Saturday, June 12, 2010

உணவுப் பாதுகாப்புக்கு ஒரு வழி

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் பகுதியில் வறட்சியின் காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்புவரை விவசாயிகள் தங்கள் நிலங்களை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அப்படி விற்காதவர்கள் கூட விவசாயம் செய்ய வழியின்றி நிலத்தைத் தரிசாகவே போட்டுவைக்க வேண்டிய நிலை இருந்தது.

ஆனால் இன்று அப்பகுதியிலுள்ள 600-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இடுபொருட்செலவு குறைந்த `பஞ்சகவ்யா’ என்ற முறையைப் பயன்படுத்தி பல்வேறு பயிர்களை வெற்றிகரமாகப் பயிரிட்டு வருகிறார்கள். “சில ஆண்டுகள் முன்புவரை கடும் வறட்சியின் காரணமாக பெரிய விவசாயிகள் மட்டுமே விவசாயத்தைத் தொடர முடிந்தது. உரப்பற்றாக்குறை காரணமாக அவர்களும் ஒரு கட்டத்தில் விவசாயத்தை நிறுத்த வேண்டியதாயிற்று. இன்றும் தண்ணீர் பற்றாக்குறையும் வறட்சியும் தொடர்கின்றன. போதாதற்கு மின்பற்றாக்குறையும் சேர்ந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் கூட நாங்கள் தற்போது சூரியகாந்தி, வாழை, நெல், மிளகாய் மற்றும் நிலக்கடலை போன்ற பல்வேறு பயிர்களைப் பயிரிட்டு வருகிறோம். மிளகாய் வயல்களில் சிறிய வெங்காயத்தை ஊடுபயிராக வளர்த்து சில விவசாயிகள் ஒரு லட்சம் ரூபாய் வரை லாபம் ஈட்டியுள்ளனர்” என்கிறார்கள் இப்பகுதியிலுள்ள விவசாயிகள்.

சுவிசேஷபுரம் பகுதி வளர்ச்சிக் கழகமும் கோவை விவசாயப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் ஆர். வெங்கட்ராமன் அவர்களும் குறைந்த செலவில் விவசாயம் செய்து பலன் ஈட்டுவது பற்றிய விழிப்புணர்வை விவசாயிகளிடம் ஏற்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்துள்ளனர் (தகவல் : தி இந்து).

பஞ்சகவ்யா

தயாரிக்கும் முறை

பஞ்சகவ்யா தயாரிக்கும் முறை பற்றி பேராசிரியர் வெங்கட்ராமன் விவரிக்கிறார். 5 கிலோ கிராம் மாட்டுச் சாணம், 3 லிட்டர் பசுவின் சிறுநீர்,

500 கிராம் பசு நெய், மூன்று தேங்காய்களின் இளநீர், ஒரு டஜன் வாழைப்பழங்கள், 2 லிட்டர் புளித்த மோர், கையளவு சுண்ணாம்பு, பயிர்கள் விளையும் வயலிலிருந்து எடுக்கப்பட்ட சிறிதளவு மண் ஆகியவையே பஞ்சகவ்யா தயாரிக்கத் தேவையான பொருட்கள்.

ஒரு பிளாஸ்டிக் தொட்டியில் மாட்டுச் சாணத்தையும் நெய்யையும் நன்கு கலந்து மூடிவிட வேண்டும். மூன்று நாட்களுக்கு தினம் இருதடவை இந்தக் கலவையை நன்கு கிளறிவிட வேண்டும். நான்காவது நாளில் மற்ற பொருட்களை அதில் சேர்த்து 20 நாட்களுக்கு விட்டுவிட வேண்டும். கலவையைத் தினசரி கிளறிவிடுவது முக்கியம். 21-வது நாள் பஞ்சகவ்யா கரைசலை வடிகட்டி பயிர்கள் மீது தெளிக்கலாம் ; பாசன நீருடன் கலந்து விடலாம் ; அல்லது சிறிய பிளாஸ்டிக் பைகளில் அடைத்து வாழை போன்ற மரங்களாக இருந்தால் கட்டிவிடலாம். ஒரு முறை தயாரிக்கப்பட்ட கரைசலை ஆறு மாதங்கள் வரை பயன்படுத்த முடியும்.

உணவுப் பாதுகாப்புக்கான வழி

“ஆரோக்கியமான விதைகளையும் சரியான பாசன முறைகளையும் பயன்படுத்தி, பஞ்சகவ்யா கரைசலை 4-5 முறை தெளித்துவிட்டால் விவசாயிகள் நல்ல விளைச்சலைப் பார்க்க முடியும். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இந்த பரிசோதனை செய்யப்பட்ட 40 கிராமங்களிலும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது” என்கிறார் பேரா. வெங்கட்ராமன். உணவுப் பாதுகாப்பு, விவசாய உற்பத்தி பற்றி அரசு தொடர்ந்து பேசி வருகிறது. ஆம், பேசி வருகிறது. அறிக்கைகளை விட்டு, கூட்டங்களை நடத்துவதால் மட்டும் இப்பிரச்சனையைத் தீர்த்துவிட முடியாது. சிறு விவசாயிகளை ஊக்குவிப்பதன் மூலமே உணவுப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த முடியும்... வேளாண் துறை இன்று பல நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. பஞ்சகவ்யா போன்ற குறைந்த செலவு தொழில்நுட்பங்களைப் பற்றி விவசாயிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம் என்கிறார் தலைவர் ஜெ.எச்.எஸ். பொன்னையா.

மேற்கொண்டு தகவல் வேண்டுவோர்

ஈத்தாமொழியிலுள்ள சுவிசேஷபுரம் அமைப்புடன்

(தொலைபேசி : 04637-278173 அல்லது பேராசிரியர் வெங்கட்ராமனுடன்

(கைபேசி : 9488418719 தொடர்பு கொள்ளலாம்.

No comments: