Monday, December 15, 2008

இயற்கை வேளாண்மையின் தந்தை

உலகம் முழுவதும் உள்ள இயற்கை விவசாயிகளின் ஆதர்ச புருஷர் மசனாபு புகோகா. 95 வயதில் கடந்த மாதம் 16ம் தேதி காலமானார்.

நவீன வேளாண்மையின் மோசமான பின்விளைவுகளுக்கு மாற்றாகவும், அதிக பலன் தருவதாகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பதாகவும் இயற்கை வேளாண்மை திகழும் என்பதை பெரிய அளவில் நிரூபித்துக் காட்டியவர் புகோகா. அவர் பரவலாக்கிய இயற்கை வேளாண்மையை சிறு விவசாயிகளும் நடைமுறைப்படுத்தி வெற்றி கண்டுள்ளனர்.

உணவு உற்பத்திதான் மனித நாகரிகம் வளர்வதற்கான அடிப்படையாக இருந்தது. உலகின் அனைத்து துறைகளிலும் தொழிற்புரட்சி மாற்றங்களை உருவாக்கிவிட்டது. தொழில்மயமாக்கம் காரணமாக உலகம் முழுவதும் நவீன வேளாண்மை பரவிவிட்டது. பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள், வேதி உரங்கள் கொட்டப்படும் ஒரு துறையாக வேளாண்மை மாறி நூறாண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்த உயர் தொழில்நுட்ப வேளாண்மை லட்சக்கணக்கான மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்கிறது என்பது உண்மைதான். ஆனால் ஊட்டசத்து குறைவு, உணவு சார்ந்த பல்வேறு நோய்கள், உடல்நல பாதிப்புகள் என்று அதன் மோசமான பாகத்தை தற்போது அனுபவித்து வருகிறோம்.

‘மௌன வசந்தம்‘ என்ற புத்தகம் மூலம் ரேச்சல் கார்சன் என்ற பெண் சுற்றுச்சூழல் நிபுணர் மேற்கண்ட விஷயங்களை உலகின் கவனத்துக்குக் கொண்டு வந்தார். சரி, அப்படியானால் நவீன வேளாண்மைக்கு மாற்று என்ன?

இயற்கை வேளாண்மைதான். இயற்கை வேளாண்மையில் பெரும் புரட்சி நிகழ்த்தியவர் ஜப்பான் இயற்கை வேளாண் அறிஞரான மசனாபு புகோகா.

தாவர நோய்கள் தொடர்பாக பயிற்சி பெற்றிருந்த புகோகா, தொடக்க காலத்தில் யோகோஹாமா சுங்கத் துறையில் தாவர கண்காணிப்பாளராகச் செயல்பட்டார். மற்றொருபுறம், சுயமாக அறிவியல் ஆராய்ச்சியை மேற்கொண்டு வந்தார். ஆராய்ச்சியின் ஒரு கட்டத்தில் ‘இயற்கையை புரிந்து கொள்வது மனித அறிவின் எல்லைக்கு அப்பாற்பட்டது’ என்று முடிவுக்கு வந்தார்.

அவர் வாழ்க்கைய தலைகீழாக மாற்றிப்போடும் வகையில் 25 வயதில் புதிய பார்வையைப் பெற்றார். வேலையைத் துறந்தார். வீட்டை விட்டு வெளியேறி தந்தையின் ஆரஞ்சு தோட்டத்துக்குப் போனார். ஜப்பானின் தெற்கு தீவான ஷிகோகுவில் அயோ என்ற ஊரில் அந்த தோட்டம் அமைந்திருந்தது. அங்கு ஓர் எளிமையான விவசாயியாக 70 ஆண்டுகளுக்கு மேல் உழைத்துள்ளார். இந்தக் காலம் முழுவதும் பயிர்களை வளர்க்க அவர் எந்த வகையிலும் மெனக்கெடவில்லை என்பதுதான் நமது சிந்தனைக்குரிய விஷயம்.

‘’எதையும் சரியாக உணர்ந்துவிட்டால், மிகக் குறைவான வேளாண் நடைமுறைகளே தேவைப்படும். நவீன வேளாண்மை மூலம் இயற்கையின் சுய சமநிலைப்படுத்தும் நடைமுறைகளை தொந்தரவு செய்வது பலவீனமான, வேதிப்பொருட்கள சார்ந்த பயிர்களையே உருவாக்கும். மேலும் இது நிலம், நீர், காற்று என அனைத்து இயற்கை வளங்களையும் மாசுபடுத்தும்.’’ என்று கடுமையாக எச்சரித்தார்.

புகோகா தனது வயல்களை உழுததில்லை, களை பிடுங்கியதில்லை, களக்கொல்லி அடித்ததும் இல்லை. அவர் வரிசையாக வித்தைகளை நடவில்லை, மாறாக நிலத்தில் ஆங்காங்கு தூவினார். இயந்திரங்கள், பூச்சிக்கொல்லிகள், வேதி உரங்கள் அல்ல கலப்பு உரம் எதையும் வயலில் இடவில்லை. மாறாக தன் அரிசி மற்றும் பார்லி வயல்களில் வைக்கோல்களைத் தூவினார்.

புகோகாவின் நெல் மற்றும் பார்லி வயல்களில் வளர்ந்த வலிமையான பயிர்கள் தீவனப்புல், பூச்சிகள், பறவகள், சிறு விலங்குகள் என்று மற்ற உயிரினங்களுடன் வாழிடத்தை பகிர்ந்து கொண்டன. அவை வெறுமனே ஒரே பயிரைக் கொண்ட பச்சைப் பாலைவனமாக இல்ல. அவரை பழத்தோட்டங்களில் ஆரஞ்சு மரங்களின் கீழே புற்கள், மூலிகைகள், காய்கறிகள் போன்றவை கூட்டாகவும் இயற்கையாகவும் வளர்ந்தன.

புகோகா வலியுறுத்திய ‘எதையும் செய்யாமல் இருக்கும்’ வேளாண்மை, நவீன வேளாண் தொழில்நுணுக்கங்களுக்கு நேர் எதிராக இருந்தது. அத்தனைக்குப் பிறகும் அவரை வயல்களில் பயிர்களும், பழங்களும் உயர் தொழில்நுட்ப பண்ணகளைவிட செழிப்பாக வளர்ந்தன, அதிக மகசூல் கிடைத்தது. பயிர்கள், பழமரங்கள் மட்டுமின்றி சத்தான காய்கறிகளும் கிடைத்தன.

ஒரு காட்டில் மரங்கள், செடிகொடிகள், புதர்கள், மூலிகைகள் கூட்டாக செழித்து வளருவதைப் போல புகோகாவின் வயல்களில் அனைத்து வகை தாவரங்களும் செழித்தோங்கி வளர்ந்தன. புகோகாவின் அடிப்படை கொள்கையே இயற்கையை சீர்திருத்தி பலன்களை சுரண்டுவது அல்ல, இயற்கைக்கு இசைவாகச் செயல்பட்டு அதிக பலன்கள பெறுவதான்.

அவரை வேளாண் முறை மூலம் விவசாயிகளுக்கு பெருமளவு ஓய்வு நேரம் கிடக்கிறது. மூலப்பொருள்கள், முதலீடு அதிகம் தேவையில்லை. சுற்றுச்சூழல் மாசுபடுத்துவதில்லை. இதெற்கெல்லாம் மேலாக இந்த முறை லாபம் ஈட்டுவதாகவும் உள்ளது. சுகாதார அக்கறை கொண்ட 21ம் நூற்றாண்டின் நுகர்வோருக்கு புகோகாவின் வேதிநச்சு கலக்காத உணவு பெரும் மதிப்புமிக்கது என்பதில் கருத்து வேறுபாட்டுக்கு இடமில்லை.

1978ம் ஆண்டு அவரை ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’ புத்தகத்தின் ஆங்கிலப் பதிப்பு வெளியானபோது அவரை வேளாண் முறை தொடர்பாக உலகம் முழுவதும் ஆர்வம் கிளர்ந்தெழுந்தது. அதிகம் தொழில்நுட்பத்தைச் சாராத, இயற்கைக்கு இசைவானது அந்த வேளாண் முறை புகழ்பெற்றதாக கை மாறியது. மாணவர்கள், விஞ்ஞானிகள், வேளாண் பணியார்கள் அந்த முறையால் உந்தப்பட்டு பின்பற்ற ஆரம்பித்தனர். வடஅமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்க நாடுகளில் புகோகா தனது வேளாண் முறையை கற்றுக் கொடுத்துள்ளார். 1988ம் ஆண்டு சமூக சேவைக்கான ராமன் மகசேசே விருதை அவர் பெற்றார்.

தமிழகத்தில் இயற்கை வேளாண்மை பரவலாக ஆரம்பித்த காலத்தில் அவரை வேளாண் முறையைப் பற்றி பரவலாக பேசப்பட்டது. ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’ புத்தகம் ‘பூவுலகின் நண்பர்கள்’ இயக்கத்தினரால் 1991ம் ஆண்டே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தற்போது இந்திய அரசின் வேளாண்மைத் துறைகூட முழுமையான நவீன வேதி வேளாண்மைக்கு பதிலாக, குறிப்பிடத்தக்க அளவு இயற்கை வேளாண் நடமுறைகளை ஊக்குவித்து வருகிறது.

‘இயற்கை அனைத்தையும் வாரிவழங்கும் தாய் போன்றது. அதேநேரம் எளிதில் சிதைந்துவிடும் வகையில் மென்மையானதும்கூட. அரசுகள் அக்கறையுடன் செயல்பட்டு நில வளத்தை ஆரோக்கியமாகப் பராமரித்தால், பதிலுக்கு அதுவும் மனிதத் தேவைகளை ஆரோக்கியமாக பூர்த்தி செய்யும். விவசாயத்தின் வசந்தகாலமாக இயற்கை வேளாண்மை எப்பொழுதும் திகழும்,’’ என்ற புகோகாவின் வார்த்தைகள் இன்னொரு ‘பசுமைப்புரட்சி’ வந்தாலும் மாறாதவை.

No comments: