Monday, April 12, 2010

புவி வெப்பமடைதலும் மக்களின் வாழ்வு நிலையும்

சர்வதேச பல்லுயிரி வகைமை ஆண்டு

ஐக்கிய நாடுகள் சபை, கி.பி 2010ஆம் ஆண்டை சர்வதேச பல்லுயிரி வகைமை ஆண்டாக அறிவித்துள்ளது. அதென்னப்பா பல்லுயிரி வகைமை என்கிறீர்களா நண்பா! அதோடு இந்த புவி வெப்பமடைதலுக்கும், பல்லுயிரி வகைமைக்கும் என்ன உறவு, என்ன தொடர்பு? மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் ஏனப்பா முடிச்சு போட முயலுகிறீர்கள் என்று சொல்லுகிறீர்களா? இதில் ஓர் உண்மை அடங்கியிருக்கிறது. புவி வெப்பமடைதலுக்கும், சீதோஷ்ண நிலை மாற்றத்திற்கும் என்ன உறவோ அதே உறவுதான் புவி வெப்பமடைதலுக்கும் பல்லுயிரி வகைமைக்கும் நண்பரே! அதாம்பா மாமன் மச்சான் உறவுதான்..!

ஏன் சர்வதேச பல்லுயிரி வகைமை ஆண்டு?

எப்பொழுது ஒரு பொருளுக்கு, ஓரு உயிருக்கு அல்லது கருத்துக்கு பிரச்சனையும், வாழ்வியல் ஆதாரமும் குறைதலும் எற்படுகிறதோ அல்லது முக்கியத்துவம் அகிலம் முழுவதும் தரவேண்டும் என்ற நிலை ஏற்படுகிறதோ அதைத்தான் அந்த ஆண்டின் மையக்கருவாக ஐக்கிய நாடுகள் சபை தீர்மானித்து அறிவிக்கிறது. எனவேதான், நண்பா உலகில் வாழும் உயிரினங்களின் வாழ்வியலுக்கு நிச்சய மின்மையும், பிரச்சனையும் தோன்றியுள்ளது. உயிரினங்கள், புவி வெப்பமடைவதாலும், சீதோஷ்ண நிலை மாற்றத்தாலும் முன்பிருந்ததை விட அளவுக்கு அதிகமாக அழிந்து கொண்டே வருகின்றன. புவியைக் காப்பது என்பது அகநிலை, புறநிலை என்ற இயற்பியல், வேதியியல் நிலையுடன் பலவகை உயிரினங்கள் வாழ்வியல் நிலையைக்காப்பதும் ஆகும். நண்பர்களே, உலகத்தோரே இங்கே உங்கள் கவனம் கொஞ்சம் திரும்பட்டும். அழிவை நோக்கி செல்லும் உயிரினங்களை கருணை கூர்ந்து காப்பாற்றுங்கள் என்பதற்கான அறைகூவல்தான் 2010 ஆம் ஆண்டின் சர்வதேச பல்லுயிர் வகைமை ஆண்டு.

உயிர் உருவான தருணம்!

பல்லுயிர் வகைமை என்றால் என்ன என எண்ணுகிறீர்களா? பூமியின் மேலுள்ள சூழல் பரப்பில் வாழ்கின்ற பாக்டீரியா முதல் பாலூட்டிகள், உயர்ந்த நிலையிலுள்ள மனிதன் வரையிலுமுள்ள அனைத்து உயிரினிங்களும் தான். உயிரினங்கள் என்றாலே மரம், செடி, கொடி, புல், பூண்டு என அனைத்தும் அடக்கம்தான்! இவையெல்லாம் பூமியின் பரிணாம வளர்ச்சியில், கடந்த 350 கோடி ஆண்டுகளாய் பரிணமித்தவை பூமி தோன்றி சுமார் 1000 கோடி ஆண்டுகள் வரை எந்த ஒரு பாக்டீரியா, புழு, பூச்சி இன்றி வெற்று பூமியாய் வெறுமனே பாலையாய், மலையாய், மண்ணாய், நீராய் மட்டுமே கிடந்தது. 60 கோடி ஆண்டுக்கு முன்பு வரை பாக்டீரியாக்களும், ஆல்காக்களும் உயிரியான புரோட்டே ஜூவாக்களுமே வாழ்ந்தன.

பூச்சிகளே உலகில் நிறைந்து....!

உலகிலுள்ள உயிரினங்கள் முழுவதையும் கணக்கெடுப்பது என்பது இயலாதகாரியம் நமக்கு கண்ணுக்குத் தெரிந்ததைவிட கண்டறிந்ததை விட ஏராளமான தாவிர விலங்கினங்கள் இப்புவியில் வாழுகின்றன. உலகில் சுமார் 1.3 கோடி பூச்சியினங்கள் உள்ளன. இவைகளில் நாம் அறிந்தவை 9,00,000 மட்டுமே. அதேபோல 50.10 லட்சம் பாக்டீரியாவும், 15,00,000 இலட்சம் பூஞ்சைகளும், 10 இலட்சத்துக்கும் குறைவான உண்ணிகளும் வாழ்கின்றன. புதைபடிம தொல்லுயிரிகளை ஆராயும்போது கடந்த பல இலட்சம் வாழ்ந்துள்ளன என்பது தெரியவருகிறது. இன்று 20.1000 இலட்சம் பெரிய உயிரினங்கள் புவியில் வாழ்கின்றன. 1.15 கோடி பூச்சியினங்கள் காணப்படுகின்றன. மனிதன் தோன்றியகாலகட்டத்தில் கிட்டத்தட்ட 90சதவீதம் உயிரினங்கள் அழிந்துவிட்டன.

உயிரினம் அழிவை நோக்கி மிரட்டல்...!

இன்று, உலகில் உயிரினங்கள் மறைந்து போய்க் கொண்டிருக்கும் விகிதத்தைக் கணக்கிட்டால் இதே அளவில் போனால் இன்னும் 100 வருடங்களுக்குள், புவியின் மேலுள்ள அனைத்து உயிரினங்களும் அம்பேல்..!காலிதான்! முன்பு அழிந்ததைவிட அதிவேகமாய் 100 மடங்கு அதிகமாய்காணாமல் போய்க் கொண்டிருக்கிறதாம். ஒவ்வொரு ஆண்டும் 5000 10,000 புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, பெயரிடப்படுகின்றன நண்பா! இவைகளில் பெரும் பான்மையானவை பூச்சியினங்களே! ஆனால் அதைவிட அதிக அளவில் அழிகின்றன.

மனிதனின் மற்ற உயிரினங்களைச் சார்ந்தே...

நமது உணவின் 80 சதமான பொருட்கள், 20 வகையான உயிரினங்களிலிருந்தே வருகின்றன. மனிதன் தினந்தோறும் எவ்வாறு தாவரங்களையும், விலங்கினங்களையும் பயன்படுத்துகிறான் தெரியுமா? சொன்னால் நம்ப மாட்டீர்கள். சுமார் 40,000 வகையிலான உயிரினங்கள்...! உலகிலுள்ள அனைத்து மக்களும், உணவு, உடை, உறைவிடம், மருந்து, தொழில் என அனைத்துக்கும் உயிரினங்களையே தான் நம்பி வாழவேண்டியுள்ளது. பேரிடர்களைத் தடுக்கும் பாதுகாப்பு கவசமாக உயிரினங்கள் உள்ளன. சுமார் 40சதம் நவீன மருந்துகள் காட்டு உயிரினங்களிலிருந்தே பெறப்படுகின்றன. ஆனால், எவை, எவை, எப்படி, எதற்காகப் பயன்படுகின்றன என்ற உண்மை பெரும்பான் மையான மக்களுக்கு தெரியாது..!

உயிரின அழிவு யாரால்?

கிட்டத்தட்ட 90சதம் தாவரங்களின் பெயர்கள் நமக்குத் தெரியாது. இதில் சூழல் மாற்றத்தினால் புவி வெப்பமடைதலால் இப்போதுள்ள உயிரினங்களில் சுமார் 30சதம் கி.பி 2050 க்குள் பூமியைவிட்டு ஓடியே போய்விடும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். 1/8 பங்கு தாவர இனங்கள், அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கின்றன. இப்போது நடந்துவரும் உயிரினங்களின் அழிவு, இதுவரை எப்போதுமே, மனித சரித்திரத்தில் நிகழ்ந்தது இல்லை. ஆனால், அழிவின்காரண கர்த்தா.. மூலகாரணம் யார் தெரியமா? நீங்கதாங்க என நான் சொன்னால் கோபப்படுவீர்கள்.. ஆனால், அதுவே உண்மை நண்பா! மனிதர்களின் செயல்பாடுகள் தான். நாம்தான் இயற்கையை உயிரினங்களை அழித்து பூமியை சித்திரவதைப்படுத்தி இன்னலுக்கு உள்ளாக்கியுள்ளோம்...!

எப்போதெல்லாம் பேரழிவு..!

நாம்தான்.. நம் மனித இனம்தானே, ஆயிரக்கணக்கான ஏக்கர்காடுகளை வெட்டி தரிசாக்குகிறது..! நாம்தானே சூழலை மாசுபடுத்துகிறோம். உலகிலுள்ள 12 முக்கிய உயிரிப்பல்லுயிரி வகைமையின் வெப்ப தளங்களில் இரண்டு இந்தியாவில் உள்ளன. அவைதான் மேற்குத் தொடர்ச்சி மலையும், கிழக்கு இமயமலைப்பகுதிகளும், இவைகளில் உலகின் 60 சதம் உயிரினங்கள் வாழ்கின்றன. உலகின் மிகப் பெரிய பேரழிவுகள், 44 கோடி, 37 கோடி, 21 கோடி மற்றும் 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தன. இப்போது முன்பு வாழ்ந்த உயிரினங்களில் 11 உள்ளன. 99சதம் உயிரினங்கள் முன்பே அழிந்து விட்டன. இருக்கும் துளியூண்டு உயிரினத்தொகுப் பையும், அழித்தே தீருவோம் என இப்போது கங்கணம் கட்டிக் கொண்டு திரிகிறோம்.

பாலைவனமாகய் போகும் அமேசான்...!

நாம் இப்போது 6 வதாக நடக்கவுள்ள பேரழிவுக்காலத்தில் இருக்கிறோம். ஒன்றுமட்டும் உண்மையும், உறுதியும் நண்பா! இதுவரை நடந்த உயிரினப் பேரழிவுகளுக்குக் காரணம். இயற்கைப் பேரிடர்கள் மட்டுமே! ஆனால் இப்போது எதிர்வரவுள்ள அழிவு இயற்கைப் பேரிடர்களாக இருந்தாலும் கூட அவை மனிதனால் மனிதப் பயன்பாட்டால், இயற்கை வளம் சிதைக்கப்படுவதால் உயிரினங்கள் அழியப் போகின்றன. எதிர்காலத்தில் அமேசான் பாலைவனமாகும் வாய்ப்பு ஏராளமாக உள்ளது. உலகில் 25சதம் உயிரினங்கள் விரைவில் அழியப் போகின்றன என உலக நல நிறுவனம் எச்சரிக்கிறது.

அச்சமூட்டும் எதிர்காலம் புவிவெப்பமடை தலால்...!

உயிரின அழிவின் அச்சம் தீவிரவாதிகள் அணுப் போர் போலல்ல.. இன்னும் இன்னும் தாக்கத்துடன் ஆல்ப்ஸ், இமயமலைகள் தனது பனிப்பகுதியில் பாதிக்குமேல் இழக்கப்போகின்றன. கிரீன்லாந்து பனி உருகி, நைல் நதி போல் ஓடப்போகிறது. அண்டார்டிகாவின் பனிப்பாறைத் தகடுகள் உடைந்து கொதிக்கப்போகின்றன. சுந்தர வன தீவுகள், கடலுக்குள் அமிழ்ந்து போகப்போகின்றன. சர்வதேச தேதிக் கோட்டுக்கு அருகிலுள்ள கிரிபாதி, டுவாலு தீவுகள்காணாமல் போகப்போகின்றன. இவற்றையெல்லாம் நினைத்து, பார்த்து பயப்படுவது மட்டும்தான் நம் செயலா? கட்டுப் படுத்துவதும்,காப்பதும், தடுப்பதும் நம் கைகளில்தான் உள்ளது நண்பா?

உருகும் பனியும், வாழ்வும் தொடரும்....!

நன்றி: பேரா.சோ.மோகனா

2 comments:

அகல்விளக்கு said...

அச்சமேற்படுத்தும் நிகழ்வு...

அறிந்து கொள்ளத்தான் மக்கள் ஆர்வமாயில்லை...

:(

ரோகிணிசிவா said...

பாலைவனம் பிரச்சினை இல்லைங்க,தண்ணி கஷ்டம, கரெண்ட் போயிரும் பயம் இல்ல ,,
தமிழ் நாடு நினச்சா தான் பயமா இருக்கு,
எங்கே செல்லும் இந்த பாதை ??????