Thursday, April 2, 2009

பாதுகாப்பு அரணாகவும் ஆபத்தாகவும் விளங்கும் ஓசோன்


வளிமண்டலத்தில் பூமியிலிருந்து 10-லிருந்து 50 கி.மீ. உயரத்தில் ஸ்ட்ராடோஸ்பியர் என்ற அடுக்கு இருக்கிறது. இதில் உள்ள ஆக்சிஜன் மூலக்கூறின் மீது சூரியனிலிருந்து வரும் அல்ட்ராவயலட் கதிர்கள் பட்டு அதை இரு ஆக்சிஜன் அணுக்களாகப் பிரிக்கின்றன. இப்படிப் பிரிந்த ஓர் ஆக்சிஜன் அணுவும் பிளவுபடாத ஒரு ஆக்சிஜன் மூலக்கூறும் சேர்ந்து ஓசோன் உருவாகிறது. வளிமண்டலத்தில் உள்ள ஓசோனில் 90 சதம் இந்த ஸ்ட்ராடோஸ்பியர் அடுக்கில்தான் உள்ளது.

அல்ட்டராவயலட் கதிர்கள் அப்படியே பூமிக்கு வந்தால் தோல் புற்றுநோய் உட்பட தோல் பாதிப்புகள் மற்றும் மரபியல் கோளாறுகளை ஏற்படுத்தக் கூடியவை. ஆனால் அல்ட்ராவயலட் கதிர்களின் பெரும்பகுதியை ஓசோன் படலம் உள்வாங்கிக் கொண்டுவிடுவதால் நாம் ஆபத்திலிருந்து தப்பிக்கிறோம். ஆக, ஓசோன் அடுக்கு நமக்கு ஒரு பாதுகாப்பு அரணாக விளங்குகிறது.

இந்த பாதுப்பு அரணை பலவீனப்படுத்தி அதில் `ஒட்டை’யைப் போடும் வேலையை மனிதன் செய்கிறான் ! ஆலைகளிலிருந்து வெளியிடப்படும் குளோரோப்ளூரோகார்பன், புரோமோப் ளூரோ கார்பன் போன்ற கூட்டுப் பொருட்களின் மீது அல்ட்ராவயலட் கதிர்கள் பட்டு அவற்றி லிருந்து குளோரின், புரோமின் போன்ற தனிமங்களை விடுவிக்கின்றன. இந்தத் தனிமங்கள் ஓசோன் மூலக்கூறுகளை உடைத்து அவற்றின் எண்ணிக்கையைக் குறைத்துவிடுகின்றன. அதாவது ஓசோன் படலத்தைப் பலவீனப்படுத்தி விடுகின்றன. இதைச் சரிசெய்வதற்கான முயற்சிகள் ஒருபுறம் உலக அளவில் நடந்து கொண்டிருக்கின்றன. குளோரோப்ளூரோகார்பனை வெளியிடுவதற்குத் தற்போது சர்வதேசத்தடை இருக்கிறது. இதன் காரணமாக, ஓசோன் அடர்த்தி குறைவது கடந்த ஆண்டுகளில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.

ஸ்ட்ராடோஸ்பியரில் இருக்கும்போது நமக்குப் பாதுகாப்பு கொடுக்கும் அதே ஓசோன் பூமிக்கு அருகேயுள்ள முதல் வளிமண்டல அடுக்கான ட்ராபோஸ்பியரில் இருக்கும்போது நமக்குத் தீமை பயக்கிறது. நுரையீரல் மற்றும் இதயக் கோளாறுகளை அது ஏற்படுத்துகிறது. சுற்றுச்சூழல் மாசுபடுவது, வெப்பநிலை அதிகரிப்பது ஆகியற்றின் காரணமாக தரைக்கு அருகே ஓசோனின் அடர்த்தி அதிகரிக்கிறது. வாகனங்கள் வெளியிடும் புகையைக் கட்டுப்படுத்துவதோடு, வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் வேண்டியிருக்கிறது. ஒவ்வொருவரும் ஒரு தனி வாகனத்தில் பயணம் செய்யப் பிரியப்படும் நவீன யுகத்தில் வாகனங்கள் எண்ணிக்கையைக் குறைப்பது என்பது எவ்வளவு தூரம் சாத்தியம்? பொதுப்போக்குவரத்தை அதிகரிப்பது ஒன்றே ஓரளவுக்கு பிரச்சனையைத் தீர்க்க முடியும். புகைகளைக் கக்கும் வாகனங்களுக்கு அனுமதி மறுப்பது மற்றொரு வழி.

நன்றி: பேராசிரியர் கே. ராஜு

No comments: