Friday, February 12, 2010

நின்றொளிரும் விந்தை

நின்றொளிரும் வீட்டு உபயோகப்பொருட்கள் இன்று அதிகமாக புழங்கத் தொடங்கியிருக்கின்றன. பொம்மைகள், செல்பேசிகள், கைக்கடிகாரங்கள் என்றெல்லாம் நின்றொளிரும் பொருட்களின் பட்டியல் நீண்டுகொண்டே போய் இப்போது ‘நின்றொளிரும் பைஜாமா’ கூட கிடைக்கிறதாம். இருட்டில் தேடி அணிந்துகொள்ள அடுத்தவரை தொந்தரவு செய்யவேண்டாம் இல்லையா!

‘ஒளிர்தல்’ என்பது இயற்கையாகவே ஒளிவிடும் தன்மை ஆகும். ஒளிரும் ஆற்றல் கதிரவனுக்கும் விண்மீன்களுக்கும் உண்டு என்பது நமக்கெல்லாம் நன்றாகத் தெரியும். ஒரு பைஜாமாவிற்கு இயற்கையாக ஒளிரும் ஆற்றல் இல்லை. அது வேறு ஒரு ஒளிமூலத்தில் இருந்து ஆற்றலைப் பெற்று தேக்கிவைத்துக் கொள்கிறது. அவ்வாறு தேக்கி வைத்துக்கொண்ட ஒளிஆற்றலை சிறிது நேரத்திற்கு வெளிவிடும் தன்மையை நாம் நின்றொளிர்தல் என்கிறோம்.

சில வேதிப்பொருட்கள் நின்றொளிரும் தன்மையைப் பெற்றிருக்கின்றன. தாமிரத்தினால் முடுக்கம் பெற்ற துத்தநாக சல்ஃபைடு, வெள்ளியினால் முடுக்கம் பெற்ற துத்தநாக சல்ஃபைடு போன்ற வேதிப்பொருட்கள் நின்றொளிரும் தன்மை உடையவை. நின்றொளிர்தல் சில நேரங்களில் மணிக்கணக்காகக்கூட நிகழக்கூடும். நின்றொளிரும் பொருட்கள் பெரும்பாலும் மென்மையான பசுமை நிற ஒளியை வெளிவிடும். ஒளியின் அடர்த்தியும் மிகக்குறைவாக இருக்கும்.
தொலைக்காட்சிப் பெட்டியின் திரை, கம்ப்யூட்டர் திரை ஆகியவை நின்றொளிரும் வேதிப்பொருட்கள் பூசப்பட்டவை ஆகும். இந்த வகையான சாதனங்களில் ஒரு எலெக்ட்ரான் கற்றை மூலம் நின்றொளிரும் வேதிப்பொருட்களுக்கு ஆற்றல் அளிக்கப்படுகிறது. ஆனால், ஒரு குழல் விளக்கு நின்றொளிர்வதற்குத் தேவையான ஆற்றலை புற ஊதாக்கதிர்கள் அளிக்கின்றன. நின்றொளிரும் வேதிப்பொருட்கள் மூன்று முக்கிய பண்புகளை உள்ளடக்கியவை. முதலாவதாக நின்றொளிரச் செய்வதற்கு தேவைப்படும் ஆற்றல் வகை. இரண்டாவதாக நின்றொளிர்தலில் வெளிப்படும் நிறங்கள். மூன்றாவதாக, ஆற்றலைப் பெற்றவுடன் நின்றொளிரும் நேரம்.

ஒரு பொம்மை இருட்டில் நின்றொளிர வேண்டுமெனில், சாதாரண ஒளியில் இருந்து ஆற்றலை பெற்று நீண்ட நேரம் நின்றொளிரும் வேதிப்பொருள் தேவை. துத்தநாக சல்பைடு, ஸ்ட்ரான்ஷியம் அலுமினேட் ஆகிய வேதிப்பொருட்களுக்கு இத்தகைய ஆற்றல் உள்ளது. நின்றொளிரும் வேதிப்பொருள் பிளாஸ்டிக்குடன் கலந்து உருக்கி வார்த்தெடுக்கப்படுகிறது. சில விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள் எந்தவொரு ஒளிமூலத்தின் துணையுமின்றி ஒளிரும் தன்மையுடையதாக இருக்கும். இந்த கைக்கடிகாரங்களில் நின்றொளிரும் பொருளுடன் கதிரியக்கத்தனிமங்கள் சேர்க்கப்படுகின்றன. கதிரியக்கத்தனிமங்களில் இருந்து வெளிப்படும் ஆற்றலைப் பெற்று நின்றொளிரும் தனிமங்கள் ஒளியை உமிழ்கின்றன. ஒரு காலத்தில் ரேடியம் என்னும் கதிரியக்கத்தனிமம் இதுபோன்ற கைக்கடிகாரங்களில் பயன்பட்டுவந்தது. இப்போதெல்லாம், ஹைட்ரஜனின் கதிரியக்க ஐசோடோப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. செயற்கையாக உருவாக்கப்பட்ட புரோமிதியம் போன்ற கதிரியக்கத்தனிமம் தற்போது பயன்பாட்டில் உள்ளது.

No comments: