆற்றிவருவதாக இப்போது அறிவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வு கொலராடோ பல்கலைக்கழக தேசிய வளிமண்டல ஆய்வு மையத்தின் துணையுடன் நிகழ்த்தப்பட்டுள்ளது. Science Express இதழில் ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

oVOC எனப்படும் ஆக்சிஜனேற்றம் செய்யப்பட்ட ஆவியாகக்கூடிய கரிம கூட்டுப்பொருட்கள் (oxygenated volatile organic compounds) சுற்றுச்சூழலில் நிலைத்து நின்று மனித உடலுக்கு தீங்கு செய்யக்கூடியவை. இத்தகைய மாசுகளை விழுங்கும் ஆற்றல் மரங்களுக்கு இருப்பதாக ஆய்வுக்குழுவின் முடிவுகள் தெரிவிக்கின்றன. புவிப்பரப்பில் தாவரங்களின் இயற்கைச்சிதவு, வாகனப்புகை, கட்டுமானப் பணிகள் இவற்றால் ஹைட்ரோ கார்பன்களும், வேதிப்பொருட்களும் பெருமளவில் வெளியாகின்றன. சில oVOC க்கள் மிகச்சிறிய துகள்களாக காற்றில் பரவக்கூடியவை. இவற்றிற்கு aerosols என்று பெயர்.

இவை மேகக்கூட்டங்களின் மீதும், மனிதர்களின் உடல்நலத்தின்மீது ஆதிக்கம் செலுத்தக்கூடியவை. அமெரிக்க ஐக்கியநாடுகளிலும் பிற நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, நெடிதுயர்ந்த இலையுதிர் காடுகளின் கொண்டைப்பகுதிகள் இந்த oVOCக்களை 97 சதவீதம் அதிகமான வேகத்தில் உறிஞ்சிக்கொள்வதாக கண்டுபிடித்துள்ளனர். அதாவது இதுவரை அறியப்பட்ட வேகத்தைக்காட்டிலும் நான்குமடங்கு வேகத்தில் aerosols உறிஞ்சப்பட்டன. இவ்வளவு அதிகமான வேதிப்பொருட்களை மரங்களின் கொண்டைப்பகுதி விரைவாக உறிஞ்சி எடுப்பது எப்படி என்பது ஆய்வுகூடங்களில் அலசி ஆராயப்பட்டது.

மனிதஉடல் நோய்த்தொற்றுக்கு ஆளாகும்போது பாதுகாப்பு கவசமாக நோய் எதிர்ப்பு ஆற்றலை அளிக்கக்கூடிய வெள்ளை அணுக்கள் இயல்பாகவே நமது உடலில் உற்பத்தியாகின்றன. இதே போன்ற நிகழ்வு மரங்களிலும் காணப்பட்டது. தாவரங்கள் பூச்சியினங்களின் தாக்குதலுக்கு ஆட்படும்போது தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் வகையில் வேதிப்பொருட்களை சுரக்கின்றன. ஆனால் இந்த வேதிப்பொருட்கள் அதிக அளவில் சுரக்கப்படும்போது அவை தாவரத்திற்கே நஞ்சாக மாறக்கூடிய அபாயம் உள்ளது. இதைத்தவிர்க்க தாவரங்கள் அதிகமான oVOCக்களை ஈர்த்து என்சைம்களைக்கொண்டு அந்த அபாயகரமான வேதிப்பொருட்களை வளர்சிதை மாற்றத்திற்கு உட்படுத்துகின்றன.

தாவரங்களின் வளர்சிதை மாற்றத்தின் ஒருபகுதியாகவே oVOCக்களை உறிஞ்சிக்கொள்ளும் நிகழ்வு ஏற்படுவதாக ஆய்வுமுடிவுகள் தெரிவிக்கின்றன. வளிமண்டல வேதியியல் முடிவுகளின்படி இதுவரை தாவரங்கள் உறிஞ்சிக்கொள்வதாக கருதப்பட்ட அளவைக்காட்டிலும் 36 சதவீதம் அதிகமான oVOCக்கள் நெடிதுயர்ந்த மரங்களின் கொண்டைப்பகுதிகளில் ஈர்த்துக்கொள்ளப்படுவதாக தெரியவந்துள்ளது. மரங்களின் மேன்மையை மனிதனுக்கு புரியவைக்கும் ஆய்வுகள் இன்னும் தொடர்கின்றன.

நன்றி :மு.குருமூர்த்தி

No comments: