Saturday, April 24, 2010

லைரிட்.. விண்கற்கள்.. பொழிவு ..!!

நாம், நமது நாட்டின் முக்கிய தினங்கள் என சுதந்திரதினம், குடியரசு தினம் ஆகியவற்றைக் கொண்டாடுகிறோம். அதுபோலவே ஐக்கியநாடுகள் சபை, யுனஸ்கோ, உலக சுகாதார‌ நிறுவனம், அறிவியலாளர்கள், அரசு அமைப்புகள், சில தன்னார்வ அமைப்புகள், சர்வதேச தினங்கள் பலவற்றை அறிவித்துள்ளன. அதன் முக்கியத்துவம் கருதி, மக்களிடையே விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்யவும், அதனால் பயனும், மகிழ்வும் பகிர்ந்தளிக்கவும், இந்த தினங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. அவைகளுள் முக்கியமானவை பிப்ரவரி 28 அறிவியல் தினம், மார்ச் 8 உல‌க மகளிர் தினம், மார்ச் 15 -உலக ஊனமுற்றோர் தினம், மார்ச் 21- உலக வனதினம், இன ஒழிப்புதினம், மார்ச் 22 - உலக நீர்தினம், மார்ச் 23 உலக வானிலை தினம் போன்றவை. அது போலவே ஏப்ரலிலும் ஏப்ரல் 1- உலக முட்டாள்கள் தினம், ஏப்ரல்-7 உலக சுகாதாரதினம், ஏப்ரல் 21- உலக வானியல் தினம், ஏப்ரல் 22- உலக புவிதினம், ஏப்ரல் - 23 உலக புத்தக தினமாகும்.

இதற்கான சிறப்பு நிகழ்வுகளை அரசு, கல்வி நிறுவனங்கள், தன்னார்வ இயக்கங்கள், தனி நபர்களும் நடத்துகின்றனர். ஏப்ரல் முதல் நாளில்தான் வணிகர்கள் அனைவரும் புதுக்கணக்கைத் துவங்குகின்றனர். ஏப்ரல் மாதம் என்பது வசந்தத்தின் துவக்கம். நம்ம‌ கோடை காலம் என்பதே வசந்தமாகும்.

ஏப்ரல் 21- உலக வானவியல் தினம்

நாம் அனைவரும், விரும்பியோ, விரும்பாமலோ, வானையும், வானில் வலம் வரும் சூரியன், சந்திரன், விண்மீன்கள், வான்மீன்கள், விண்கற்கள் எரிதல் போன்றவற்றைப் பார்க்கிறோம். சிலர் பார்த்து ரசிக்கின்றனர்; சிலர் அதன் வருகைகளைப் பதிவு செய்து, பண்ணங்கள், வடிவங்கள் சோதனை செய்து, மகிழ்கின்றனர். இதுதான் வானவியல் என்பது.

அனைவரும் பூமி வினாடிக்கு 30 கி.மீ. வேகத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது. அதுமட்டுமா- பிளாஸ்மா பொருளாலான நம் சூரிய விண்மீனும், தன் கோள்கள், வால்மீன்கள் என குடும்ப சமேதராய், தன் தாய்வீடான பால்வழி மண்டலத்தை சுமாராக வினாடிக்கு 250 கி.மீ. வேகத்தில் வட்டமடிக்கிறது. பால்வழி மண்டலமும் வினாடிக்கு 370 கி.மீ வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. நாம் அனைவரும் உட்கார்ந்து இருந்தாலும், வினாடிக்கு 280 கி.மீ வேகத்தில் ஆடாமல் அசையாமல் சொகுசு ரங்கராட்டினத்தில் நகர்ந்து கொண்டே இருக்கிறோம். இப்படிப்பட்ட ஆச்சரியமான இயற்கை வானியல் நிகழ்வுகளை சாதாரண‌ மக்களிடையே சொல்வதற்காக உருவான முக்கிய நாள்தான் உலக வானியல் தினம்.

வானியல் நிகழ்வுகளை, அதன் வியப்பை அடித்தட்டு பாமர மக்களிடம் பரப்பி, பகிர்ந்து, பங்குகொள்ள உருவாக்கப்பட்டதுதான் சர்வதேச வானியல் தினம். இது 1973-முதல் கொண்டாடப்படுகிறது. ஏப்ரல் 15ம் நாளுக்குப் பிறகு வரும், வளர்பிறையின் 4வது நிலவு நாளில் இந்த வானியல் தினம் அனுசரிக்கப்படுகிறது. இவ்வாண்டு 2010ல் ஏப்ரல் 21-தான் உலக/சர்வதேச வானியல் தினம். ஏப்ரல் மாதம் உலக வானியல் மாதமாக கொண்டாடப்படுகிறது.

வானியல் தினம்/வானியல் மாதத்தில் அனைவரும் அனுபவம் இன்றியும், கருவிகள் இன்றியும், வெறும் கண்ணால் பார்த்தே வானியல் பொருட்கள் நகர்வினைக் கண்டு களிக்கலாம். ஒளிமாசு குறைவான பொது இடங்களில், கிராமத்தின் வயல் வெளிகள், பூங்காக்களில் மக்களும், மாணவர்களும், குழந்தைகளும் ஒன்றுகூடி இதனைக் கொண்டாட வேண்டும். சூரியன், விண்மீன்கள் தினமும் உதிக்கும் நேரம் பார்க்கலாம், அது பற்றி பேசலாம்.

லைரிட்.. விண்கற்கள்.. பொழிவு ..!! ஏப்ரல் 21 & 22..!!!

lyra_finderவிண்கற்கள் பொழிவைப் பார்ப்பது என்பது மிகவும் எளிதான ஒன்றுதான். யார் வேண்டுமானாலும் இரவில் வீட்டின் பின்புறம் அமர்ந்து, நிலவற்ற வானைப் பாருங்கள். வானில் பளிச்சென்று தீக்குச்சி எரிவது போல் எரிந்து கிழே விழுவதுதான் விண்கல் எறிதல் /பொழிவு. இதனை நம் வழக்கில் எரிநட்சத்திரம் என்று அழைக்கிறோம். ஆனால் இது உண்மையில் விண்மீன் அல்ல; விண்கல் நமது வளிமண்டலத்தில் மோதி எரிந்து விழுகிறது. இப்படிப்பட்ட விண்கற்கள் பொழிவுகளை பதிவு செய்வதற்காக ஒரு அமைப்பு சர்வதேச அளவில் உள்ளது. அதன் பெயர் சர்வதேச விண்கற்கள் பொழிவு நிறுவனம்.

ஒவ்வொரு ஆண்டும் வருடத்தில் பலமுறை நம் பூமி மீது விண்கற்கள் பொழிவு நடந்துகொண்டு தான் இருக்கிறது. பூமியை வலம்வந்து விட்டுச்சென்ற அதன் தூசுதும்புகள் பூமியின் வளிமண்டலம் மீது மோதுவதால் ஏற்படும் விளைவுதான் இந்த விண்கற்கள் பொழிவு. ஆனால் இது ஒரு குறிப்பிட்ட விண்மீன் தொகுதியின் கீழே காணப்படும்போது, அதனை அந்த விண்மீன் தொகுதியின் விண்கற்கள் பொழிவு என்றே பெயர் சூட்டப்படுகிறது. இந்த மாதத்தில் வரும் விண்கற்கள் பொழிவின் பெயர் லைரிட் விண்கற்கள் பொழிவு(Lyrid meteor shower) என்பதாகும். இது இம்மாதம் 16-30 தேதிகளில் காணப்பட்டாலும், இதனை தெளிவாக , நன்றாக, நிறைய எண்ணிக்கையில், 21-22 தேதிகளில்தான் காணமுடியும். பொதுவாகவே விடியற்காலை பொழுதுகளில்தான் இதனை நன்றாக பார்க்கலாம். எனவே, 21 இரவு 10 மணிக்கு மேலிருந்து 22 விடிகாலை 4 மணி வரை கண்டு மகிழலாம்.

லைரிட் விண்கற்கள்

பொழிவு மணிக்கு சுமாராக 15-20 வரை காணப்படும். குறிப்பிட்ட நாளுக்கு முன்னும் பின்னும் விண்கற்கள் பொழிவின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.

லைரிட் விண்மீன் தொகுதி என்பது வானில் வடக்கிலிருந்து கொஞ்சம் தள்ளி சற்று கிழக்காக சுமார் 50 டிகிரி /பாகை உயரத்தில் தெரியும்.இதனை இரவு 8 மணிக்கு மேல்தான் பார்க்க முடியும். அந்த விண்மீன் கூட்டத்தில் தெரியும் விண்மீன்களில் மிகவும் பளிச்சென தெரியும் விண்மீன் தான் "வேகா". அது வானில் தெரியும் பிரகாசமான 20 விண்மீன்களில், 5வது பிரகாசமான விண்மீன். யாருடைய கண்களிருந்தும் அது தப்பவே முடியாது. அவ்வளவு பளிச்சென இருக்கும். இது நம் சூரியனைவிட 3 மடங்கு பெரியது. இது சூரியனை விட பிரகாசமான, இளநீல வெண்மை ஒளி வீசும் விண்மீன். இது இன்னும் 14,000 ஆண்டுகளுக்குப் பிறகு, வடதுருவ விண்மீன் ஆக மாறப்போகிறது. ஏன் தெரியுமா? நாம் பூமியின் சுற்று வேகத்தால் வடதுருவம் லேசாக தலை சாய்ந்த பம்பரம் போல் வேகா விண்மீன் இருக்கும் பக்கமே திரும்பிவிடுவதால் வேகாவே துருவ விண்மீன் ஆகிவிடும். இது ஒரு தொடர்கதைதான்.

வேகாவுக்கு வடக்கிலும் பளிச்சென தெரியும் இரண்டு விண்மீன்கள்தான் வடக்கு கழுகின் டெனாப்பும், மேற்கே தெரியும் கும்பம் விண்மீன் தொகுதியின் திருவோணமும். இந்த முன்று விண்மீன்களும் சேர்ந்துதான் கோடை கால முக்கோணம் ஏற்படுகிறது. முதல் முதல் புகைப்படமாய் எடுக்கப்பட்ட விண்மீன் வேகாதான். எடுக்கப்பட்ட ஆண்டு ஜூலை 16, 1850.

No comments: