ஸ்டெம் செல்கள் பற்றிய ஆராய்ச்சிக் கும் பரிணாமக் கொள்கைக்கும் பொதுவான ஓர் அம்சம் உண்டு. அறிவியலின் இந்த இரண்டு துறைகளும் அமெரிக்கர்களின் மத உணர்வுகளை ஏதோ ஒரு விதத்தில் காயப்படுத்திவிடுகின்றன. விளைவு..? இவ்விரு துறைகளிலும் நடைபெறும் ஆராய்ச்சிகள் அமெரிக்கர்களின் எதிர்ப்புக்கு ஆளாகின்றன. டார்வின் பிறந்து 200 ஆண்டுகள் ஆகிவிட்டதை யொட்டி டார்வினுடைய இரு நூற் றாண்டு விழாவை உலகமே கொண்டாடிக் கொண்டிருக்கும் இன்றைய யுகத்தில்தான் இந்த நிலைமை ! ஐரோப்பியர்கள் மாதிரி அமெரிக்கர்கள் அறிவியல் மனப்பான்மையில் முதிர்ச்சி பெற்றவர்கள் அல்ல. பரிணாமக் கொள்கையை 40 சத அமெரிக்கர்களே ஏற்றுக் கொள்கின்றனர். மீதி 60 சதம் பேர் படைப்புக் கொள்கையையே நம்புகின்றனர்.
அமெரிக்காவின் இருமுகங்கள்
அமெரிக்கா ஒரு புறம் அறிவியலில் முன்னேறுகிறது. மறுபுறம் அமெரிக்காவின் இன்னொரு முகம் அறிவியல் உண்மைகளை ஏற்கவும் மறுக்கிறது. இத்தனைக்கும் அமெரிக்காவில் பெற்றோர்கள், நீதிமன்றம் வரை சென்று பள்ளிகளில் பரிணாமக் கொள்கையே போதிக்கப்பட வேண்டும் என்ற போராட்டத்தை நடத்தி வெற்றியும் பெற்றுள்ளனர். இதை முறியடிக்க, அமெரிக்காவின் பல மாநிலங்கள் தங்களுடைய மதக் கருத்துக்களைப் பள்ளிகளில் “அறிவியல் உண்மைகளாக”த் திணிக்கப் பல குறுக்கு வழிகளைக் கண்டுபிடிக்கின்றன ! பரிணாமக் கொள்கையின் மீது பள்ளிகள் அவநம்பிக்கை கொள்ளச் செய்யவும் படைப்புக் கொள்கையும் `அறிவியல்’ சார்ந்ததே என போதிக்கச் செய்யவும் பல புதிய கற்பனை வளம் மிகுந்த சட்டங்களை அவை கொண்டு வந்து விட்டன ! `சைன்டிஃபிக் அமெரிக்கன்’ சமீபத்தில் ஓர் ஆய்வினை நடத்தி , அமெரிக்க உயிரியல் ஆசிரியர்களில் எட்டில் ஒருவர் படைப்புக் கொள்கையை பரிணாமக் கொள்கைக்கு மாற்றான அறிவியல் கொள்கையாகப் போதிக்கிறார் எனத் தெரிவித்துள்ளது. “பரிணாமக் கொள்கையைப் புறக்கணித்து விட்டால் உயிரியல் துறையில் எதுவுமே அறிவுக்குப் பொருந்தி வருவதாக இருக்காது” என்கிறார் நவீன பரிணாமக் கொள்கைக்கு அடித்தளமிட்ட மரபியல் நிபுணர் தியாடோசியஸ் டோப்சான்ஸ்கி (தகவல் : தி இந்து).
எவ்வ...ளவு பெரிய விஞ்ஞானி சொன்னால் என்ன, அறிவியல் உண்மைகளை ஏற்க மாட்டோம் என்பவர்களைப் பற்றி என்ன சொல்வது? மதவாதக் கருத்துக்களுக்கும் அறிவியல் உண்மைகளுக்கும் இடையே மோதல் ஒன்றும் புதிதல்ல. பூமியைச் சூரியன் சுற்றிவரவில்லை, பூமிதான் சூரியனைச் சுற்றிவருகிறது என்று கோப்பர்னிக்கஸ், கலீலியோ போன்ற விஞ்ஞானிகள் கூறியபோது, மதவாதிகள் முதலில் அதை ஏற்கவில்லை. அறிவியல் கண்டு பிடிப்புகளைப் புறக்கணிக்க முடியாத காரணத்தால், பின்னர் ஏற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பரிணாமக் கொள்கை முன்மொழியப்பட்டு 200 ஆண்டுகள் கழித்தும் எதிர்ப்பு இருப்பதற்குக் காரணம், அது உயிரினங்கள் மற்றும் மனிதனின் தோற்றம் பற்றி காலம் காலமாக பல்வேறு மதங்களைச் சேர்ந்த போதகர்கள் பிரச்சாரம் செய்துவந்த கருத்துலகத்தை வேரொடு சாய்த்த புரட்சித் தத்துவம் என்பதனால்தான்.
இந்திய நிலை
இந்தியாவின் கதையும் கிட்டத்தட்ட இதேதான். இங்கு பள்ளி, கல்லூரி வகுப்பறைகளில் பரிணாமக் கொள்கை அதற்குரிய முக்கியத்துவத்தோடு போதிக்கப்படுவதில்லை. அது போக, இந்தியாவில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களின் சதவீதம் 60 சதம் மட்டுமே. அவர்களும் போகிற போக்கில் போதிக்கப்பட்ட பரிணாமக் கொள்கையை ஓரளவுக்குத் தெரிந்து வைத்திருப்பவர்கள். அவ்வளவுதான். வீடுகளில் உள்ள நிலைமையை அதிகம் விவரிக்க வேண்டியதில்லை. உங்களுக்கே தெரியும்.
சினிமாக்களிலும் பிற ஊடகங்களிலும் படைப்புக் கொள்கையும் அதனைச் சார்ந்த பல மூடநம்பிக்கைகளும் பிரதான இடம் பெறுகின்றன. தொலைக்காட்சித் தொடர்களில் ஜாதகம் பார்ப்பதை ஏதோ முடிந்த முடிவானவைபோல் காண்பிக்கும் காட்சிகள் ஏராளம். அதீத சக்தி வாய்ந்த சாமியார்கள் ஒரு குடும்பத்தில் நடக்க இருக்கும் நல்லது கெட்டதுகளை தங்களது `ஞான திருஷ்டி’ கொண்டு புட்டுப்புட்டு வைக்கிறார்கள். கலை உலகில் எம். ஆர். ராதா மாதிரி ஒருவர் கூட இன்று இல்லையே என்பதை நினைத்து ஏங்க வேண்டியிருக்கிறது. நடக்கிற பிரச்சாரம் எல்லாம் போதாதென்று, ஜெயா டிவியில் `எங்கே பிராமணன்’ தொடரில் துக்ளக் ஆசிரியர் சோ விசேஷ கவனம் எடுத்துக்கொண்டு ஜாதிய, மதப்பழமைவாதக் கருத்துக்களையும் மூடநம்பிக்கைகளையும் தன்னுடைய வாதத் திறமையால் நிலைநிறுத்தக் கடுமையாக முயன்று கொண்டிருக்கிறார்.
சாமர்த்தியமான வாதங்களினால் அறிவியல் மனோபாவம் வளருவதைத் தடுத்து நிறுத்திவிட முடியாது. காலத்தைப் பின்னோக்கி இழுத்த இப்படிப்பட்ட`அறிவுஜீவிகளினால்’ அல்ல, அவர்களை மீறியே உலகம் இவ்வளவு முன்னேறி வந்திருக்கிறது என்பது மட்டும் நிச்சயம்.
நன்றி: பேராசிரியர் கே. ராஜு
3 comments:
மிக நல்ல கட்டுரை. மத வியாதிகள் எப்போதும் இப்படித்தான், (எங்கள்) மதம் அறிவியல் மதம் என்பார்கள்.
இன்னும் கண்டுபிடிக்க முடியாத அறிவியல் தகவல் எவ்வளவோ இருக்கிறது, அதையெல்லாம் எந்த மதாவாதியும் கண்டுபிடித்துச் சொல்லக் காணும்
மதம் என்பது மனிதனை சிந்திக்க வைக்காமல் தடுப்பதில் பெரும் பங்காற்றுகிறது . கடவுளை மறந்து மனிதனை நினைக்குக்ம் காலம் வந்தால் மட்டுமே அறிவியல் உண்மைகள் நம்பப்படும்
//பரிணாமக் கொள்கையின் மீது பள்ளிகள் அவநம்பிக்கை கொள்ளச் செய்யவும் படைப்புக் கொள்கையும் `அறிவியல்’ சார்ந்ததே என போதிக்கச் செய்யவும் பல புதிய கற்பனை வளம் மிகுந்த சட்டங்களை அவை கொண்டு வந்து விட்டன ! //
படைப்பு கொள்கைக்கு வலு சேர்க்க பல்லாயிரம் கோடி செலவு செய்து Theory of Intelligent Design என்று ஒன்றை உருவாக்கி அதை கொண்டு பரிணாமம் கொள்கையை அழிக்க முயல்கின்றனர்
Post a Comment