Monday, March 16, 2009

நீங்கள் மட்டுமா; நானும்தான்..!

ஸ்வீடன் நாட்டின் ஃபுருலிக் உயிரியல் பூங்காவில் உள்ள ஒரு சிம்பன்சி குரங்கின் வினோதமான செயல் மனிதனைப் பற்றி விஞ்ஞானிகள் கொண்டிருந்த சில கருத்துக்களை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.


சான்டினோ என்ற 31 வயதான அந்த சிம்பன்சி தன்னைக் காண வரும் பார்வை
யாளர்களை நோக்கிக் கற்களை எறியும் பழக்கத்தைக் கொண்டுள்ளது. பொதுவாக சிம்பன்சி குரங்குகள் கற்களை எறியும் பழக்கத்தைக் கொண்டுள்ளன என்பதால் சான்டினோவின் இச்செயல் வியப்பானதல்ல. ஆனால் கல்லை எறிவதற்காக அக்குரங்கு மேற்கொள்ளும் மற்றொரு நடவடிக்கைதான் ஆச்சரியப்படுத்துவதாகும். பார்வையாளர்கள் மீது எறிவதற்கான கற்களை அக்குரங்கு முன்கூட்டியே சேகரித்து அருகில் குவித்து வைத்துக் கொள்கிறது என்பதுதான் அது.

பார்வையாளர்கள் கூட்டத்தை விரும்பாத சான்டினோ பூங்கா திறக்கப்பட்ட சிறிது நேரத்திற்குள்ளாகவே கற்களை வீசத்தொடங்கி விடுமாம். அவ்வாறு வீசுவதற்கான கற்களை பூங்கா மூடியிருக்கும் போது சேகரித்து அருகில் வைத்துக் கொள்கிறது. சிதறிக்கிடக்கும் கற்களை பொறுக்கி எடுப்பதோடு மட்டுமல்லாமல், அருகிலுள்ள கான்கிரீட் தரையை கைகளால் குத்தி அதிலிருந்தும் தேவையான அளவுகளில் கற்களை எடுத்துக் கொள்கிறது என்று பூங்கா ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். பலநாட்கள் ரகசியமாக சான்டினோவின் நடவடிக்கைகளை கண்காணித்ததில் இந்த வியப்பான தகவல் தெரிய வந்துள்ளது. குளிர்காலங்களில் பூங்கா பலநாட்களுக்கு தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் போது சான்டினோ இச்செயல்பாட்டை முற்றிலுமாக நிறுத்தி விடுகிறது என்று மேலும் ஆச்சரியப்படுத்துகிறார்கள் அவர்கள்.

சான்டினோவின் இந்த வினோத நடவடிக்கையிலிருந்து பார்வையாளர்களைக் காப்பாற்ற வேண்டி பூங்கா ஊழியர்கள் அதன் அருகிலிருந்த கற்களை அப்புறப்
படுத்தினார்கள். ஆனால் அதன் பிறகும் சான்டினோ 50 முறை கற்குவியலை உருவாக்கியது. 18 முறை கான்கிரீட் தளத்தைப்பெயர்த்து கற்களை உருவாக்கியது.

“இதுபோன்று முன்கூட்டியே திட்டமிட்டுச் செயல்படுவதற்கு குறிப்பிடத்தக்க அறிவாற்றல் தேவை. எதிர்கால நிகழ்வுகளை முன்கூட்டியே ஊகித்து அறியும் திறனும் இதற்கு வேண்டும். இதுவரை இத்திறன் மனிதர்களுக்கு மட்டுமே உரியது என்றுதான் நினைத்து வந்தோம்,” என்கிறார் இந்த ஆய்வுக்குழுவின் தலைவரும், விஞ்ஞானியுமான மத்தியாஸ் ஒஸ்வாத். இந்நிலையில் சான்டினோவைக் கட்டுக்குள் கொண்டு வர அறுவை சிகிச்சை செய்ய உயிரியல் பூங்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

2 comments:

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

வியப்பான செய்தி..
பகிர்ந்ததற்கு நன்றி.

Pl remove word verification in comment settings

அறிவியல் விழிப்புணர்வு said...

This news making us to think a lot about darwin evolution theory.