அடிக்கடி புதினாக்கீரையைச் சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள இரத்தம் சுத்தமாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகும்.
எக்காரணத்தினாலாவது வயிற்றுப் போக்கு ஏற்பட்டிருந்தால், அந்தச் சமயம் புதினாக்கீரைத் துகையலைச் சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு நின்றுவிடும்.
சிறு குழந்தைகளின் வயிற்றுப் போக்கு, வாந்தி குணமாக . . .
சிறு குழந்தைகளுக்கு ஆகார விகற்பத்தின் காரணமாக வயிற்றுப் போக்கு வாந்தி ஏற்படுவதுண்டு. இதற்குப் பல வகையான மருந்துகள் உண்டு என்றாலும் புதினாக்கீரைக் கஷாயம் கைகண்ட மருந்தாக இருக்கிறது. புதினாக்கீரை இலைகளை மட்டும் ஆய்ந்து எடுத்து ஒரு கைப்பிடியளவு அம்மியில் வைத்து லேசாக நைத்து, அதை ஒரு சட்டியில் போட்டு அடுப்பில் வைத்து, நன்றாக வதக்கி அதில் ஆழாக்களவு தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். அரை ஆழாக்களவாகச் சுண்டியபின் சட்டியை இறக்கி வடிகட்டி, அதில் வேளைக்குச் சங்களவு வீதம் காலை மாலையாக மூன்று வேளை கொடுத்தால் போதும், வயிற்றுப் போக்கு, வாந்தி நின்று விடும்.
கர்ப்பஸ்திரீகளுக்கு ஏற்படும் வாந்தியை நிறுத்த
கருத்தரித்த இரண்டாவது மாதம் முதல் கருத்தரித்திருப்பதை மெய்ப்பிக்க, காலை வேளையில் வாந்தி உண்டாகும். சில சமயம் ஆகாரம் உண்டவுடன் வாந்தி வரும். தலைச் சுற்றல், சோம்பல், அரோசிகம் ஏற்படும். இதை மசக்கை வாந்தி என்று கூறுவார்கள். தினசரி இப்படி இருக்கும். 2, 3 வாரங்களுக்குப் பின் இது தானே மாறிவிடும். சில பெண்களுக்கு பிரசவிக்கும் வரை வாந்தி சாயந்திர வேளைகளில் ஏற்படும். இந்த மாதிரி வாந்தியை நிறுத்த புதினா நன்கு பயன்படுகிறது.
புதினாக்கீரையைக் கொண்டு வந்து ஆய்ந்து எடுத்து, உரலில் போட்டு இடித்து அதை எடுத்துச் சாறு பிழிய வேண்டும். பிழிந்த சாறு இரண்டு ஆழாக்களவு எடுத்து அதைத் துணியில் வடிகட்டி ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு, களிம்பு ஏறாத ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் இந்தச் சாற்றைவிட்டு அதில், ஒரு சீசா அளவு அதாவது சின்னபடிக்கு ஒரு படியளவு சீமைக் காடியை விட்டு நன்றாகக் கலந்து ஒரு மணி நேரம் வைத்திருந்து, பிறகு அத்துடன் அரை கிலோ பழுப்புச் சர்க்கரைச் சேர்த்து நன்றாகக் கரைத்து, இந்தச் சாற்றை வேறு ஒரு பாத்திரத்தின் மேல் துணி வேடு கட்டி அதன் மூலம் வடிகட்டி எடுத்து, முதல் பாத்திரத்தைக் கழுவி அதில் இதைவிட்டு, அடுப்பில் வைத்து, நன்றாகக் காய்ச்ச வேண்டும். இந்த சமயம் மருந்து சர்பத் போல பாகுபதமாகும். நன்றாக ஆறியபின் அதை ஒரு சுத்தமான சீசாவில் விட்டு பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். வாந்தி வரும் சமயம் இந்தப் பாகில் அரைத் தேக்கரண்டியளவு எடுத்து உள்ளங்கையில் விட்டு, நாவால் நக்கி அதை வாயில் வைத்துச் சுவைத்து விழுங்க வேண்டும். இந்த விதமாக ஒரு நாளைக்கு எத்தனை தரம் வேண்டுமானாலும் சுவைக்கலாம். எந்த விதமான கெடுதலும் ஏற்படாது.
ரொட்டி, ஆப்பம், தோசை, இட்டிலி இவைகளை இந்தப் பாகில் தொட்டுத் தின்னலாம். ருசியாக இருக்கும். காலை வேளையில் இவ்விதம் சாப்பிடுவது நல்லது.
புதினாக்கீரையை இரண்டு அவுன்ஸ் எடுத்து, ஆறு அவுன்ஸ் நீரில் போட்டு, மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு நீரை தெளிய வைத்து குடித்து வரவும். இக்குடிநீரை அருந்துவதால் வாந்தி, வாயுவு கோளாறுகள், வயிற்றுப் போக்கு, பொருமல் போன்ற நோய்கள் குணமாகும்.
புதினாக்கீரையைத் துவையலாகவோ அல்லது அவித்து பிற உணவுகளுடன் சேர்ந்து சாப்பிட்டு வந்தால் பெண்களின் மாதவிலக்கு கோளாறுகள் சீர்படும். புதினாக்கீரையை கஷாயமாகவோ அல்லது சூப்பாகவோ தயாரித்து அருந்திவரின் இருதய சம்பந்தமான நோய்கள் நிவாரணம் பெறும். தொண்டைப்புண், மூச்சுத்திணறல் போன்ற கோளாறுகளுக்கு புதினாக்கீரையை நன்கு அரைத்து கழுத்தில் வலியுள்ள பகுதியில் பற்றுப் போட்டு வர குணம் தெரியும்.
புதினாக்கீரையைக் கொண்டு ஒரு அருமையான பற்பொடி கூட தயார் செய்யலாம். இந்த புதினா பற்பொடியைக் கொண்டு தினசரி பல் துலக்கி வந்தால் பல் சம்பந்தமான எல்லா வியாதிகளும் குணமாகும். கஷ்டத்தைப் பாராமல் ஒவ்வொருவரும் புதினா பற்பொடி தயாரித்து பல்துலக்கி வந்தால், பற்கள் முத்தைப் போல வெண்மையாகவும், பிரகாசமாகவும் தோன்றும். பல் சம்பந்தமாக எந்த வியாதியும் வராது. இதைத் தயாரிப்பதும் சுலபம் தான்.
புதினாக்கீரையை எடுத்து, சுத்தம் பார்த்து, அதை ஒரு பெரிய தட்டு அல்லது முறத்தில் போட்டு வெய்யிலில் நன்றாகக் காயவைக்க வேண்டும். புதினா காய்ந்து சருகான பின் உரலில் போட்டு இடிக்கவேடும். இந்த சமயம் இலை இருக்கும் அளவில் எட்டில் ஒரு பங்கு கறி உப்பையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இடித்துச் சல்லடையில் சலித்து, கண்ணாடி அல்லது மங்கு ஜாடியில் போட்டு வைத்துக் கொண்டு உபயோகப்படுத்த வேண்டும். தகர டப்பா கூடாது.