மீண்டும் ஒருமுறை பெட்ரோல் விலையை உயர்த்தி இருக்கிறது மத்திய அரசு. கொஞ்சநஞ்சமல்ல, ஒரு லிட்டருக்கு 3.73 ரூபாய்! பெட்ரோலுக்கு மிக அதிகமான மானியம் கொடுப்பதால் அரசாங்கத்துக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்கவே இந்த விலையேற்றம் என்கிறதுஅரசு.
அரசின் இந்த வாதத்தைக் கேட்கும் சாதாரண மக்கள் கூட, பெட்ரோல் விலையை உயர்த்துவதில் நியாயம் இருப்பதாக நினைக்கிறார்கள். ஆனால் பெட்ரோல் மானியம் பற்றி அரசு உண்மையைச் சொல்கிறதா? என்னைப் பொறுத்தவரை மானியம் தொடர்பாக மத்திய அரசு முன்னுக்குப்பின் முரணாகப் பேசி, மக்களைக் குழப்பி, நாடகமாடுகிறது என்றுதான் சொல்வேன். மானியம் பற்றி அரசு சொல்லும் பொய்களுக்கு என் பதில் இதோ:
எல்லா பொருட்களுக்கும் உற்பத்தி விலை என ஒன்று உண்டு. உதாரணமாக ஒரு சட்டை தைக்கிறோம். இதன் உற்பத்தி செலவு 50 ரூபாய். இதனை 100 ரூபாய்க்கு விற்றால் 50 ரூபாய் லாபம். அதுவே 100 ரூபாய்க்கு பதிலாக 80 ரூபாய்க்கு விற்றால் 30 ரூபாய் லாபம். அதாவது, லாபத்தில் 20 சதவீதம் தள்ளுபடி கொடுத்து விற்கிறோம். இந்த 20 சதவீதம் நமக்கு நஷ்டம்தான் என்றாலும், அது லாபத்தில்தான் நஷ்டமே ஒழிய, உண்மையான நஷ்டமல்ல.
இனி பெட்ரோலுக்கு வருவோம். ஒரு லிட்டர் பெட்ரோலைத் தயாரிக்க 20 ரூபாய் ஆகிறது. அதற்கு மேல் அரசு பல வரிகளைப் போட்டு 49 ரூபாய் ஆக்கிவிடுகிறது என்றால், லாபம் 29 ரூபாய். அரசு அதன்பிறகு 4 ரூபாய் மானியமாகக் கொடுத்தால் அதை லாபத்திலிருந்து நஷ்டம் என்றுதான் பார்க்க வேண்டுமே ஒழிய, உண்மையான நஷ்டமல்ல!
எனவே, மானியம் கொடுப்பதால் அளவுக்கு அதிகமான நஷ்டம் ஏற்படுவதாகச் சொல்வதில் கொஞ்சமும் உண்மை இல்லை. அப்படி நஷ்டம் ஏற்பட்டிருந்தால் பெட்ரோல் தயாரிப்பு நிறுவனங்கள் நஷ்டம் அடைந்திருக்க வேண்டும். ஆனால் கச்சா எண்ணெய் விலை உச்சத்தில் இருந்த 2007-08ஆம் ஆண்டில்கூட பெட்ரோல் தயாரிப்பு நிறுவனங்கள் 9,557 கோடி ரூபாய் வரி செலுத்தியது. இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களிலேயே மிக அதிகமான வரி கட்டிய துறை என்கிற பெயரைத் தக்கவைத்துக் கொண்டன பெட்ரோல் தயாரிப்பு நிறுவனங்கள். ஆக, பெட்ரோலுக்கு அளிக்கப்படும் மானியத்தால் பெட்ரோல் நிறுவனங்களுக்கும் சரி, அரசுக்கும் சரி, நஷ்டமில்லை!
பெட்ரோலுக்கான மானியம் நமது ஜிடிபியில் 1 சதவீதம் கூட இல்லை. பெட்ரோல் உட்பட நமது மொத்த மானியமே நமது ஜிடிபியில் 2 சதவீதம் மட்டுமே. வளர்ந்த நாடுகள் மானியத்துக்காக 4 சதவீதம் பணத்தை செலவு செய்யும்போது, அதில் பாதியைக் கூட செலவு செய்யாத நாம், ஏன் இவ்வளவு பெரிதாகப் பேசுகிறோம் என்பது புரியவில்லை.
பெட்ரோல், டீசல் விலையை ஏற்றினால் ஏறக்குறைய எல்லா பொருட்களின் விலையும் ஏறும். பெட்ரோலியப் பொருட்களின் விலையை 4-5 சதவீதம் உயர்த்தினால் வீட்டுச்செலவு23 சதவீதம் வரை உயரும் என ஒரு சர்வே சொல்கிறது. ஏற்கெனவே நம் அன்றாடத் தேவைக்குப் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களின் விலையும் அதிகமாக இருக்கிறது. ஜூன் 2008ல் பெட்ரோல் விலை உயர்வு அறிவிப்பு வந்தவுடன் பணவீக்கம் 11.05 சதவீதத்திற்கு எகிறியது. கடந்த 13 ஆண்டுகளில் பணவீக்கம் இவ்வளவு உச்சத்தை அடைந்ததில்லை. மேலும் அரசாங்க பொருளாதார நிபுணர்களால் இந்த விலை உயர்வு 0.5/0.6 சதவீதம்தான் பணவீக்கத்தை உயர்த்தும் என்பது பொய்யாகி, ஒரே வாரத்தில் 2.31 சதவீதம் உயர்ந்தது. மானியத்தைக் குறைக்க வேண்டும் என்கிற தலைவலியைப் போக்க அரசு எடுக்கும் நடவடிக்கை, பணவீக்கம் என்கிற திருகுவலியைத்தான் கொண்டு வருகிறது. அரசாங்கத்தின் செலவு குறைவதற்காக மக்கள் அதிகம் செலவழிக்க வேண்டும் என்று சொல்வது எந்த வகையில் நியாயம்?
நன்றி: நாணயம் விகடன்
No comments:
Post a Comment