Friday, March 20, 2009

அறிவியலை காதலிக்க கற்றுக்கொள்வோம் !!

சர்வதேச வானவியல் ஆண்டு கொண்டாடும் வேளையில் சார்லஸ் டார்வின் பிறந்த இருநூறாம் ஆண்டு விழாவும் கொண்டாடப்படுகிறது. உயிர்களின் பரிணாம வளர்ச்சிச் சித்தாந்தத்தின் பிதா என்று அழைக்கப்படும் சார்லஸ் டார்வின் 1809 பிப்ரவரி 12ம் தேதி பிறந்தார். உலகெங்கும் "டார்வின் 200' ஆண்டு விழாக் கொண்டாட்டங்கள் நடந்தேறி வருகின்றன. கி.பி. மூன்றாம் நூற்றாண்டு ரோமானியப் பாதிரியாரை மறக்காமல் பிப்ரவரி 14ம் தேதி வாலென்டைன் தினமாகக் கொண்டாடித் தீர்க்கிறோம். இளந் தலைமுறைப் போர் வீரர்களுக்கு அரசாங்கச் சட்டத்திற்குப் புறம்பாகக் கட்டாயக் கல்யாணம் செய்துவைத்தவர் அவர். இங்கிலாந்தில் அவர் இறந்த நாள் "லூப்பர்காலியா' என்ற திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் பிப்ரவரி 14ம் தேதி நடத்தப்படுகிறது. பலரையும் கிறிஸ்தவத்துக்கு மதம் மாற்றும் பண்டிகை அது. அதுவே இன்றைய காதலர் தினம். வாழ்க நம் இளைய காதலர்கள். "ரோம்' நாட்டை உருவாக்கிய ரோமுலஸ் மற்றும் ரீமஸ் ஆகியோர் பெயரால் உருவான "ரொமான்ஸ்' விவகாரம் தமிழகத்திலும் தம்பட்டம் அடித்துக் கொண்டாடப்படுகிறது.

டார்வினும் எம்மா எட்ஜ்வுட் என்கிற தமது மனைவியைக் காதலித்தவர்தான். 1839ம் ஆண்டு பதினேழு ஆண்டு இடைவெளியில் தலைப்பிள்ளை வில்லியம் எராஸ்மஸ் முதல் கடைக்குட்டி சார்லஸ் வாரிங் டார்வின் வரை பத்துக் குழந்தைகளுக்குத் தகப்பனார் இவர். ஆனால் இவர் மகன்களில் ஜார்ஜ் ஹோவார்டு டார்வின் (18451912) சிறந்த வானவியலார். பிரான்சிஸ் டார்வின் (18481925) தாவரவியலர். இலியோனார்டு டார்வின் பொருளாதாரவியல் நிபுணர். அடுத்தவர் ஹோரால் டார்வின் கட்டடப் பொறியாளர். அவர்களில் மூன்றாவதான மேரி எலீனர் டார்வின் பிறந்து ஒரு மாதத்திற்கு உள்ளேயே பாவம், இறந்து போனாள். இரண்டாவது மகளான பத்து வயது அன்னி எலிசபெத் டார்வினையும் இழக்க நேர்ந்த பிறகு சார்லஸ் டார்வின் தாம் சார்ந்த கிறிஸ்தவ மதத்தில் நம்பிக்கை இழந்தார். தேவாலயங்களுக்குச் செல்வதையும் நிறுத்திக் கொண்டார்.

ஆனால், இளவயதிலேயே இவர் இயற்கையைக் காதலித்தார். அறிவியல் ஆய்வுக்காகவே உலகம் சுற்றிய இளைஞர் சார்லஸ் டார்வின். இவர் தம் 22ம் வயதில் "பீகிள்' எனும் பிரிட்டீஷ் கப்பலில் புறப்பட்டார். ஐந்தாண்டுப் பயணத்தில் டாஸ்மேனியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆராய்ச்சி செய்தார். உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியை நேரில் பதிவு செய்தார். தென் அமெரிக்கக் கரை அருகே கலாபகோஸ் எனும் தீவில் ஆள் நடமாட்டம் அற்ற தீவுகள் அநேகம். அங்கு ராட்சதப் பல்லிகள், தரைவாழ் ஆமைகள், பெரிய நண்டுகள், கடல் சிங்கங்கள், வனப் புறாக்கள் போன்ற பலவித உயிரினங்கள் வாழ்ந்து வருவதைக் கண்டார். அந்தத் தீவின் சில சிட்டுக் குருவி சாதிச் சின்னஞ்சிறு பறவை இனங்களை இங்கிலாந்துக்குக் கொண்டுவந்தார். தம் சக ஆய்வர் ஜான் கூல்டு என்பவரிடம் தந்து அவற்றின் இன வரலாற்றை ஆராயும்படி கூறினார். அறிவார்ந்த ஜான் கூல்டு "பறவைகள் பலவிதம்' என்று உணரவில்லை. இறைவன் படைப்பில் அனைத்து ஜீவராசிகளும் ஒரே இனம் என்று கருதினார் கூல்டு. ஆனால், வெவ்வேறு புறச்சூழல்களில் பரிணமித்த பறவைகள் வெவ்வேறு ரகமாக இருக்க வேண்டும் என்பது சார்லஸ் டார்வின் சிந்தனையில் தோன்றியது.

அக்கண்டுபிடிப்பு இன்று உலகப் பிரசித்தம். அதற்கிடையில் ஆல்பிரட் ரஸ்ஸல் வாலஸ் எனும் உயிரியலார் கிழக்கிந்தியத் தீவுகளில் ஆய்வில் ஈடுபட்டு இருந்த டார்வினுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில், "உயிர் வாழ்தலுக்கான போராட்டம், சூழ்நிலைக்குத் தக்க உயிர் அமைப்பு, சிறுசிறு படிநிலை வளர்ச்சி' ஆகியனவே உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியின் ஆதாரம் என்று நறுக்காக எழுதி இருந்தார். இயற்கை தனக்கான வளர்ச்சி முறையை இயல்பாகத் தானாகவே தேர்வு செய்து கொள்கிறது என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த வாசகங்கள் இன்று உயிரியல் மட்டும் அன்றி, அரசியல், இறையியல் என்று அனைத்துத் துறைகளுக்கும் பொருந்தும். பரிணாம வளர்ச்சியும் காலத்துக்கு ஏற்ப மாறுபடும். கால மாற்றங்களுக்குத் தக்கபடி அந்தந்த உயிரினத்தின் மனநிலையிலும், சமூக அமைப்பிலும் மாற்றங்கள் நிகழ்வது தடுக்க இயலாதது. கார்ல்மார்க்ஸ் கூட படிப்படியாக நிகழும் சமுதாய மாற்றங்களைச் சுட்டுவதற்கு டார்வினின் "பரிணாமம்' என்ற அடிப்படைச் சொல்லாட்சியைக் கையாண்டார். எப்படியோ, தீவுக்குத் தீவு உயிரின வகையில் மாறுபடுவதை டார்வின் உணர்ந்தார். தம் ஆய்வு முடிவுகளை 1858 ஜூலை முதல் நாளன்று லின்னேயுஸ் சங்கத்தில் உரையாக நிகழ்த்தினார். மறுஆண்டில், "உயிரினங்களின் தோற்றம் மற்றும் இயற்கைத் தேர்வு வழி உயிர் வகைப்பாடுகள் குறித்த கட்டுரையின் சுருக்கம்' என்ற தலைப்பில் எழுதினார். "பெரிய புத்தக'மாக வெளியிட விரும்பினார். ஆனால் ஜான் முர்ரே பதிப்பகத்தார் தலைப்பின் நீளத்தைச் சுருக்குமாறு கேட்டுக்கொண்டனர். இறுதியில் "உயிரினங்களின் தோற்ற மூலம்' என்கிற தலைப்பில் 1859 நவம்பரில் நூல் வெளியானது. அதிலும் விடாப்பிடியாகத் தலைப்புக்கு அடியில் "இயற்கைத் தேர்வு வழிமுறைகளில்' என்று சேர்த்துக் கொண்டாராம் டார்வின். அத்துடன் "அல்லது வாழ்க்கைப் போராட்டத்தில் பரிணமிக்க வாய்ப்புள்ள இனங்களின் பாதுகாப்பு' என்ற உப தலைப்பையும் சேர்த்தே அச்சிட வேண்டும் என்று வற்புறுத்தினாராம். எப்படியானால் என்ன பதிப்பகத்தார்க்கு லாபம். ஒரே நாளில் 1250 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன.

இந்நூல் வெளியாகி இது 150ம் ஆண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது. வேதாகமங்களின்படி மனிதன் கடவுள் தன்மை அடைதலையே "முழுமைநிலை' என்று கண்டனர். இதனையே மனிதன் எட்ட இயலாத இறைத்தன்மை என்றும் மதவாதியர் அறிவித்தனர். ஆயின் மக்கள் மாக்கள் வேறுபாட்டினை விளக்கும் நிலையில் தான் "முழு மனிதன்' பற்றிய எண்ணம் உதிக்கிறது. அதனால் குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன் என்கிற டார்வின் கூற்று பலருக்குக் கேலிக் கூத்து ஆயிற்று. 1860ம் ஆண்டில் ஒரு முறை டார்வினின் ஆதரவாளரான தாமஸ் ஹக்ஸ்லி எனும் உயிரியல் நிபுணருக்கும் சாமுவேல் வில்பர்ஃபோர்ஸ் என்கிற ஆக்ஸ்ஃபோர்டு பிஷப்புக்கும் இடையே பட்டிமன்ற விவாதமே நடந்தது. பிஷப் வாதத்தில் வலு இல்லை. அதனால் அவரே ஒரு கட்டத்தில் கோபமுடன், ""உமது பிறப்புக்கு மனிதக் குரங்கு உறவு என்றால் தாத்தா வழியிலா, பாட்டி வழியிலா? '' என்று குத்தலாகக் கேட்டார். ஆத்திரம் அடைந்த ஹக்ஸ்லி, ""எதையும் அறியாமல் முன்முடிவுகளை வைத்துக்கொண்டும் தப்பான சிந்தனையோடு வாழும் பகட்டுக் கலாசாரப் படிப்பாளிக்கு வாரிசாக இருப்பதைவிட ஒரு குரங்குத் தாத்தாபாட்டிக்குப் பேரனாக இருப்பதே மேல்'' என்று போட்டாரே ஒரு போடு. அந்நாள் மதபோதகர்கள் டார்வின் ஒரு பைத்தியம் என்றே தூற்றினர்.

உயிர்களின் சிருஷ்டிக்கான மூல ஆதாரம் தேடும் அவரது முயற்சி விவிலியத்துக்கு விரோதம் ஆனது. ஆனால் இன்று, டார்வினின் இருநூறாவது ஆண்டு விழாவையொட்டி 2008 செப்டம்பர் மாதத்தில் பாவ மன்னிப்பு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில், ""டார்வின் ஆகிய உங்களைத் தவறாகப் புரிந்து கொண்டதற்கும், மற்றவர்கள் தங்களைத் தவறாகப் புரிந்து கொள்ளும் வகையில் (உங்களுடன் ஏற்பட்ட கருத்து மோதலில்) எங்களது முதல் பிரதிபலிப்புத் தவறாக அமைந்துவிட்டதற்கும்'' மன்னிப்பு கோருகிறது இங்கிலாந்து தேவாலயம் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உள்ளவாறே மனிதன் குரங்கிலிருந்துதான் பிறந்தான் என்பதில் சந்தேகமே இல்லை. பிறவிக் குணம் மாறுமா என்ன? அதனால்தான் மதத்துக்கு மதம் அல்லது கட்சிக்குக் கட்சி தாவுகிறானோ என்னவோ?
நன்றி: நெல்லை சு முத்து

2 comments: